Published : 26 Feb 2015 10:21 AM
Last Updated : 26 Feb 2015 10:21 AM

சூரிய சந்திரரைக் கொண்டு பாலூட்டும் தாய்

சித்தாந்தங்கள் நமக்கு எட்டும், எட்டாது. எட்டாமல் போனாலும் தோஷமில்லை. அன்பு எவருக்கும் எட்டாமல் போகாது. அதுதான் நமக்கு வேண்டியது.

அந்த அன்பை, ஜகத்துக்கெல்லாம் மாதாவாக அந்த ஜகத் ரூபமாகவே இருக்கிறவளின் அன்பை, சுவாமி என்ற உயிருக்கு உடம்பாக அவளைச் சொல்லும்போதே ஆசார்யாள் தாய்ப்பாலாகக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்.

அம்பாளை அவய சரீரமாக இல்லாமல் விச்வாகாரமாக, விராட் ஸ்வரூபமாகச் சொன்னாலும் அது ஜடம் என்று சொல்ல அவருக்கு மனசு வரவில்லை. அம்பாளுடைய மாத்ருத்வத்தை அவரால் மறக்க முடியவில்லை. அதனால்தான் சமஸ்த ஜீவராசிகளுக்கும் பால் கொடுக்கிற தாயாக இந்த விராட் ஸ்வரூபத்திலேயே என்கிறார். அதாவது சூரியன் சந்திரன் இரண்டும் அவளுடைய (விராட் ரூபத்தில்) ஸ்தனங்களாக இருக்கின்றன என்கிறார்.

குழந்தைகளுக்குத் தாய் ஸ்தன்ய பானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்குங்கூட சூரிய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் இதை சயன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு ரொம்ப முன்னால், வேத காலத்திலிருந்தே தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பது நமக்குத் தெரியும்.

சூரிய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள். உயிரூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? சூரிய ரச்மியிலிருந்துதான் தாவரங்கள் ஜீவன் பெறுகின்றன என்பது தெரிந்த விஷயம். சூரிய வெளிச்சமில்லாத இருட்டான இடத்தில் விதை போட்டால் செடி வராது. தாவரங்கள் நேராகத் தாங்களே ஜீவ சத்தை சூரியனிடமிருந்து பெறுகின்றன.

அதோடு நிற்காமல் பரோபகாரமாக, இப்படி நேரே சூரியனிடமிருந்து ஜீவ சத்தைப் பெற முடியாத நமக்காகவும் தாவரங்களே நாம் அடுப்பு மூட்டிச் சமைக்கிற மாதிரி சூரிய உஷ்ணத்தில் அந்த சூரிய சக்தியையே நமக்கு ஜீரணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. சோலார் குக்கர். காய்கறிகளையும், அரிசி முதலான தானியங்களையும் நாம் சாப்பிடும்போது இந்த சூரிய பிரசாதமான சக்திதான் நமக்கு உள்ளே போய் ஜீவசத்தைத் தருகிறது.

சூரிய சக்தியாலேயே biosphere என்கிறதாக இந்த லோகம் ஜீவ லோகமாக இருக்கிறது. சூரியனுடைய வெளிச்சத்திலே ஒயாமல் ரிலீசாகிக் கொண்டேயிருக்கும் சக்தி சகல அணுக்களுக்கு உள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற்போல ஃபோடோஸிந்தஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ பிரபஞ்சத்தை நடத்துகிறது என்று இப்போது சயன்சில் சொல்வதை, எத்தனையோ யுகம் முந்தியே நம்முடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.

தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்தச் சக்தியைப் பெறுகிறதற்குத்தான் காயத்ரீ முதலான மந்திரங்களைக் கொடுத்திருக்கிறது.

சயன்சுக்கும் பல படி மேலே போய் தேக சக்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தி சக்தி, பாரமார்த்திகமான சாதனா சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து கிரகித்துக்கொள்வதற்கு காயத்ரீயைக் கொடுத்திருக்கிறது.

அங்கே சவிதா, சாவித்ரி என்று நம்மைப் பெற்றெடுத்து வாழ்வு தருகிற பிரியமான தாயாகவே சூரிய சக்தியைச் சொல்லியிருக்கிறது. இந்த சக்தியும் ஆதி சக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்கந்தான் , பாலூட்டும் அங்கம் என்கிறார் ஆசார்யாள்.

சந்திரனையும் ஏன் அப்படிச் சொன்னார்? சந்திர கிரணத்தினால் என்ன உணவு கிடைக்கிறது? அது ஜிலு ஜிலு என்று இருப்பதைப் பார்த்தால் ஆனந்தமாயிருக்கிறதே. இதுவே சாப்பாடுதான். அது மட்டுமில்லை. மூலிகைகள், மருத்துவ சக்தியுள்ள ஒஷாதி வகைகள் சந்திரிகையிலிருந்துதான் சத்து பெறுகின்றன.

