Published : 04 Feb 2020 19:34 pm

Updated : 05 Feb 2020 12:15 pm

 

Published : 04 Feb 2020 07:34 PM
Last Updated : 05 Feb 2020 12:15 PM

வாள் அளந்ததை விட  வான் அளந்த பெரு வெற்றி

tanjavur-temple
தஞ்சை பெருவுடையார்.

உலகுக்கு இறை தத்துவங்களையும், பண்பியல் சிந்தனைகளையும், கோயில் கலைச் செல்வங்களையும் வாரி வழங்கியவர்கள் புகழ் மிக்க சோழ மரபினர் ஆவர். தமிழகத்தில் சோழ வேந்தர்கள், காவிரி பாய்ந்து கழனி வளம் பெருக்கும் சோழ மண்டலத்தை கி.மு.3 நூற்றாண்டு முதல் கி.பி.13 நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்துள்ளனர்.

சங்க காலச் சோழ மரபின் வழிவந்த பரகேசரி விஜயாலயச் சோழர், பிற்காலச் சோழப் பேரரசை கி.பி.850-ல் தஞ்சையில் நிறுவினார். அதன்பின் 450 ஆண்டு காலம் நீடித்த நெடுவரலாற்றில் சோழர் குலத்தில் வந்துதித்த மாமன்னர் ராஜராஜ சோழனின் வாள் கொண்டு அளந்த வெற்றிகளை விடவும், வான் அளந்து நிற்கும் அவரது கற்றளியே ஆயிரம் ஆண்டுகள் கடந்து தரணி போற்றிடச் செய்யும் வகையில் நிமிர்ந்து நிற்கிறது.


சோழச் சக்கரவர்த்தி சுந்தரச் சோழரின் தோள் சேர்ந்தவர், புலியைப் பயந்த பொன்மான் என்றெல்லாம் கல்வெட்டுகளில் போற்றப்படும் வானவன் மாதேவியின் திருவயிற்றில் உதித்த சோழப் பெரும்புலி மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி.985-ல் ஆட்சி பீடமேறினார். ராஜகேசரி என்ற பட்டப் பெயருடன் சுமார் 42 விருதுப் பெயர்களை உடையவராக, மாபெரும் நிலப்பரப்பை வென்று மும்முடிச் சோழராக, கலைகள் பல வளர்க்கும் நித்ய வினோதராக, தெய்வப் பாமாலையாம் தேவாரப் பதிகம் தேடியடைந்த திருமுறை கண்ட சோழராக, சோழர் வரலாற்றில் பொற்காலத்தை பதித்தவராக விளங்கினார்.

தமது மெய்கீர்த்திக் கல்வெட்டுகளின் மூலம் தனது பேரரசின் அரசியல் வெற்றிகளை உலகறியச் செய்யும் புதிய யுக்தியைக் கையாண்டவர். உலகிலேயே மிகப் பெரும் தரைப்படையும், வலிமையான கடற்படையும் கொண்டு விளங்கியவர். படை நிர்வாகத்துடன், பேரரசு முழுவதும் ஒரே சீரான நிர்வாக அமைப்பையும், அமைதியையும் நிறுவியவர். சைவம், வைணவம் மட்டுமின்றி சமணம், பௌத்த சமயங்களையும் சமயப் பொறையுடன் அரவணைத்து அனைத்து சமய ஒருமைப்பாட்டை நிலைநாட்டியவர்.

தமது இருபத்து ஒன்பது ஆண்டு கால ஆட்சிக்காலத்தில், 62 கோயில்களை புதியதாகக் கட்டியும் புனரமைத்தும் திருப்பணிகள் செய்துள்ளது மிகப்பெரும் சாதனை. அவரது அனைத்து சாதனைகளையும் விஞ்சி நிற்பது அவர் எடுப்பித்த ராஜராஜேச்சுவரம் எனும் தஞ்சைப் பெரிய கோயில்.

மாமன்னன் ராஜராஜன் பெருமளவில் திட்டமிட்டு, புதுமையாகவும், பெரியதாகவும் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயில் அவரது பெயரையும் புகழையும் நிலைக்கச் செய்கிறது. சைவ ஆகம விதிகளின்படியான சிவபெருமானின் ஐந்து அம்சங்களான தத்புருஷம், ஈசானம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாகவும், தட்சிணமேரு விமானத்தை உடையதாகவும், சைவசித்தாந்தக் கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய பெருங் கோயிலாகவும் இருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

மும்முடிச் சோழனாம் ராஜராஜன், முப்புரம் எரித்த திரிபுராந்தக சிவனாரின் அதிபக்தர் என்பதை விளக்குவதற்கு பெரிய கோயிலில் காணும் எண்ணற்ற திரிபுராந்தகர் சிலைகளே சாட்சிகளாக நிற்கின்றன. சிவாலயச் சக்கரவர்த்தி என ஆன்றோரால் போற்றப்படும் தஞ்சைப் பெரிய கோயில், சிவபாத சேகரனாம் ராஜராஜனின் கோயில் திருப்பணிகளின் மகுடமாகத் திகழ்கிறது. ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசரான ராஜராஜனின் வழியில் ஆடவல்லார் திருவடி தொழுது, பெரியநாயகி உடனுறை பெருவுடையார் திருவருள் வேண்டி அருள் பெறுவோமாக.

-எஸ்.பாபாஜி ராஜா பான்ஸ்லே,
பரம்பரை அறங்காவலர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்.


தஞ்சாவூர் பெரிய கோவில்தஞ்சை பெரிய கோயில்இறை தத்துவங்கள்பண்பியல் சிந்தனைகள்கோயில் கலைச் செல்வங்கள்ராஜராஜன்ராஜராஜ சோழன்THANJAI PERIYA KOILதஞ்சை பெரிய கோவில் thanjai periya kovil

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author