Published : 26 Feb 2015 10:17 AM
Last Updated : 26 Feb 2015 10:17 AM

மதுரகாளியின் அருளாட்சி

மூர்த்தி, தலம் , திருத்தமென முச்சிறப்பும் கொண்ட திருக்கோவில்களில் ஒன்றுதான் சிறுவாச்சூர் திருத்தலம். சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தாண்டி எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

ஊர் எல்லையில் கோவில் காட்சி தருகிறது. சுற்றிலும் மலைகள், ஏரி, தோப்பு என இயற்கை எழில் மிகுந்த இடத்தில் மனம் கவர் சூழலில் அன்னை மதுர காளி அருளாட்சி செய்கிறாள் .

கோவில் அருகிலேயே திருக்குளம். சிறியதாக இருந்தாலும் நேர்த்தியான கோவில் கோபுரம். கோவிலுக்கு முன்னால் ஸ்தல விருட்சம் - மருத மரம். மரத்திற்க்கு கீழே விநாயகர், நாகர் உருவங்கள். வாயிலைத் தாண்டி, இரு பக்கமும் மண்டபங்கள். தாண்டினால் அம்மனின் சந்நிதி வடக்கு நோக்கிய வண்ணம் உள்ளது.

நான்கு திருக்கரங்கள், இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து, திருவடியைச் சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழில் காட்சி இல்லை. அருளும் நிலையிலேயே காட்சி அளிக்கிறாள் .

தலபுராணம்

கற்புக்கரசியாம் கண்ணகி ஊழ்வினையால் கணவனை இழந்து பின் நீதி கேட்டு மதுரை சென்று அதனைத் தீக்கிரையாக்கி விட்டு இந்த ஊர் பக்கம் வந்தாளாம். ( மதுரை காளியம்மனே இங்கு வந்ததாகவும் கூறுவதுண்டு). அது ஒரு வெள்ளிகிழமை.

கோவிலில் இரவு தங்க அனுமதி கோருகிறாள். அந்த ஊர் காவல் தெய்வமான செல்லியம்மனோ தான் ஒரு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவன் தீய செயல்களுக்குத் தன்னைப் பயன்படுத்துவதாகவும் கூறினாள். ஒரு தீர்வை வழங்குவதாகக் கூறி, காளியின் உருக்கொண்டு வதம் செய்கிறாள் கண்ணகி.

இறக்கும் தறுவாயில் அந்த மந்திரவாதி தன் தீய செயல்களுக்கு வருந்தி ஒரு வேண்டுகோள் வைத்தான். தான் இறந்த இடத்திலேயே பக்தர்கள் தன்னை மிதித்துக் கொண்டுதான் அம்பாளைத் தரிசிக்க வேண்டும் என்று வேண்டினான் . செல்லியம்மன், அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள்பாலித்து வர வேண்டுமென வேண்டினாள். அத்துடன் தனக்கு சிறுவாச்சூர் ஆலயத்தில் முதல் மரியாதை வேண்டுமென்றும் கூறினாள். அதற்கு மதுரை காளியம்மனும் ஒப்புக்கொண்டார்.

முதல் மரியாதை

மதுரை காளியம்மன் திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக வந்ததாக கூறுவர். இங்கு வந்து அமைதியுற்று பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் என்ற பெயர் பெற்றாள். செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின்போது மலை நோக்கி முதலில் தீபாராதனை காட்டிவிட்டு பின்தான் மதுரகாளியம்மனுக்குக் காட்டும் வழக்கம் உள்ளது.

அபிஷேகம் முடியும்போது காட்டப்படும் மகாதீபாராதனைக்கு உடுக்கை அடிப்போர் அன்னையையும் பிற தெய்வங்களையும் அழைத்து அன்னையின் பெருமையைக் கூறுகின்றனர். இந்த நேரத்தில் தான் அன்னை பெரியசாமி மலையிலிருந்து கிளம்பி இவ்வாலயத்தில் பிரவசிப்பதாக ஐதீகம்.

ஆலயத்தின் முன்புறம் அய்யனார், சோலை முத்துசாமி ஆலயம்,சோலையம்மன் சந்நிதிகளும், நாகர் சந்நிதியும் புற்றும் உள்ளன. பின்புற மேட்டில் பெரியசாமி ஆலயம் உள்ளது.

அன்னைக்கு அங்கப் பிரதட்சிணம் சிறந்த பிரார்த்தனை. மற்றுமொரு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு ஏற்றுதல். வெளியிலிருந்து கொண்டுவராமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டுவந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்வது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இதற்காகத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயத்தின் மூலம் வழங்கப்படுகிறது. முடியாத பக்தர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்கள் உள்ளனர்.

சதாசிவ பிரம்மேந்திரர் இத்தலத்திற்கு வந்து அன்னையின் சந்நிதியில்  சக்கரம் ஸ்தாபித்ததாக கூறுகிறார்கள். ஆதி சங்கரர் இங்கு வந்தபோது மரத்தடியில் அமர்ந்தார். அவருக்கு தாகம் தீர்ப்பதற்காக அன்னை சுனை வடிவில் வந்து அதுவே குளமாக மாறியுள்ளது.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அமாவசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதலுடன் தொடங்கி அதற்கடுத்த செவ்வாய் அன்று காப்புக்கட்டி 13 நாட்கள் பெருந் திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. இதில், தேர், வெள்ளிகுதிரை வாகனம், மலை வழிபாடு, திருக்கல்யாணம் போன்றவை விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், நவராத்திரி போன்ற நாட்கள் எல்லாவற்றிலும் ஆலயம் திறந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இங்கு ஒருமுறை தரிசனம் செய்தவர் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x