Last Updated : 18 Feb, 2016 12:12 PM

 

Published : 18 Feb 2016 12:12 PM
Last Updated : 18 Feb 2016 12:12 PM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: சீனி அப்பா - குணம் நாடும் மகான்

சுந்தரமுடையான் ராமநாதபுர மாவட்டம் உச்சிப்புளிக்கு அருகிலுள்ள கிராமத்திலுள்ள அந்தக் கடற்கரையில் அலைகள் இல்லை. அமைதி கொஞ்சும் ஏரி போல் நீலக்கடல் விரிந்து கிடக்கிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மரங்கள் நிழல் விரித்திருக்கின்றன. மன அமைதியை நாடி மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கலாம். இங்குதான் அமைந்திருக்கிறது சீனி அப்பா தர்கா.

ராமநாதபுர மாவட்ட இறைநேசர்களின் உறைவிடங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது இது. மண்டபத்திற்கு மேற்கே சுமார் பத்து மைல் தூரத்தில் தர்கா அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மண் சாலையைக் கடந்து வர வேண்டும். வந்து சேர்வதற்கு சிலருக்குக் களைப்பாகவும் தோன்றலாம். ஆனால்,தர்காவுக்கு வந்த பிறகு நிழலும் கடல் காற்றும் தரும் சுகத்தில் அலுப்பும் களைப்பும் அகன்றுவிடும். இந்த இடத்திற்குப் பெயர் மரைக்காயர்பட்டினம். பிரபலமான பாம்பன் கடல் பாலமும் அருகிலுள்ள மண்டபம் பகுதியில்தான் அமைந்துள்ளது.

ஹஜ்ரத் யாசீன் ஷஹீத் ரலி என்று சிறப்பிக்கப்படும் சீனி அப்பா, ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள இறைநேசர் சையது இப்ராகிம் அவர்களுடன் அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருப்பணிகளில் ஈடுபட்டார்.

சீனி அப்பாவின் செல்வாக்கு கொஞ்ச நஞ்சமல்ல. ஏர்வாடி தர்காவை தரிசிக்க வருபவர்கள் சீனி அப்பா தர்காவையும் தரிசித்து நல்லாசி பெறாமல் போவதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பலர் சீனி முகம்மது, சீனி வாப்பா என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவின் செல்வாக்கே இதற்குக் காரணம்.

தர்காவுக்கு அருகிலேயே ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. உள்ளூர் மக்களும், தர்காவுக்கு வரும் வெளியூர் அன்பர்களும் அங்கு தொழுகிறார்கள். தர்காவுக்கு வருபவர்கள் தங்கிச் செல்வதற்கு இடவசதியும் உள்ளது.

அப்பா நிகழ்த்திய அற்புதங்கள்

யாசீன் எனும் இயற்பெயரைக் கொண்ட சீனி அப்பா ஹிஜ்ரி 582-ல் (கிபி 1177) தமிழ்நாட்டுக்கு வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அவருடைய மற்றொரு பெயர் அப்துல் காதிர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் ஒரு போரில் உயிர் துறந்தார். சீனி அப்பாவைப் பற்றியும் மரைக்காயர் பட்டினத்தைப் பற்றியும் சரித்திர ஆசிரியர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் தமது நுாலில் எழுதியுள்ளார்.

கீழக்க ரை சையிது முகம்மது ஆலிம் புலவர் எழுதிய சீனி அப்பா பற்றிய கஸீதா முக்கியமான ஒன்று. தனது வயிற்று வலியைக் குணமாக்கியதால் நன்றி கூறி எழுதப்பட்ட கஸீதா அது. இறைநேசர் சீனி அப்பா பல அற்புதங்களை அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளார். நோயுற்றவர்கள் குணமடைவதற்காக இந்த தர்காவிற்கு வந்து தங்கிச் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x