

வருகிற 30ம் தேதி ஆருத்ரா தரிசனம். பேரூர் நடராஜ பெருமானை கண்ணார தரிசிப்போம். ஆடல்வல்லானின் அழகில் சொக்கிப்போவோம்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் பேரூர். மிகப்பிரமாண்டமான ஆலயம். அற்புதமான திருக்கோயில். காமதேனுப் பசு வழிபட்ட திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.
இங்கே உள்ள ஒவ்வொரு சந்நிதியிலும் உள்ள தெய்வங்கள் மிகவும் சாந்நித்தியம் நிறைந்தவை. மண்டபங்களும் தூண்களும் கலைநயத்துடன் கட்டப்பட்டவை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
முக்கியமாக, இங்கே ஆடல்வல்லான் நடராஜ பெருமான் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். ஸ்ரீசிவகாமி அன்னையுடன் காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, இங்கே, வருடத்துக்கு பத்து முறை அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
அதாவது, தமிழ் வருடம் பிறந்ததும் சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேகம் நடக்கிறது. ஆனி மாதத்தின் உத்திரம் நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது.
ஆவணி மாதத்தில் சுக்ல சதுர்த்தசியிலும் அதேபோல, புரட்டாசி மாதத்தின் சுக்ல சதுர்த்தசியிலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதத்தின் தீபாவளித் திருநாளின் போதும் மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தின் போதும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி திருவாதிரையே ஆருத்ரா தரிசன வைபவம் என்றும் மார்கழி திருவாதிரைப் பெருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது.
மாசி மாதத்தின் சுக்ல சதுர்த்தசியிலும் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவையொட்டியும் நடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
மார்கழி திருவாதிரை நன்னாளில், நடராஜர் பெருமானுக்கு மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள் தூள், வில்வத்தூள், திருமஞ்சனத் தூள், பஞ்சகவ்யம், சந்தனம், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு முதலானவற்றைக் கொண்டு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
வருகிற 30ம் தேதி ஆருத்ரா தரிசனம். பேரூர் நடராஜ பெருமானை கண்ணார தரிசிப்போம். ஆடல்வல்லானின் அழகில் சொக்கிப்போவோம்.