Last Updated : 17 Mar, 2016 11:01 AM

 

Published : 17 Mar 2016 11:01 AM
Last Updated : 17 Mar 2016 11:01 AM

நோய் தீர்க்கும் தீர்த்தம்

பங்குனி உத்திர தீர்த்தவாரி: மார்ச் 23

எல்லாம் வல்ல சிவபெருமான் மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருளும் வைத்தியநாதனாக அருள்பாலிக்கும் தலம் வைத்தீஸ்வரன் கோயிலாகும். ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலம் இது. இத்தலத்தில் புள் (ஜடாயு) இருக்கு (ரிக்வேதம்) வேள் (முருகன்) ஊர் (சூரியன்) ஆகியோர் வந்து வழிபட்டனர். அதனால் புள்ளிருக்கு வேளூர் என்ற பெயர் உண்டாயிற்று. பல சிறப்புகள் கொண்ட இத்தலம் கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் மார்க்கத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

செவ்வாய்க்கு அருளிய சிவன்

பூமிக்குக் காரகனாகிய அங்காரகன் ஒரு முனிவரின் சாபத்தைப் பெற்று கடும் நோயினால் துன்புற்றான். நோய் தீர வேண்டி அம்முனிவரிடமே மன்றாடினான். அவர் வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அவனும் செய்தான். ஒரு நாள் ஈசனும் அம்பிகையும் தைல பாத்திரம் தாங்கி வந்து வில்வ இலையில் சந்தனக்குழம்பாலான மருந்து உருண்டையைத்தர அவனது நோய் நீங்கியது. செவ்வாய் தோஷத்தை நீக்குவதோடு தீரா நோய்களையும் தீர்ப்பவர் இத்தலப் பெருமான். சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவன், பலவகை நோய்களைத் தீர்க்க கைலாயத்திலிருந்து இங்கு வந்தார் என்று புராணம் சொல்கிறது. இக்கோவில் கல்வெட்டு இறைவனைத் “தீராவினை தீர்த்தருளிய தம்பிரானார்” என்றும் இறைவியைத் “திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார்” என்றும் குறிப்பிடுகிறது.

முருகனுக்கு முதலிடம்

முருகப்பெருமான் இங்குப் பேரழகுடன் முத்துக்குமார சுவாமி என்ற திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரர், ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்’ என்ற நூலைப் படைத்துள்ளார். இந்தத் தலத்தில் நடைபெறும் அர்த்தசாமபூஜை சிறப்பு வாய்ந்தது. முருகனுக்குப் புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம் முதலியவை சாத்தி தீபாராதனை செய்கிறார்கள். இதற்குப் “புழுகாப்பு” என்று பெயர். முருகனைப் பிள்ளைத்தமிழ் பாடி தாலாட்டி பள்ளி கொள்ள செய்த பின்னரே சுவாமி அம்பாளுக்கு சாமபூஜை நடைபெறுகிறது.

அழகிய மண்டபங்கள்

விண்ணைத் தொடுகின்ற ராஜகோபுரமும் அதில் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட பல சிலைகளும் நம் கண்களைக் கவர்கின்றன. கோயில் உள்ளே சென்றால் முதலில் பேரழகுமிக்க அம்பாளையும் அடுத்து சுவாமியையும், முருகனையும் தரிசிக்கலாம். உள்பிரகாரத்தில் நவக்கிரகர்கள் ஒரே நேர் வரிசையில் அருள்கிறார்கள். அடுத்து ஜடாயுகுண்டமும், தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு மேலே சட்டைநாதர் திருமேனியும் அமையப் பெற்றுள்ளது. பெரிய அளவிலான வெளிப்பிரகாரமும் அங்கு அழகிய பெரிய பல மண்டபங்களும் அமைந்துள்ளன.

ஜடாயு வழிபட்ட தலம்

ராமன், ஜடாயுவின் உடலை இத்தலத்திலேயே தகனம் செய்தான். அந்த இடத்திற்கு ஜடாயுகுண்டம் என்று பெயர். வீரசேனன் என்ற அரசனின் புதல்வனுக்கு சயரோகநோய் பற்றியது. அந்நோய் நீங்க இத்தலத்திற்கு வந்து வழிபட்டான். ஜடாயுகுண்டத்துக்கு அதிரசம், வடை நிவேதனம் செய்து குண்டத்தில் உள்ள விபூதியைத் தானும் புதல்வனும் அணிந்து கொள்ள நோய் நீங்கியது என்று கோவில் புராணம் சொல்கிறது.

அற்புதங்கள் நிறைந்த தீர்த்தம்

திருக்கோயிலில் 18 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது சித்தாமிர்த தீர்த்தம். சித்தர்கள் வந்து சிவனின் திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகம் செய்ய அது வழிந்து ஒன்று சேர்ந்த இடமே இத்தீர்த்தம். ஒரு சமயம் சதானந்தர் எனும் முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி தியானம் செய்தார். அப்போது பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர் மீது பாய்ந்து தியானத்தைக் கலைத்தது. கோபம் கொண்ட முனிவர், “இக்குளத்தில் என்றும் பாம்பும் தவளையும் இல்லாது ஒழியக்கடவன” என்று சாபமிட்டார். இன்றும் இதனால் இங்கு பாம்பும் தவளையும் இல்லை.

பங்குனிப் பெருவிழாவும் நரி ஓட்டமும்

இத்தலத்தில் மார்ச் 14 முதல் 23 வரை பங்குனிப் பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. முருகப் பெருமான் குழந்தையே வடிவாக அருள்பாலிப்பதால் அவரைப் புன்னகைச் செய்வதற்காக தினமும் வீதியுலாவின் போது நரி ஓட்டம் என்ற நிகழ்வு நடத்தப் பெறுகிறது. முருகக் கடவுள் யானையை விரட்டுவதும், யானை அவரை விரட்டுவதும் ஆகிய நரி ஓட்டம் பிரபலமாக நடைப்பெறுகிறது. இறைவன் சிறுகுழந்தையைச் சிரிக்க வைக்க நரிமிரட்டல் செய்வது போல இங்கு முருகனுக்காக நரிஓட்டம் நடத்தப்பெறுவதாக சொல்கிறார்கள். பங்குனிப் பெருவிழாவின் முக்கிய திருவிழாவாக உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் தீர்த்தவாரிப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x