Last Updated : 05 Nov, 2015 10:54 AM

 

Published : 05 Nov 2015 10:54 AM
Last Updated : 05 Nov 2015 10:54 AM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: மலைமேடு சிறிது மனமேடு பெரிது - தக்கலை தவஞானி பீர் முகம்மது அப்பா

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் தவஞானி பீர் முகம்மது. தக்கலையில் ஞானத் தவ வாழ்க்கை நடத்தி இப்பூவுலகிலிருந்து விடைபெற்ற மெய்ஞானியின் தர்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் செல்வராகப் பிறந்து முந்நுாறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ஞானச்செல்வர் பீர் முகம்மது. அவர் பிறந்த ஆண்டு தெளிவாக தெரியவில்லை. பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. கீழக்கரையில் அடக்கமாகியுள்ள இறைநேசர் சதக்கத்துல்லா அப்பா, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆகியோரின் சம காலத்தவர் பீர் முகம்மது அப்பா.

திருநெறி நீதம் நூலை ஹிஜ்ரி 1022-ஆம் ஆண்டில் தாம் இயற்றியதாகக் கூறியுள்ளார் பீர் முகம்மது அப்பா, பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோரையும் பிறந்த ஊரான தென்காசியையும் விட்டுப் பிரிந்து ஏறத்தாழ 95 ஆண்டு காலம் காடுகளிலும் மலைகளிலும் தவயோகத்தில் அப்பா ஈடுபட்டார். அக்காலத்திய திருவிதாங்கூர் அரசின் மலைப் பகுதிகளிலும் ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றார் என்று கூறப்படுகிறது.

பல்லாண்டு காலம் தவவாழ்வு நடத்திய அவரது பெயரை நினைவூட்டும் வகையிலேயே கேரள மாநிலத்தில் யானைமலையிலுள்ள ஊர் இன்றும் பீர்மேடு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. கேரளத்தில் அரசர்களும், எளிய மக்களும் இவரைக் கண்டு பல துன்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுள்ளனர். யானைமலைக் காட்டில் பதினைந்து ஆண்டுகள் பரமானந்த நிலையில் அப்பா ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த புலி,சிங்கம், யானைகள் அவருடன் அன்புறவு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கொச்சியை அப்போது ஆண்டுவந்த அரசர் மாறுவேடத்தில் அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து பீரப்பாவின் அறிவுரையைக் கேட்டுப் பின்னர் துறவியானதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. திருவிதாங்கூர் மன்னரும் பீரப்பாவின் அடிபணிந்து நின்று நல்லாசியைப் பெற்றுள்ளார்.

பீரப்பாவின் அர்ப்பணிப்பும் தனித்தன்மையும்

ஞானநெறியில் ஆழ்ந்திருந்த தக்கலை அப்பா இறைவழிபாட்டில் ஈடுபடுவதில்லை என்று சிலர் சந்தேகித்தனர். அவர்கள் கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று முறையிட்டனர். அதனால் அவரைப் பார்க்க வந்த சதக்கதுல்லா, பீரப்பாவின் ஆன்மிக உயர்நிலையைக் கண்டு வியந்து நெகிழ்ந்தார்.

“மலை மேடு சிறிது … எங்கள் மன மேடு பெரிது” என்ற தக்கலை பீரப்பாவின் பாடல் வரி அவற்றுக்கெல்லாம் அரிய எடுத்துக்காட்டு. சூஃபி ஞான நெறிக்கும், தமிழ்ச் சித்தர் மரபுக்கும் பாலமாக தக்கலை பீரப்பா கருதப்படுகிறார்.

வாழ்க்கையின் பிற்பகுதியை தக்கலையில் கழித்து அங்கேயே அடக்கமானார் பீர் அப்பா.

தமிழ்ப் புலமையும், அரபு மொழி ஆற்றலும், பிற மொழி அறிவும், தேர்ந்த பயிற்சியும் பெற்ற அவர், தொழுகையிலும் இறை வணக்கத்திலும் மக்களை ஈடுபடுத்தும் வண்ணம் எண்ணற்ற பாடல்களை இயற்றினார், பிஸ்மில் குறம் படைப்பில் இடம்பெறுள்ள ஒரு பாடல் அரிய உதாரணம்:

“தெளிவான தீன்குலத்தில் உள்ளவரே கேளும் தெவிட்டாமல் தொழுதுகொண்டு வணக்கம் செய்ய வேணும்”

தொழுகையின் உயர்வையும், அதை நிறைவேற்ற வேண்டிய முறையையும் அப்பா எடுத்துரைக்கும் சிறப்பு சிந்தைக்கு விருந்தாக அமைகிறது.

பீரப்பாவின் ஞான விருந்து

பீர் அப்பா 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருட்பாக்களை இயற்றியுள்ளார், ஞானப் பால், ஞானப் பூட்டு, ஞானப் புகழ்ச்சி, ஞான மணிமாலை, பிஸ்மில் குறம், ஞானக் குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, ஞான நடனம், ஞான முச்சுடர்ப் பதிகங்கள், ஞானத் திறவுகோல், ஞான சித்தி, ஞானக் கண், ஞான விகடச் சமர்த்து, ஞான உலக உருளை, ஞான மலைவளம், மெய்ஞ்ஞானக் களஞ்சியம், திருமெய்ஞ்ஞானச் சரநுால்,மெய்ஞ்ஞான அமிர்தக் கலை, திருநெறி நீதம், மஃரிபத்து மாலை, ஈடேற்ற மாலை,ரோசு மீசாக்கு மாலை, மிகுராசு வளம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

அவர் இயற்றிய ஞானரத்தினக் குறவஞ்சி, பதினெண் சித்தர்களின் தொகுப்பான பெரிய ஞானக்கோவையில் இடம்பெற்றுள்ளது, 66 கண்ணிகளைக் கொண்ட இக்குறவஞ்சியில் சிங்கன்- சிங்கி உரையாடல் மூலம் தத்துவங்கள் விளக்கப்படுகின்றன.

பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சி தேனமுதக் களஞ்சியம் என்று போற்றப்படுகிறது, இறைவனின் அருங்குணங்களை எடுத்துரைத்து, அவனிடம் சரணடைந்து அடைக்கலம் நாடும் 685 பாடல்களைக் கொண்ட ஞான இலக்கியம் இது.

‘‘அவன்தான் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். தன்னை வணங்குவதற்காகவே வானவர்களையும் மனிதர்களையும் அவன் படைத்தான்..’’ என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன, இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட இனிய இலக்கியமே ஞானப்புகழ்ச்சி.

“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தனை வணங்க” என்பது அப்பாவின் ஆன்மிக முழக்கம்.

இரவு முழுவதும் ஞானப்புகழ்ச்சி

பீர் முகம்மது அப்பா அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் ரஜப் மாதம் பிறை 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வுகளில் ஞானப் புகழ்ச்சி இரவு முழுதும் இன்றும் தவறாமல் படிக்கப்படுகிறது. அவரது நினைவு விழாவில் சமயபேதமின்றி பல இனமக்களும் ஒன்றுகூடிக் கலந்து கொள்கின்றனர். தமிழகமும் கேரளமும் மனதால் இணையும் நிகழ்வாக இந்த ஆன்மிக விழா இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x