Published : 17 Nov 2019 09:56 AM
Last Updated : 17 Nov 2019 09:56 AM
வி.ராம்ஜி
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. இன்று கார்த்தை மாதம் பிறந்துவிட்டது. அற்புதமான இந்த மாதத்தில்தான் ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளத் தொடங்குவார்கள் பக்தர்கள்.
மாதந்தோறும் சபரிமலையில் நடைத் திறப்பு, பூஜைகள், தரிசனம் என்றிருக்கும். கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டால், அந்தநாளில் விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள் பக்தர்கள். தினமும் நித்தியானுஷ்டானங்களின் படி இருப்பார்கள். காலையும் மாலையும் குளித்து, சரண கோஷம் சொல்லுவார்கள்.
கழுத்தில் துளசி மாலையும் இடுப்பில் கருப்பு அல்லது காவி வேஷ்டியும் கட்டிக்கொண்டு, நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டு, ‘வணக்கம் சாமி’, ‘நல்லாருக்கீங்களா சாமி’ என்று எல்லோரிடமும் இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
கார்த்திகை தொடங்கிவிட்ட அடுத்தடுத்த நாட்களில், யார் வீட்டிலாவது பூஜைகள் நடந்துகொண்டிருக்கும். ஐயப்ப பூஜைக்கு, ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சாமிகளை அழைப்பார்கள். பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். சரண கோஷமிடுவார்கள். அந்த சரண கோஷத்தில், முக்கியமானது ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’.
ஆகவே, பூஜையில் பஜனை, படி பூஜை என முடிந்ததும் எல்லோருக்கும் அன்னதானம் நடைபெறும். சபரிமலைக்கு முதல் முறை மாலையிடுபவர்களை கன்னிச்சாமி என்பார்கள். அவர்களின் வீட்டில் கன்னிபூஜை என்று நடைபெறும். இந்த பூஜையானது இன்னும் சிறப்பு வாய்ந்தது. மகத்துவம் நிறைந்தது.
முன்பெல்லாம் ஒருமண்டல காலம் விரதம் இருப்பார்கள். இப்போதும் இப்படியாக விரதம் அனுஷ்டிப்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அலுவலகம், வேலை, விடுமுறை, தினமும் ஷேவ் செய்யும் சூழல், வேலை நிமித்தமாக ஷூ என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நான்கைந்து நாட்கள் விரதமிருந்து, பின்னர் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
இன்று கார்த்திகை பிறப்பு (17.11.19). இந்தநாளில், அருகில் உள்ள கோயில்களில் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொள்வார்கள். முன்பெல்லாம், ஐயப்பன் கோயில்கள் தமிழக ஊர்களில் மிகவும் அரிது,. இப்போது ஊருக்கு இரண்டு ஐயப்பன் கோயில்கள் வந்துவிட்டன. அதேபோல், பிள்ளையார் கோயில், முருகன் கோயில், அம்மன் கோயில்களில் கூட ஐயப்ப சுவாமிக்கு தனிச்சந்நிதி அமைத்துவிட்டார்கள். எனவே, கார்த்திகை தொடங்கியதும், ஐயப்பன் கோயில்களிலும் ஐயப்பன் சந்நிதிகளிலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
இன்று தொடங்கி, தை மகர ஜோதி வரை எங்கு பார்த்தாலும் ‘சரண கோஷம்’ ஒலித்துக் கொண்டே இருக்கும். ஐயப்பசாமிமார்களைப் பார்க்கலாம்.