Last Updated : 28 May, 2015 11:11 AM

 

Published : 28 May 2015 11:11 AM
Last Updated : 28 May 2015 11:11 AM

ஆற்றில் மிதந்து வந்த அபூர்வ காளி

சுந்தர மாகாளி திருநடனப் பல்லக்கு வீதியுலா மே 29

பௌர்ணமியுடன் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை அன்று காவிரிப் படித்துறையில் கூடியிருந்தது. அதற்குக் காரணம் கரையில் ஒதுங்கி நின்ற பெரிய மரப் பெட்டி. அனைவரும் அதிசயத்துடனும் அச்சத்துடனும் அந்தப் பெட்டியைப் பார்த்தனர். ஒருவரும் பெட்டியைத் திறக்க முன்வரவில்லை. கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி பெட்டியின் அருகில் வந்தாள். அவள் பேசிய பேச்சு மந்திரம் போல் இருந்தது.

வடக்கே உச்சினி மாகாளிப் பட்டினத்திலே விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட பத்ரகாளியின் திருவடிவம் பெட்டியில் உள்ளது என்ற செய்தியை அவள் கூறினாள். மேலும் ராஜா தான் வழிபட்ட காளியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆற்றில் விட்டான் என்றும் ஆற்றில் மிதந்து வந்த காளி இந்தப் புனித பூமியில்தான் அருள்பாலிக்க வேண்டும் என்றும் சிறுமி தெரிவித்தாள்.

சிவாலயத்தில் சுந்தரமாகாளி

காளியை எடுத்து ஊரின் தெற்குப் பகுதியில் ஓர் ஓலைக் கொட்டகை அமைத்து பெட்டியுடன் வைத்து வழிபட ஆரம்பித்தனர். ஒருநாள் நள்ளிரவில் காளியம்மன் இருந்த ஓலைக் குடில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அம்மனின் பெட்டகம் எவ்விதச் சேதமும் அடையவில்லை.

இத்தீவிபத்தினால் ஊருக்குத் தீங்கு நேரும் என்று கருதிய ஊர்ப் பெரியவர்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதியை அணுகி நடந்ததைக் கூறி அதற்கான பரிகாரங்களைக் கோரினர். காஞ்சி சுவாமிகள்,  சுந்தரேசுவரர் கோயிலில் காளிக்கென ஓர் தனி இடம் உள்ளது. அங்கு பெட்டியோடு பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள், ஊர் செழிப்படையும் என்று கூறினார். அதன்படி அவ்வாலயத்தில் சுந்தர மாகாளியாக இருந்து அருள்பாலிக்கத் தொடங்கினாள். எப்போதும் பெட்டியிலேயே இருக்கும் காளிக்கு இடுப்புக்கு மேலே உள்ள உருவத்தை மட்டும் காண முடியும்.

பல்லக்கு வீதியுலா

காளியின் கோபம் தணிய நெற்றியில் புனுகு, சவ்வாது, விபூதி, சந்தனம் முதலியன சாத்தப்படுகின்றன. காளிக்குச் சாத்தப்படும் பூ, குங்குமம் முதலியன பிறருக்கு வழங்கப்படுவதில்லை. வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் காளியின் பெட்டிக்குப் படையலிட்டுப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆண்டுக்கு ஒரு முறை உத்தராயண காலத்தில் மட்டும் மாகாளி வீதியுலா வருவாள். திருவிழாவின்போது முன்னதாக பள்ளய நைவேத்யம் (ஒன்பது இலைகளில் அன்னம் முதலியன வைத்துப் படைத்தல்) படைத்துப் பெட்டியைத் திறப்பார்கள். திருவிழாவின்போது மட்டுமே பெட்டி திறக்கப்படும்.

காளி, பெட்டியில் இருந்தபடியே பல்லக்கில் ஏற்றி திருமஞ்சன வீதியில் புறப்பாடு நடக்கும். பெரிய திருவிழாவாகிய பல்லக்கு வீதியுலாவைக் காணப் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் இராகு காலத்தில் காளியை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும், துன்பங்களை நீக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவாள் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் சென்னை சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் கருப்பூர். இவ்வூரில் இயற்கை எழிலுடன் கூடிய சுந்தரேசுவரர் ஆலயத்திற்குள் சுந்தர மாகாளி அன்பு வடிவாய் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கருப்பூரின் பழைய பெயர் திருப்பாடலவனம் என்பது. தல விருட்சமான பாதிரி மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் அப்பெயர் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x