Last Updated : 03 Mar, 2016 11:52 AM

 

Published : 03 Mar 2016 11:52 AM
Last Updated : 03 Mar 2016 11:52 AM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: பூனையிடம் பேசிய இறைநேசர் - பல்லக்கு அப்பா

தொண்டி நகருக்கு ஒரு பல்லக்கில் சென்றுகொண்டிருந்தார் ஒரு ஞானப் பெருமகன். அவரைப் பார்த்து ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் ஊரில் அடக்கமாகியிருக்கும் அவருடைய பாட்டனார் அபூபக்கர் வலியுல்லாவை தரிசிக்கவே கீழக்கரையிலிருந்து பல்லக்கில் வந்தார். அதனால் அவரை வரவேற்று பல்லக்கு வலியுல்லா என்று போற்றினர்.

அந்தப் பெருமகன் தர்காவில் அமர்ந்தபடி அரபு மொழியில் பாட்டனாரின் புகழைப் பாடினார். கவிதை ஊற்றெடுத்துப் பெருகியது. தொண்டி மக்கள் அவருடைய பாடலைக் கேட்டு நெகிழ்ந்தனர்.

பல்லக்கு வலியுல்லாவின் இயற்பெயர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா. அவர் ஹிஜ்ரி 1268 ரபியுல்அவ்வல் மாதம் பிறை 12-ல் நுார் முகம்மது- பாத்திமா தம்பதியின் அன்புச் செல்வராகப் பிறந்தார். பல்லக்குத் தம்பி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். அவர் மூன்று வயது பாலகராக இருந்தபோதே தந்தை மறைந்துவிட்டார். எனினும் தங்குதடையின்றி கல்வி பயின்றார். பிறகு கீழக்கரை இறைநேசர் மாப்பிள்ளை லெப்பை ஆலிமிடம் தீட்சை பெற்று ஆன்மிகப் பணிகளி்ல் ஈடுபட்டார்.

பல்லக்குத் தம்பி தம்முடன் படித்த கல்வத்து நாயகத்துடன் இலங்கைக்குச் சென்று வந்தார். கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று அற்புதங்களை நிகழ்த்தினார். 23 வயதில் ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஞானநெறியில் ஈடுபட்டிருந்தாலும் இல்லற வாழ்வைப் புறக்கணிக்கவில்லை. கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்திலேயே ஆயிஷா அம்மையாரை மணம் புரிந்தார். சில ஆண்டுகளில் மனைவி காலமானதால் அவருடைய தங்கை சேமு நாச்சியார் எனும் ஷைமாவைத் துணைவியாக்கிக் கொண்டார்.

பூனையிடம் பேசிய இறைநேசர்

இறைவனின் பேரன்பில் மூழ்கியவராகப் பல்லக்கு வலியுல்லா இருந்ததால் உயிரினங்களின் பேச்சைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் புறாவைச் சுட்டிக்காட்டி, அது தம்மை ‘காத்தமுல் வலி’ என்று சிறப்பித்துச் சொல்வதாக மற்றவர்களிடம் கூறினார். அவ்வாறே ஒரு வண்டைச் சுட்டிக்காட்டி, அது தம்மை ‘சையதுல் ஆலிம்’ என மொழிவதாகத் தெரிவித்தார்.

இன்னொரு சமயம் தமது உடம்பில் அமர்ந்திருந்த ஈக்களைக் காட்டி அவை தம்மை இறைவனின் நல்லடியார்-மூமின்- என்றும், இறைநேசர் என்றும் சொல்கின்றன என்றார்.

பல்லக்கு அப்பா ஒருமுறை முத்துப்பேட்டைக்குச் சென்றிருந்தபோது ஒருவரின் இல்லத்தில் புனுகுப் பூனையைக் கண்டார். அது கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. அதை சற்றுநேரம் பார்த்துவிட்டு, அது இங்கு பிடித்து வரப்பட்ட விதத்தை தம்மிடம் கூறுவதாகச் சொன்னார்.அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்டபோது, எந்த வனப்பகுதியில் யாரால் அது பிடித்துவரப்பட்டது என்பதை எடுத்துச் சொன்னார்.விசாரித்துப் பார்த்ததும் நடந்தது அதுதான் என்பது தெளிவாயிற்று.

