Last Updated : 12 Feb, 2015 12:49 PM

 

Published : 12 Feb 2015 12:49 PM
Last Updated : 12 Feb 2015 12:49 PM

விவிலியச் சிந்தனை: உள்ளம் தொட்ட கல்விமுறை!

மனித குலத்தைத் தனது தலைசிறந்த படைப்பாகக் கண்டார் கடவுள். அதனால் பூமியில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் எனும் கல்விமுறையைப் பத்துக் கட்டளைகளாக அளித்தார். கடவுள் அளித்த கல்விமுறையைக் கற்றுக்கொண்டாலும் அதன்படி வாழ மறந்து மனிதன் பாவக்குழியில் விழுந்தான். அவனைக் கைதூக்கிவிட்டு அவனது பாவங்களை சுமந்து அவனை மீட்டெடுக்க மேலும் ஒரு வாய்ப்புத் தந்தார் கடவுள்.

தன் ஒரே மகனை பூமிக்கு அனுப்பினார். இறைமகன் இயேசு, தந்தை தனக்களித்த பூமிக்குரிய வாழ்வில் மனித பாவத்தின் பலியாக மட்டும் வாழவில்லை. தன் மரணத்துக்கு முன் தந்தையின் நற்செய்தியை தனது தனித்த கல்விமுறை வழியாக போதித்தார். அது அவரைத் தேடிவந்தவர்களின் உள்ளம் தொட்டது.

வெறுமனே கருத்தளவிலான ஒரு போதனையை இயேசு வழங்கவில்லை. மாறாக, அவர் உவமைக் கதைகள் வழியே மக்களிடம் பேசினார்.

அவை தனிச்சிறப்பு வாய்ந்தவை. இயேசுவின் வாழ்வை வரிசைக் கிரமமாக எழுதிய அவரது சீடர்களில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரது நூல்களிலும் மூன்றில் ஒரு பகுதி இயேசு சொன்ன உவமைக் கதைகளே அழுத்தம் திருத்தமாகப் பேசுவதை அறியும்போது அவற்றின் முக்கியத்துவம் நமக்கு விளங்குகிறது.

உவமைகளின் உள்ளே

இயேசு சொன்ன உவமைக் கதைகள் மனிதர்களைப் பற்றியவை. மனிதரின் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை. இயேசு மனிதரின் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறார் என்பது அவர் கூறிய கதைகளிலிருந்து தெரிகிறது. அக்கதைகள் வழியாக, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிலவுகின்ற உறவு எத்தகையது என்பதை நாம் அறிய முடியும்.

இயேசு போதித்த உவமைகளில் எப்போதுமே இரு பொருள்கள் உண்டு. முதல் பொருள் நேரடியாக, எழுத்தளவில் தெரிவது. இரண்டாவது பொருள் எழுத்து வடிவிலான கதை எதைக் குறித்துக்காட்டுகிறது என்பது பற்றிய எளிதாய்ப் புலப்படும் உள்ளுறை உவமை.

நல்ல சமாரியன் ரகசியம்

இயேசுவின் நல்ல சமாரியர் (லூக்கா 10:25-37) உவமைக் கதையை எடுத்துக் கொள்வோம். இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தி லிருந்த யூத இனத்தைச் சேர்ந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து, “போதகரே, உண்மையில், நான் அன்புகாட்ட வேண்டிய சக மனிதர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு இயேசு, “ஒருவன் எருசலேமிலிருந்து கீழ்நோக்கி எரிகோ நகருக்குப் போய்க்கொண்டிருந்தான்; அப்போது, கொள்ளையரின் கையில் மாட்டிக்கொண்டான்; அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கி, அவனை அடித்து, குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். ஆலய குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியில் வந்துகொண்டிருந்தார்; அவனைப் பார்த்தபோதோ, மறுபக்கமாக விலகிப் போய்விட்டார்.

அதேபோல், ஒரு லேவியரும் அந்த வழியில் வந்து அவனைப் பார்த்தபோது மறுபக்கமாக விலகிப் போய்விட்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அங்கு வந்து அவனைக் கண்டபோது மனதுருகினார். அதனால் அவனருகே போய், அவனுடைய காயங்கள்மீது எண்ணெயையும் திராட்சை மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார்.

பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மீது ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்து, கவனித்துக்கொண்டார். மறுநாள் இரண்டு தினாரிப் பணத்தை எடுத்துச் சத்திரக்காரன் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்; இதற்கு மேல் ஏதாவது செலவானால் நான் திரும்பி வரும்போது உனக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், கொள்ளையரின் கையிலே மாட்டிக்கொண்டவனிடம் அன்பு காட்டி சக மனிதராக நடந்துகொண்டவரைப் போலவே நீயும் நடந்துகொள்” என்றார்.

ஒளிந்திருக்கும் உண்மை

இந்த உவமையை வாசித்துப் பொருள் கொள்ளும்போது, துயரில் உழலும் சக மனிதர்க்கு நாம் உதவ வேண்டும்” என்று மேலோட்டமாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது. அது மட்டுமே இயேசுவின் நோக்கமாக இருந்திருந்தால், இன்று நம் கைவசம் இருக்கின்ற இந்த உவமையின் வடிவில் அவர் அதை அமைத்திருக்கத் தேவையில்லை. கள்வர் கையில் அகப்பட்ட மனிதரை ஒரு சமாரியராகச் சித்தரித்துக் காட்டியிருக்கலாம்.

அதுபோல, அம்மனிதருக்கு உதவி செய்த மனிதரை ஒரு யூத குருவாகவோ, லேவியராகவோ காட்டியிருக்கலாம்! அப்படி இயேசு காட்டியிருந்தால், யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமாரியருக்கும் யூதர்கள் அன்புகாட்ட வேண்டும் என்னும் பொருளில் ஓர் ஒழுக்க நெறியை இயேசுவால் கற்பித்திருக்க முடியும்.

ஆனால், இயேசு அப்படிச் செய்யவில்லை. அவரது உவமையில், கள்வர் கையில் அகப்பட்ட மனிதருடைய தேவை முக்கிய இடம் பெறவில்லை. மாறாக, சமாரியர்கள் யூதர்களை எப்போதுமே வெறுக்கத்தான் செய்வார்கள் என்றும், யூதர்களுக்கு உதவிசெய்ய மாட்டார்கள் என்றும் யூதர் நடுவே நிலவிய கருத்தை இயேசு புரட்டிப்போட்டார்.

யூதர்களால் இழிவாகக் கருதப்பட்ட அந்த சமாரியர்தான் கடைசியில் தாக்கப்பட்ட யூதருக்கு இரக்கமும் பரிவும் காட்டி, உதவிசெய்தார் என்பது இயேசுவின் உவமையில் அழுத்தம் பெறுகிறது.

இவ்வாறு காட்டியதால், மனிதர் பார்வையில் எது நடக்க முடியாது என்று கருதப்படுகிறதோ அது நடக்க வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியதை இந்த உவமை எடுத்துக் காட்டுகிறது. இந்த உவமைக் கதையைக் கேட்பவர்கள், யூதர்கள் உருவாக்கிய பொதுப்புத்தியை விட்டு வெளியே வர வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

எனவே, இயேசுவின் உவமையின்படி கெட்டவர் என்று கருதப்பட்ட சமாரியர் நல்லவர் என்று அவர் கற்பித்ததால் அன்று இயேசுவைச் சோதிக்க விரும்பிய யூத திருச்சட்ட வல்லுனருக்கு மட்டும் அது பாடமாக அமையவில்லை; பழமைவாதத்தின் மொத்த உருவமாக இருந்த யூத இனத்துக்கு அவர் விட்ட அறைகூவல் அது.

அதேநேரம் சமாரியன் உவமை இன்று உலகம் முழுவதும் நமக்குத் தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இன்று இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் யாரை நாம் வெறுக்கிறோமோ அந்த வெறுப்பு அர்த்தமற்றது என்பதை இந்த உவமையின் வழியாக நாம் புரிந்துகொள்வோம். இதுவே நல்ல சமாரியன் உவமைக் கதையின் ரகசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x