Published : 05 Mar 2015 11:53 AM
Last Updated : 05 Mar 2015 11:53 AM

எட்டு வித விவாகங்கள்

மநு ஸ்மிருதி உட்பட தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாகங்கள் சொல்லியிருக்கிறது. பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆசூரம், காந்தர்வம், ராட்சசம், பைசாசம் என்று கல்யாணத்தில் அவை எட்டு தினுசு.

பிராம்மம்

பிராம்மம் என்பது குருகுலவாசம் முடித்து வந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய மாதா, பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது.

வியாபாரக் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் ஒன்றிலேயே பண்ணப்படுவது பிராம்ம விவாகம். தர்ம சாஸ்திரங்கள் எட்டு வித விவாகங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.

தைவம்

தைவம் என்பது ஒரு யாகத்திலேயே அதைப் பண்ணுகிற ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவது. உரிய காலத்தில் பெண்ணைத் தேடி வரன் வராததால், பெண் வீட்டுக்காரர்கள் அவனைத் தேடிப் போய் யாகசாலையிலே மாப்பிள்ளை பிடிப்பதென்பது, பிராம்ம விவாகத்தை விடத் தாழ்த்தி என்பதே அபிப்ராயம்.

பெண்ணைப் பிள்ளை வீட்டுக்காரன் தேடி வருவதுதான் சிலாக்கியமான விவாகம் என்பதாக ஸ்திரீ குலத்தை சாஸ்திரம் உயர்த்தி வைத்திருக்கிறது.

ஆர்ஷம்

மூன்றாவதான ஆர்ஷ விவாகம் என்பது ரிஷி சம்பந்தமானது என்று பொருள்படுவது. சியவன ரிஷிக்கு சுகன்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்த மாதிரி இருக்கும் என்று ‘ஆர்ஷ' என்ற வார்த்தையைப் பார்த்தால் தோன்றுகிறது. ஆனால் தர்ம சாஸ்திரப்படி, வரனிடமிருந்து இரண்டு பசுக்களை வாங்கிக்கொண்டு பெண்ணை பதிலுக்குத் தருவது ‘ஆர்ஷம்' என்று தெரிகிறது.

ஆர்ஷம் என்றால் ரிஷிக்குக் கொடுப்பது என்று அர்த்தம் செய்துகொண்டால், இதுவும் உரிய காலத்தில் பிராம்ம விவாஹம் ஆகாத கன்னிகையை ஒரு வயசான ரிஷிக்காவது சுசுருக்ஷை செய்யும் பொருட்டுப் பத்தினியாகக் கொடுப்பது என்று ஆகும்.

பிராஜாபத்தியம்

நாலாவது பிராஜாபத்தியம். பிரஜாபத்தியம் பிஸினஸ் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் ஒரு பிரம்மச்சாரிக்கு கன்யாதானம் பண்ணித் தருகிற விவாக முறைதான். ஆனால், பிராஜாபத்தியம் என்கிற பெயரில் பிரஜையை உண்டு பண்ணுவது என்ற நோக்கம் அவசரமாகத் தெரிவதால், தன் குமாரி சீக்கிரமே ரிதுவாகிவிட இருக்கிறாள் என்பதால் அவளுக்குக் கல்யாணம் பண்ணித்தர அவளுடைய தகப்பனார் அவசரப்பட்டு வரனைத் தேடிக்கொண்டு தாமே போகிறார் என்று ஏற்படுகிறது.

அதாவது, பிராம்மம் மாதிரி இல்லாமல் இங்கே பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிக்கொண்டு போய்க் கல்யாணம் செய்துதருகிறார்கள்.

ஆசுரம்

‘ஆசுரம்' என்றால் ‘அசுரத்தனமான' என்று அர்த்தம். ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத (மாட்ச் ஆகாத) ஒரு வரனானவன் நிறையப் பணத்தை அவளுடைய தகப்பனாருக்கோ பந்துக்களுக்கோ கொடுத்து, அவர்களை அதனால் வசப்படுத்திக் கட்டாயப்படுத்தி அவளைக் கொடுக்கும்படிப் பண்ணுவதுதான் ஆசுரம். அநேக பணக்காரர்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொண்டது ஆசுரம்தான்.

காந்தர்வம்

காந்தர்வ விவாகம் என்றவுடன் சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் நடந்தது என்று உங்களுக்கு நினைவு வரும். இந்தக் காலத்தில் ‘ஓஹோ' என்று கொண்டாடப்படும் காதல் கல்யாணம் இதுதான். ‘ராட்சசம்' பெண் வீட்டுக்காரர்களோடு யுத்தம் செய்து ஜயித்துப் பெண்ணை எடுத்துகொண்டு போய்க் கலியாணம் பண்ணிக்கொள்வது. கிருஷ்ண பரமாத்மா ருக்மணியை இப்படித்தான் விவாகம் செய்துகொண்டார்.

பைசாசம்

கடைசி, எட்டாவது தினுசு விவாகம், பைசாசம், அசுரத்தனமானது, ராட்சசத்தனமானது, இவற்றுக்கெல்லாம் முடிவிலே பிசாசுத்தனமான பைசாசத்தைச் சொல்லியிருக்கிறது. ஆசுரத்தில் பெண்ணின் சம்மதத்தை எதிர்பார்க்காவிட்டாலும், அவளுடைய மநுஷ்யர்களுக்காவது பணத்தைக் கொடுத்தான். ராட்சசத்தில் அவளுடைய மநுஷ்யர்களை இம்சித்தபோதிலும் அவளுடைய இஷ்டத்தை மீறிக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் ஆசை வைத்துத்தானே இருந்தாள்? பைசாசத்திலோ பெண்ணுடைய இஷ்டத்தையும் பார்ப்பதில்லை. அவளுடைய பெற்றோர்களுக்கும் திரவியம் தருவதில்லை. பெண் வீட்டுக்காரர்களைப் பகைத்துக்கொண்டு, கல்யாணப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி விவாகம் பண்ணிக்கொள்வதைத்தான் பைசாசம் என்று வைத்திருக்கிறது.

இவற்றிலே பிராம்ம விவாகம்தான் சிரேஷ்டமானது. இந்த பிராம்ம விவாகம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு.

(தெய்வத்தின் குரல் முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x