Last Updated : 29 May, 2014 11:46 AM

 

Published : 29 May 2014 11:46 AM
Last Updated : 29 May 2014 11:46 AM

மதுரைக்குப் பெயர் வந்த கதை

தமிழகத்தில் சமண சமயம் சார்ந்து பல புராணக் கதைகள் உலவுகின்றன. இந்தக் கதைகளில் சில சமணத்துக்கு எதிராகவும் உள்ளன.

இப்படிப்பட்ட புராணக் கதைகளில் புகழ்பெற்றவை. மதுரைக்கு அருகே உள்ள இரண்டு மலைகளை யானையாகவும் மலைப்பாம்பாகவும் மாற்றி, யானையை மலைப் பாம்பு விழுங்குவது போலப் பாண்டிய மன்னனுக்குச் சமணர்கள் காட்டினர் என்பதும் ஒன்று.

அதேபோல ஏழு கடல்களையும் ஓர் இடத்தில் வரச் செய்து, அவற்றைப் பாண்டியனுக்குக் காட்டித் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர் என்பது மற்றொன்று.

யானையை விழுங்கிய பாம்பு

மதுரையில் சமணம் செழித்து இருந்ததையொட்டி இக்கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது பற்றி தமிழ் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறியிருப்பது:

அந்தக் காலத்தில் மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டு மலைகளில் சமண முனிவர்கள் அதிக அளவில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தனர். இந்த எட்டு மலைகளில் யானைமலையும் நாகமலையும் அடக்கம். யானை கால்களை நீட்டிப் படுத்திருப்பது போலவும், மற்றொன்று பாம்பைப் போன்று நீண்டிருப்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றன. இந்த இரண்டு மலைகளில் நாகமலை யானைமலையை விழுங்குவதுபோல் சமணர்கள் மந்திரம் செய்தார்கள் என்பது ஒரு புராணக் கதை.

திருஞான சம்பந்தர் காலத்தில் இது போன்ற புராணக் கதை இருப்பது பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவருக்கு 5 நூற்றாண்டுகள் பின்னர் வந்த ஒட்டக்கூத்தர் காலத்தில் இப்படி ஒரு கதை தக்கயாகப்பரணி நூலில் வருகிறது.

சமணர்கள் பாம்பு மூலம் யானையை விழுங்கச் செய்த கதை, பின்னர் திருவிளையாடல் புராணக் கதையாக மாறிவிட்டது. அதில் மதுரையை அழிக்கச் சமணர்கள் பாம்பை உருவாக்கி அனுப்பியதாகவும், சிவன் அதை அம்பு விட்டுக் கொன்றதாகவும் போகிறது. அப்போது பாம்பு விஷத்தைக் கக்க, சிவன் தன் சடையில் பாய்ந்துகொண்டிருந்த மது வெள்ளத்தை விஷத்தின் மீது தெளித்து, அந்த விஷத்தையும் மதுவாக்கினாராம். இதனால்தான் அந்த ஊருக்கு மதுரை என்று பெயர் வந்ததாகப் போகிறது இந்தக் கதை. அதேபோல மதுரையை அழிக்கச் சமணர்கள் யானையை அனுப்பியதாகவும், அதையும் சிவன் அம்பு எய்திக் கொன்றாகவும் புராணம் சொல்கிறது.

ஏழுகடலும் ஓரிடத்தில்

மதுரைக்கு அருகே மேட்டுப்பட்டி என்ற கிராமம் அருகே சித்தர்மலை உள்ளது. சித்தர் என்பதும் சமண முனிவர்களின் ஆதி கடவுள் என்பது தெரிந்ததே. பண்டையக் காலத்தில் இப்பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த இடத்தில் ஏழு கடல் என்றொரு சுனை இருக்கிறது. இந்த இடத்தில்தான் பாண்டியனுக்குச் சமணர்கள் ஏழு கடல்களைக் காட்டினார்கள் என்ற கதை பிறந்திருக்க வேண்டும்.

பாண்டியனை அச்சுறுத்தித் தங்கள் வசப்படுத்த ஏழு கடல்களை ஒருங்கே அழைத்துச் சமணர்கள் காட்டினர் என்ற கதையைப் பார்ப்போம். இந்தக் கதை பின்னர் சிவன் செய்த லீலையாக மாற்றப்பட்டுவிட்டது. சிவன் பாண்டியனின் மகள் தடாதகையைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, குளிப்பதற்காகத் தனது ஆற்றலை வெளிப்படுத்தி ஏழு கடல்களை மதுரைக்கு வரவழைத்தார் எனப்படுகிறது.

ஆனால், இந்தக் கதையில் கூறப்படும் ஏழு கடல், சித்தர் மலையில் உள்ள ஏழுகடல் சுனையல்ல. சொக்கநாத சாமி கோயிலுக்கு முன் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஏழு கடல் என்ற குளம். இது 1516-ல் அமைக்கப்பட்டது என்று கரையில் உள்ள சாசனம் தெரிவிக்கிறது.

அந்தக் காலத்தில் சமயங்கள் இடையே கடுமையான மோதல் நிலவிய பின்னணியில், இதுபோலப் பல புராணக் கதைகள் மற்ற சமயங்களைப் பற்றிப் பரவலாக வழக்கில் இருந்துள்ளன. அந்த வகையில் மதுரையை முன்வைத்துச் சமண மதத்தைப் பற்றி இப்படிச் சில கதைகள் இருந்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x