Last Updated : 04 Feb, 2016 11:12 AM

 

Published : 04 Feb 2016 11:12 AM
Last Updated : 04 Feb 2016 11:12 AM

ஓஷோ சொன்ன கதை: குழந்தையும் மல்யுத்த வீரனும்

உளவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் சில பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார். அதுதொடர்பாக செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் செய்தார். “எனது குழந்தையுடன் யாராவது ஒரு நாள் பொழுதைக் கழிக்க வேண்டும். அவன் என்னவெல்லாம் செய்கிறானோ அதைத் திரும்பச் செய்ய வேண்டும். அவர்கள் கேட்கும் பணத்தை நான் தரத் தயார்” என்பதுதான் அந்த விளம்பர வாசகம்.

ஒரு இளம் மல்யுத்த வீரன் அவர் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து, ஆராய்ச்சியாளரைத் தொடர்புகொண்டான். அவரது குழந்தையுடன் ஒரு நாளைக் கழிக்கத் தயார் என்றான்.

உளவியல் ஆராய்ச்சியாளர் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்தார். ஆனால் மதியச் சாப்பாடு வேளையிலேயே மல்யுத்த வீரன், குழந்தையின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து படுத்துவிட்டான். அவனுக்கு ஏற்கனவே இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன.

அந்தக் குழந்தை செய்யும் எல்லா வற்றையும் அவன் செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை. குழந்தைக்கோ உற்சாகம். அவன் எந்த அவசியமுமின்றி குதித்தான். மல்யுத்த வீரனும் குதிக்க வேண்டியிருந்தது. குழந்தை மரத்தில் ஏறினான். மரத்திலிருந்து விழுந்தான். மல்யுத்த வீரனும் அதைத் தொடர வேண்டியிருந்தது. இப்படியாக எல்லாம் தொடர்ந்தன. குழந்தை, உணவை மறந்தே போனது. எல்லாவற்றையும் மறந்தது. மல்யுத்த வீரனின் நிலையைப் பார்த்து அதற்கு மேலும் கொண்டாட்டம்.

மல்யுத்த வீரனால் முடியவில்லை. அவன் ஆராய்ச்சியாளரிடம் வந்து, “உங்கள் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இன்று முடிவதற்குள் நான் இறந்தே போய்விடுவேன். மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலைக்கு என் உடல் வந்துவிட்டது. இந்தக் குழந்தை மிகவும் அபாயகரமானது. இந்தப் பரிசோதனையை தயவுசெய்து மற்ற யாரிடமும் தயவுசெய்து செய்யாதீர்கள்” என்று வேண்டுகோளும் விடுத்தான்.

ஒவ்வொரு குழந்தையிடமும் அபரிமிதமான ஆற்றல் உள்ளது. அதனிடம் எந்தப் பதற்றமும் இல்லை. நீங்கள் ஒரு குழந்தை உறங்குவதைப் பார்த்துள்ளீர்களா? கை சூப்பிக்கொண்டே அழகிய கனவுகளைக் காணுவதைக் கண்டிருக்கிறீர்களா? அந்தக் குழந்தையின் மொத்த உடலும் எல்லாவற்றையும் கடந்து செல்ல விடும் ஊடகமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x