சூரிய ரச்மியில் உண்டான பதார்த்தங்களை வகைதொகை இல்லாமல் சாப்பிட்டு நாம் வியாதியை உண்டாக்கிக் கொள்ளும்போது மருந்துகளைத் தேடிப் போகிறோம். மருந்துகளைச் செய்யும் மூலிகை வர்க்கம் சந்திர கிரணத்திலிருந்துதான் போஷாக்கு பெறுகிறது.

இந்த மூலிகைளுக்கு உச்சியிலே ஸோமலதையை வேதமே சொல்லியிருக்கிறது. சோமன் என்றாலே சந்திரன்தான். சோம ரசத்தை பூலோகத்தின் அமிருதம் என்றே சொல்லலாம். அந்த ஆஹுதிதான் சோம யாகங்கள் என்றே பிரசித்தமான யஜ்ஞங்களில் மையமான அம்சம். யோகிகளுக்கு சிரஸ் உச்சியில் அமிருதம் கொட்டுவதும் சந்திரனிலிருந்துதான்.

சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாக tide என்று ஏற்படுவது முக்கியமாக சந்திரனின் இழுப்பினால்தான். பருவம், பருவக்காற்று, மழை என்பவையெல்லாமே இப்படிச் சந்திரனுடன் சம்பந்தப்பட்டுவிடுகின்றன. சூரிய ரச்மிகள் சமுத்திர ஜலத்தை ஆவியாக்கி அந்த ஆவிதான் மழையாகப் பொழிந்து தானியச் செழிப்பு ஏற்படுகிறது.

இந்த விதத்திலும் சூரியன் நமக்குச் சாப்பாடு போட்டு உயிர் கொடுக்கிறது என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த மழையை உண்டாக்குவதில் சந்திரனுக்கே ஜாஸ்திப் பங்கு என்கிறபோது அவனுந்தான் நமக்குச் சாப்பாடு போடுகிறான் என்றாகிறது.

ஆக, அன்னபூர்ணேச்வரியாக நமக்குச் சாப்பாடு போட்டு ரக்ஷிக்கிறவள் சூரிய சந்திரர்களைக் கொண்டே பாலூட்டுகிறாள் என்பது ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது. சூரியனுடைய உஷ்ண தாரை, சந்திரனுடைய சீதள தாரை இரண்டாலும் அம்பிகை ஜீவ சமூகத்திற்கு பானம் கொடுத்து வளர்க்கிறாளென்று சொல்வது சயன்சின் உண்மைகளையே பக்தி பாஷையில் சொல்வதுதான். சூரியன் புத்தி பிரகாசத்தை உண்டாக்குகிறானென்றால் சந்திரன்தான் மனசுக்கு அதி தேவதை.

பௌர்ணமி, அமாவாசைகள் உப்பு சமுத்திரத்தில் tide உண்டாக்குகிறாற்போலவே சித்தத்தின் எண்ண சமுத்திரத்திலும் பாதிப்பு உண்டாக்குவது பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. சித்தக் கோளாறு உள்ளவர்கள் விஷயத்தில் அது நன்றாகத் தெரிகிறது. அவர்களை 'lunatic' என்பது சந்திர சம்பந்தப்படுத்தி வைத்த பெயர்தான். லத்தீனில் 'luna' என்றால் சந்திரன் .

அமாவாசையில் தர்ப்பணம். அதை நிறைந்த நாள் என்பது. கிரகண காலத்தில் மந்திர ஜபத்திற்கு வீர்யம் கூடுதலாவது முதலானவை. சூரிய சந்திரர்களுக்கு இக, பரலோகங்களின் உள்ள அநுக்ரஹ சக்தியைக் காட்டுகின்றன. அந்த அநுக்ரஹமெல்லாமும் முடிவிலே அம்பாள் கொடுக்கும் ஞானப்பாலின் சொட்டுக்கள்தான்.

இதையெல்லாம் அடக்கித்தான் “சசி மிஹிர வக்ஷேருஹ யுகம்” என்றார்.

சூரிய, சந்திரர்களைப் பரமாத்மாவின் வலது, இடது கண்களாகச் சொல்வது வழக்கம். சூரியனாயிருந்து கொண்டு உன்னுடைய வலது கண் பகல் வேளையைப் படைக்கிறது. சந்திரனாயிருந்து கொண்டு இடது கண் ராத்திரியைப் படைக்கிறது. நம் ஸ்தோத்திரத்திலேயே ஒரு சுலோகம் இதனைச் சொல்கிறது.

அம்பாளுடைய தாடங்கங்களாக சூரிய சந்திரர்களை சகஸ்ரநாமத்தில் சொல்லியிருப்பதையும் முன்னாடி சொன்னேன். இதெல்லாவற்றையும் விட நம்மைக் குழந்தைகளாக்கி அவள் பால் கொடுக்கிற வக்ஷேருஹங்களாக அவற்றைச் சொல்வதே நெஞ்சைத் தொடுகிறது.

(தெய்வத்தின் குரல் மூன்றாம் பாகம்)





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x