Last Updated : 22 May, 2014 11:11 AM

 

Published : 22 May 2014 11:11 AM
Last Updated : 22 May 2014 11:11 AM

மக்களைத் தேடி வந்த கள்ளழகர்!

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அழகர் கோயில் வைணவர்களால் திருமாலிருஞ் சோலை என்று போற்றப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம் பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார் உள்பட பல்வேறு ஆழ்வார்களால் பாடப்பட்டதாகும். இங்கு எழுந்தருளும் பெருமாளுக்கு சுந்தராஜ பெருமாள் என்றும், தமிழில் அழகர் என்றும் பெயர்.

திருமாலே படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காணப் படும் அழகர்மலையில், ‘நூபுர கங்கை’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மகாவிஷ்ணு உலகை அளப்பதற்காகத் தன் திருவடிகளைத் தூக்கியபோது, அந்த திருவடியைக் கழுவி பிரம்மன் பூஜை செய்தார். அவ்வாறு கழுவியபோது, விஷ்ணுவின் கால் சிலம்பில் இருந்து கசிந்த நீர்த்துளிகள் அழகர்மலை மீது விழுந்து, புனித தீர்த்தமானது. கால்சிலம்பிற்கு ‘நூபுரம்’ என்ற பெயரும் உண்டென்பதால், அப்பெயரிலேயே இன்று அந்தத் தீர்த்தம் அழைக்கப்படுகிறது.

பெருமாள் பக்தரான சுதபஸ் என்ற முனிவர் இந்தப் புனித தீர்த்தத்தில் அமர்ந்து, பெருமாளை நினைத்துத் தவமிருந்தார். அப்போது அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாள் நினைவில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவரோ, அவரைக் கவனிக்கவில்லை. துர்வாச முனிவர் தான் கோபக்காரராயிற்றே... சட்டென்று ஆத்திரமடைந்து “தவளையைப் (மண்டூகம்) போல கிடக்கும் நீ மண்டூகமாகவே மாறிப்போ” என்று சாபமிட்டார். தவளையாக மாறிவிட்ட சுதபஸ், “சுவாமி... பெருமாள் நினைப்பில் தங்களைக் கவனிக்கத் தவறிவிட்டேன். பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என்று கெஞ்சினார். மனமிரங்கிய துர்வாசர், “வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோயிலில் இருந்து ஒருநாள் ஆற்றுக்குப் பெருமாள் வருவார். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.

இவ்வாறு மண்டூக மகரிஷிக்குக் காட்சி கொடுப்பதற்காகத்தான் அழகர் கோயிலில் இருந்து பெருமாள் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர். மறுநாள் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளி சாபத்தை போக்குகிறார்.

அழகரின் மதுரை வருகை குறித்து இன்னொரு கதை சொல்லப்படுகிறது. மதுரையில் ஆட்சி புரிகின்ற தன் தங்கை மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் (சுந்தரேஸ்வரர்) நடக்கும் திருமணத்திற்காகவே அழகர் மதுரை வருகிறார். இடையில் பக்தர்களின் வரவேற்பை ஏற்று அருள் பாலித்துவிட்டு வரத் தாமதமாகிவிடுவதால், அவர் இல்லாமலேயே திருமணம் நடந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர், ஆற்றில் இறங்கிக் கோபத்தைத் தணித்து விட்டு, மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிவிடுவதாகவும் கூறுகிறார்கள். சைவ, வைணவ ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவும், சித்திரை மாதம் நடைபெறும் அழகர் திருவிழாவையும், மாசி மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் ஒன்றிணைக்கவும் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் இப்படியொரு கதை புனையப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

சித்திரை ஏகாதசியன்று அழகர் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. கோயிலுக்குள் இருக்கும் வரை சுந்தரராஜ பெருமாளாக இருக்கும் அழகர், மதுரை புறப்படும்போது கள்ளழகர் வேடம் அணிகிறார். கோயில் வாசலில் இருக்கும் கருப்பண்ண சாமியிடம், நகைக் கணக்கை ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து விடைபெறுகிறார் பெருமாள். அவரது மதுரைப் பயணம் மக்கள் வெள்ளத்தில் தான் நடக்கிறது. மதுரையிலும் பல லட்சம் பேர் சர்க்கரை தீபமேந்தி அவரை வரவேற்கிறார்கள். சித்ரா பௌர்ணமியன்று, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர். இந்தக் காட்சியைக் காண இந்த ஆண்டு குவிந்த பக்தர்களின் எண்ணிக்கை மட்டும் பத்தரை லட்சம். அதில் அழகர் வேடமணிந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அடக்கம்.

அழகரை வணங்கினால், விவசாயச் செழிப்பு, வியாபார விருத்தி அமையும் என்பதால், மற்ற ஊர் பெருமாளை விட, இவரை வணங்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பாமரர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள்கூட, அழகர் மீண்டும் மலையேறும் திரும்பும் வரை புலால் தவிர்த்து விரதம் மேற்கொள்கிறார்கள். அழகர் திருவிழாவைக் காண அண்டை மாவட்டங்களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டும், காலத்திற்கேற்ப டிராக்டர் அமர்த்தியும் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x