Published : 08 Oct 2015 12:04 PM
Last Updated : 08 Oct 2015 12:04 PM

தெய்வத்தின் குரல்- அம்பாள்: அன்பால் முழுமை பெற்ற அழகு

அம்பாள் அழகே உருவானவள் என்பதுபோல அன்பே உருவானவளும். அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்தப் பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிற மாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்.

பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள்தான். அவளுடைய அருள் உள்ளமேதான் அழகு வெள்ளமான ரூபமாக ஆகியிருக்கிறது.

அன்பு என்பது ரூபமில்லாத தத்வம். நாம் பார்க்கிற லோகத்திலே அன்போடு இருப்பது, வெளி ரூபத்தில் அழகில்லாமலும் இருக்கிறது. அன்பு இல்லாமலிருப்பது வெளி ரூபத்தில் அழகாகவும் இருக்கிறது. ஆனாலும் அன்பு வந்துவிட்டால் எந்த ரூபத்திலும் அது அவயவ லக்ஷணத்தை, ஒரு செளந்தர்ய சோபையைக் கொடுத்துவிடுகிறது.

அரூபமான அன்பு எப்படியோ ரூபத்திலேயே பிரதிபலித்துவிடுகிறது. இப்படி ரூபத்தில் பிரதிபலிக்க மட்டும் செய்யாமல் அன்பே ரூபமாக, அன்பே அவயவங்களாக ஆனதுதான் அம்பாள். அரூப அன்பே அவளுடைய ஸ்வரூப செளந்தர்யமாயிருக்கிறது. அவளிடம் அன்பின் முழுமை அழகின் முழுமையாக ரூபம் கொண்டிருக்கிறது.

அரூபமாக இருக்கிற தன்னைக் குழந்தைகள் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதற்காகத்தானே பரபிரம்ம சக்தியானது அம்பாள் என்ற ரூபமே எடுத்துக்கொண்டிருப்பது. இப்படி அன்பு எண்ணத்தின் மேலேயே எடுத்துக்கொண்டதால் அந்த ரூபமே பரேமஸ்வர ரூபம்தானே.

பார்ப்பதற்குப் பரம செளந்தர்யமான ரூபமாக இருந்தால்தான் பாமர ஜனங்களிலிருந்து, கொஞ்சங்கூடப் பக்குவமில்லாதவர்களிலிருந்து, எல்லாரும் இந்தத் தேகத்தின் சின்ன அழகுகளை விட்டுத் தன்னிடம் திரும்புவார்கள் என்பதால்தான் அவள் பரம லாவண்யமான சரீரத்தை எடுத்துக் கொண்டாள்.

அவளுடைய காருண்யத் தினாலேயே உண்டான லாவண்யம் அது. காருண்யத்தின் லாவண்யமே அம்பாளுடைய சரீரம். மநுஷ்யர்கள் விஷயத்தில் உள்ளன்பும் வெளி அங்க லக்ஷணமும் சம்பந்தப்படாத மாதிரி இல்லாமல் உள்ளன்பே வெளி அவயவ அழகாக ஆன உருவந்தான் அம்பிகை.

குறிப்பாக வித்யா அதிதேவதை யான திரிபுரசுந்தரியாயிருக்கும் அம்பாளின் ரூபம். திரிலோகத்திலும் அவள்தான் மகா அழகு என்பதால்தான் திரிபுரசுந்தரி என்று பேர். அதற்கு வேறே தத்வார்த்தங்களும் உண்டு. அது இருக்கட்டும்,

அழகும் அன்பும் ஒன்றுதா னென்பதைப் பல வார்த்தைகள் காட்டுகின்றன. `சு’ என்கிற அடைச்சொல்லுக்கு நல்லது, அழகானது என்று இரண்டு அர்த்தமும் இருக்கிறது. சுகுணம் என்றால் நல்ல குணம். சுரூபம் என்றால் அழகான ரூபம்.

நல்லது, நல்லது என்றால் எது நல்லது?அன்புதான் மிகவும் நல்லது. 'அன்பே சிவம்' என்கிறோம். சிவம் என்றாலும் சுபம் என்றாலும் ஒன்றுதான். சுபம் என்றால் நன்மை. நல்லதுகளில் உயர்ந்த நன்மை எது? அன்புதானே? ஆகையால் சுபம் என்றால் அன்பு. 'சுப'த்திலிருந்துதான் 'சோபை' என்ற வார்த்தை வந்திருக்கிறது.

