Published : 26 Mar 2015 02:04 PM
Last Updated : 26 Mar 2015 02:04 PM

விவேகானந்தர் மொழி: சந்நியாசிகள் என்ன செய்ய வேண்டும்?

மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏழை மக்கள் கல்விச் சாலைக்கு வர முடியாவிட்டால் கல்வி ஏழைகளிடம் செல்ல வேண்டும். அவர்கள் உழுகிற இடம், தொழிற்சாலை முதலிய எல்லா இடங்களுக்கும் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும்.

நமது நாட்டில் ஒரே சிந்தையும் தன்னலத் தியாகமும் கொண்ட சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில், கிராமம் கிராமமாகச் சென்று சமய ஞானத்தைப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை உலகாயத விஷயங்களைக் கூடக் கற்பிப்பதற்கு ஆசிரியராக ஏற்பாடு செய்தால் அவர்கள் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாகச் சென்று சமய போதனையை மட்டுமின்றிக் கல்வியறிவையும் அளித்துக் கொண்டே செல்வார்கள்.

அவர்கள் கிராமந்தோறும் சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் சமயத்தை மட்டுமன்றிக் கல்வியையும் கொண்டு செல்லட்டும்.

உதாரணமாக கிராம மக்கள் நாள் முழுவதும் வேலை செய்த பிறகு ஊருக்குத் திரும்புகிறார்கள். ஏதாவதொரு மரத்தடியிலோ அல்லது வேறோர் இடத்திலோ உட்கார்ந்து கொண்டு, புகை பிடித்துக்கொண்டு, அரட்டையடித்துக் கொண்டு காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

அந்தச் சமயத்தில் பழுத்த சந்நியாசிகள் இருவர் அங்கேயே போய் அவர்களை மடக்கிப் போட்டுக் கொண்டு காமிரா மூலம் வானசாஸ்திரம் சம்பந்தமான படங்களையோ அல்லது வேறு படங்களையோ பல்வேறு நாடுகளின் காட்சிகளையோ, வரலாறுகளையோ காட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவ்வாறாக பூமி கோளங்கள், பூகோளப் படங்கள் முதலியவற்றின் துணை கொண்டு வாய்மொழியாகவே விஷயங்களைக் கற்பிக்க முடியும்.

அறிவின் நுழைவாயில் கண்கள் மட்டுமா?

அறிவு நுழைவதற்குக் கண்கள் மட்டுந்தான் வாயில் என்பதல்ல. காதுகள் (கேள்வி) மூலமாகவும் எல்லாம் செய்ய முடியும். அதன்மூலம் மக்களுக்குக் கருத்துக்களும், நீதிநெறியுணர்வும் கிடைக்கும். மேலும் நல்ல விஷயங்களைக் கற்க விழைவார்கள். அத்துடன் நமது வேலை முடிவடைகிறது.

மக்களுக்குக் கருத்துக்களை வழங்க வேண்டும். அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்குமாறு அவர்களது கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் அவர்களுக்குரிய நல்வழியை அவர்களே வகுத்துக் கொள்வார்கள்.

ரசாயனப் பொருள்களை ஒன்றாகக் கலந்து வைப்பது நம் கடமை. அவை படிகக் கட்டிகளாக மாறுவது இறைவனின் சட்டப்படி நடக்கும். அவர்களது உள்ளங்களில் நல்ல கருத்துக்களை விதைப்போம். மற்றவற்றைத் தாமே செய்து கொள்வார்கள். பாமரனுக்குக் கல்வியளிப்பது என்பது இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x