Published : 21 Aug 2020 04:21 PM
Last Updated : 21 Aug 2020 04:21 PM

பிள்ளையாருக்கு ‘பிடிகொழுக்கட்டை’ ; விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் 

விநாயகர் என்றதும் கொழுக்கட்டை நினைவுக்கு வரும். கொழுக்கட்டை என்றதும் பிள்ளையார்தான் நினைவுக்கு வருவார். விநாயகருக்கு, விதம்விதமான கொழுக்கட்டைகள் படைப்பது வழக்கம்.


கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பிடி கொழுக்கட்டை. பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளைச் செய்து படைக்க விரும்புவார்கள். அதில் பிடிகொழுக்கட்டையும் ஒன்று.
பிடி கொழுக்கட்டையைச் செய்வது ,மிக மிக எளிது.

பூரணம் வைத்து இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள். அதேபோல் காரக் கொழுக்கட்டை செய்வார்கள். சில வீடுகளில், பிடிகொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்து பிள்ளையாரை வேண்டிக்கொள்வார்கள்.


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - சிறிது

செய்முறை:

முதலில் வெல்லத்தை தட்டிவைத்துக்கொள்ளுங்கள். அதை நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைத்துக் கொள்ளவேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ளுங்கள். அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளுங்கள். .

பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் இடித்து தயாராக இருக்கும் ஏலக்காய் பொடியைத் தூவி மீண்டும் கொதிக்க விடுங்கள். பின்பு தீயை குறைத்து (ஸிம்மில் வைத்து), அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அந்த வேளையில் அடுப்பை அணைத்து, குளிர வையுங்கள்.

மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது, உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று உள்ளங்கையில் வைத்துப் பிடித்து, இட்லி தட்டில் இடுங்கள். .

பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.


பிடிகொழுக்கட்டையை பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள். சகல சந்தோஷங்களையும் ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் ஸ்ரீகணபதி பெருமான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x