'சுப சோபனம்' என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். 'சோபை' என்றால் 'அழகு'. 'சுப'த்திலிருந்து 'சோபை' என்கிறபோது அன்பிலிருந்தே அழகு வருகிறதென்றாகிவிடுகிறது. சுப நிகழ்ச்சிகளில் கல்யாணம் என்பதை முக்கியமாகச் சொல்கிறோம். 'சுப முகூர்த்தப் பத்திரிகை' என்று இன்விடேஷனில் போடுகிறோம்.

'கல்யாணம்' என்ற வார்த்தைக்கு உள்ள அநேக அர்த்தங்களில் ஒன்று 'நல்லது', அதாவது 'அன்பு'; இன்னொன்று 'அழகு'. ‘சிவம், சுந்தரம்' என்று சொல்வது இப்படித்தான் ஏற்பட்டது. சிவத்துக்கே சுந்தரேச்வரன் என்றும் பேர் இருக்கிறது உள்ளத்தின் அன்பே உருவத்தில் சுந்தரமாகி ஏற்பட்ட மூர்த்தி.

அம்பாள் இப்படி அன்பே அழகான வளானதால்தான் அவளுடைய அழகு வெள்ளத்தில் ஊறியிருப்பதே அன்பு வெள்ளத்தில் கரைவதாகவும் ஆகிறது. அது அப்படியே அவளுடைய உள் நிலையான அத்வைதத்துக்கு, ஆத்மானந்தத்துக்கு அழைத்துக்கொண்டு போய்விடுகிறது. அன்புக்கு வேறேயாக அழகு இருந்தால் அது தாற்காலிக ஆனந்தத்தோடு முடிகிறது.

அன்பே அழகாகிவிட்டால்? பராசக்தியின் அன்பு அல்லது அருளைவிட சாச்வதப் பேரானந்தமான மோக்ஷத்துக்கு என்ன உபாயமிருக்கிறது? இந்த அன்பையே நாம் அழகாக அநுபவிப்பதால்தான் அது மோக்ஷ உபாயமாகிறது. ஆகையால் அழகு வழியாக மோக்ஷமே பெறலாம்.

சாட்சாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது? பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா? இந்த எல்லா கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. பிரம்மாவுக்கு நாலு தலை, சிவனுக்கு ஐந்து தலை, சுப்பிரமண்யருக்கு ஆறு தலை என்கிற மாதிரி அவளுக்கு எத்தனை தலை என்று வைத்துக்கொள்வது?

விச்வரூபத்தில், விராட் ரூபத்தில் ஆயிரம் தலை “ஸஹஸ்ர சீர்ஷம்'' என்று வேதம் சொல்கிறதென்றால் அந்த மாதிரிக் கணக்கு போட்டுக் கண்ணுக்குள் கொள்கிற விதத்தில் நினைக்கவே முடியவில்லையே.

இரண்டு கை மீனாட்சியிலிருந்து பதினெட்டுக் கை மஹிஷாசுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், அந்தந்த ரிஷிகள் கண்ட விதத்தில் சொல்லியிருப்பதால் எத்தனை கை என்று கல்பித்துப் பார்ப்பது? சடைவிரி கோலமாக இருக்கிறாள் அழகாகக் கிரீடம் வைத்துக்கொண்டிருக்கிறாள். சர்வாபரண பூஷிதையாக இருக்கிறாள். துணியே கட்டிக்கொள்ளாமல் ரத்தத்தைப் பூசிக்கொண்டு கபால மாலையோடு திரிகிறாள் என்றெல்லாம் வித்தியாசமாகச் சொன்னால் எப்படி அவள் ரூபத்தைப் பாவிப்பது?

எங்கேயாவது ஒரு நல்ல ஆத்மா ஒரு பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் மனசார அன்னதானம் பண்ணினால் அங்கே போய் நின்று அவன் முகத்தைப் பார். தானம் வாங்கிக் கொள்கிறவர்களைவிட, போடுகிற அவனுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது பார். அதைப் பார்த்தால் உன் மனசுகூடக் கொஞ்சம் உருகுகிறதல்லவா?

இப்படி ஒரு வேளை, இரண்டு வேளை நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்குப் போடுகிறவன் முகத்தில் இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதென்றால் லோகத்திலுள்ள கோடானுகோடி ஜீவன்களுக்கும், மகாபாவங்களைச் செய்கிற காரியத்தில் செய்யாவிட்டாலும், மனசினாலாவது நினைக்கிற நம் அத்தனை பேருக்கும் கல்ப கோடி காலமாக வேளாவேளை சோறு போடுகிறவளின் அன்பும் ஆனந்தமும் எப்படியிருக்கும் என்று multiply பண்ணி, பெருக்கிப் பார்த்துக்கொள். அதுதான் அம்பாள் ரூபம்.

காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப்பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜுரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு.

தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x