Published : 08 Oct 2019 09:39 AM
Last Updated : 08 Oct 2019 09:39 AM

எதிர்ப்பை தவிடுபொடியாக்கும் வாராஹி! 

வி.ராம்ஜி

சக்தியரில், சப்த மாதர்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு. ஏழு சக்திகளும் இணைந்து காட்சியளிப்பார்கள். அவர்களைத்தான், சப்த மாதர்கள் என்று போற்றுகிறோம். இந்த சப்த மாதர்களில், மிக மிக முக்கியமானவள்தான் வாராஹி. அம்பிகையின் ஒட்டுமொத்த சக்தியும் இவளுருவில் இருப்பதாகச் சொல்கிறது புராணம்.

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!

என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

என்று நான்மறைகள் கொண்டாடுகின்றன.

சோழர்கள் காலத்தில்தான் சப்த மாதர்களை வழிபடுவது அதிகரித்ததாகச் சொல்கிறது வரலாறு. மேலும் சோழர்கள் கட்டிய ஆலயங்களில், மறக்காமல், சப்தமாதர்களுக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. இதனால்தான், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட சோழ தேசப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில், சப்தமாதர்களின் சந்நிதியைக் காணமுடிகிறது.


முக்கியமாக, தஞ்சாவூர் பெரியகோயிலில் வராஹிக்கு சந்நிதி இருக்கிறது. இங்கே வாராஹி வழிபாடு சிறப்பாக நடக்கிறது. ராஜராஜசோழன் எந்தச் செயலைத் தொடங்கினாலும், வராஹியை வழிபட்ட பின்னரே தொடங்குவார் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இந்த அம்மனை“ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்’ என்றே வர்ணிக்கிறார்கள்.


தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராஹி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள்.


சோழர்களின் வெற்றிக்கு உரிய தெய்வம் துர்கை. அதனால்தான் வைஷ்ண சம்பிரதாயத்தைக் கொண்ட பிரம்மராயர், அவரின் ஊரான அமன்குடி என்கிற அம்மன்குடியில், சிவாலயம் அமைத்து, அங்கே அஷ்டபுஜம் கொண்ட, அதாவது எட்டு திருக்கரங்கள் கொண்ட துர்கையை பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். துர்கையின் தளபதி வாராஹி.


கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சந்நிதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி.

ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பார்..இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, அதாவது ஐப்பசி சதய விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பிறகே தொடங்குகிறது.


வாராஹியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், எடுத்த காரியம் யாவும் வீரியமாகும். காரியம் அனைத்தும் வெற்றியைத் தரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x