மாயமாக மறைந்த மகான்

ஒரு முறை கீழக்கரை ஓடைக்கரை பள்ளிவாசலில் மவ்லுாது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது பல்லக்கு அப்பா இடையிடையே குறுக்கிட்டு என்னென்ன ஓத வேணடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க முடியாது என்ற எண்ணத்தில், அவரைச் சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அருகிலிருந்த அறையில் பூட்டி வைத்துவிட்டு வந்தார்கள்.

மவ்லூது ஓதி முடிந்ததும் வந்திருந்தவர்களுக்கு வழங்கப்படும் தப்ரூக் உபசாரப் பொருள்கள் அந்த அறையில்தான் வைக்கப் பட்டிருந்தன. ஏற்பாட்டாளர்கள் அறையைத் திறந்தார்கள். தப்ரூக் பொட்டலங்கள் இருந்தன, ஆனால் அடைக்கப்பட்டிருந்த பல்லக்கு வலியுல்லாவைக் காணவில்லை. தெருவில் அவர் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.

பழித்தவரைத் திருத்தினார்

கீழக்கரை பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பல்லக்கு அப்பா அங்கசுத்தி செய்துகொண்டிருந்தார். அப்பொழுது நீர்த் தடத்திலிருந்து சில முறை தண்ணீரைக் கைகளால் அள்ளி வீசினார். அதைப் பார்த்த சிலர் காரணம் கேட்டார்கள்.

“தொண்டியில் ஒரு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் சில வீடுகள் பாதிக்கபட்டுள்ளன. அந்தத் தீயை அணைப்பதற்காவே இவ்வாறு செய்தேன். தீ இப்போது அணைந்துவிட்டது” என்று கூறினார். அதை நம்பாத சிலர், உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் விசாரித்துவர ஏற்பாடு செய்தார்கள். தொண்டியில் தீ விபத்து ஏற்பட்டு சற்றுநேரத்தில் தானாகவே அது அணைந்து விட்டது என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

பல்லக்கு அப்பா தஞ்சை மாவட்டத்தில் இறைநேசர்கள் உறையும் ஊர்களுக்கு அவ்வப்போது செல்வார். அதிராம்பட்டினத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அவரைப் பற்றி ஒருவர் இகழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். ஞானதிருஷ்டியினால் அதை உணர்ந்து கொண்டார் அப்பா. அந்த நபர் ஒரு நாள் நடைபெற்ற கூட்டத்தில் நின்றிருந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட அப்பா அருகில் வரும்படி அழைத்தார். இதை எதிர்பார்த்திராத அவர் பயந்துகொண்டே பக்கத்தில்வந்து நின்றார்.

“மனம்போன போக்கில் பேசிக்கொண்டு திரியாதே! நாவை அடக்கிப்பேசி நல்லவனாக மாறு!” என்றார். ஞானியான அவரை பழித்துரைத்து வந்ததற்காக அந்த நபர் வருந்தித் திருந்தினார்.

தான் உயிர் துறப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன்னரே தமது முடிவு நேரத்தை அறிவித்தார். “ பல்லக்குத் தம்பி மறையப்போகிறார். ஏராளமான அன்பர்கள் வெளியூர்களிலிருந்து வருவார்கள்!” என்றார். அதன்படி ஹிஜ்ரி 1360-ம் ஆண்டு துல்காயிதா மாதம் இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை உலகைத் துறந்தார். அன்று வழக்கம்போல் காலை உணவருந்திய பிறகு ஜும்மா தொழுகை நேரத்தில் மறைந்தார். கீழக்கரை புது பள்ளிவாசலை அடுத்துள்ள தோட்டத்தில் பல்லக்கு அப்பா நல்லடக்கம் செய்யப்பட்டார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x