Published : 26 Feb 2015 10:23 AM
Last Updated : 26 Feb 2015 10:23 AM

பேரறிஞர் யார்?- இஸ்லாம் வாழ்வியல்!

இஸ்ரவேலர்களுக்கு இறைவனால் அனுப்பட்ட தூதர்களில் ஒருவர் மூஸா (அலை). ஒரு நாள் உரையாற்றுவதற்காக மக்களுக்கு முன்னர் அவர் நின்றார்.

“மக்களில் பேரறிஞர் யார்?” என அவரிடம் கேட்டார்கள்.

“நானே பேரறிஞன்” எனப் பதில் கூறினார்.

இது குறித்த ஞானம் இறைவனிடமே உள்ளது என்றே அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் கூறாததால் இறைவன் அவரைக் கண்டித்து, “இரண்டு கடல்கள் ஒன்றிணையும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவரே உம்மைவிடப் பேரறிஞர்” எனக் கூறினான்.

“இறைவவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?” என மூஸா (அலை) கேட்டார்.

“கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து பயணம் செல்லுங்கள்! அந்த மீனை நீங்கள் தொலைத்துவிடும் இடத்தில் அவரைக் காண்பீர்கள்” என்றான் இறைவன்.

தன் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பவரை மூஸா (அலை) தம்முடன் அழைத்துக் கொண்டார். இருவரும் ஒரு மீனைக் கூடையில் சுமந்தவாறு நடக்க ஆரம்பித்தார்கள். நீண்ட தூரம் நடந்த அவர்கள் களைப்பால் ஒரு பாறையில் படுத்து உறங்கிவிட்டார்கள்.

கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தாவி நீந்திச் சென்றுவிட்டது. இருவரும் மீண்டும் நடந்தார்கள். இரவு முழுவதும் நடந்தார்கள். பொழுதும் விடிந்துவிட்டது.

“இப்பயணத்தில் பெரும் சிரமத்தை நாம் சந்தித்துவிட்டோம்; நமக்கான காலை உணவைக் கொண்டுவா?” என மூஸா(அலை) தம் பணியாளரிடம் கூறினார்.

“பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோதுதான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும். நானும் மீனை மறந்துவிட்டேன்” எனப் பணியாள் கூறினார்.

“அட! அதுதானே நாம் தேடி வந்த இடம்” என மூஸா(அலை) கூறினார்.

இருவரும் வந்த வழியே திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்தார்கள். ஆடை போர்த்தியிருந்த ஒருவரை அங்கு கண்டார்கள். அவர் பெயர் கிள்ரு; அவரைச் சந்திக்குமாறுதான் மூஸாவிடம் இறைவன் கூறியிருந்தான்.

மூஸா (அலை) அவருக்கு ஸலாம் கூறினார்.

“உம் ஊரில் ஸலாம் கூறும் பழக்கம் ஏது?” என அவர் கேட்டார்.

“நான்தான் மூஸா” என மூஸா(அலை) கூறினார்.

“இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?” என கிள்ரு கேட்டார்

“ஆம்! நீர் கற்றுள்ளதை நானும் கற்றுக்கொள்ள உம்மை நான் பின்தொடர்ந்து வரட்டுமா?” என மூஸா கேட்டார்.

“என்னுடன் உன்னால் பொறுமையாக இருக்கவே முடியாது மூஸா! இறைவன் தன் ஞானத்திலிருந்து கற்றுத் தந்ததே என்னிடம் இருக்கிறது. அதை உன்னால் அறிய முடியாது. அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உம்மிடம் இருக்கிறது. அதை என்னால் அறிய முடியாது” என கிள்ரு கூறினார்.

“உம் உத்தரவை மீறாத முறையில் இறைவனை நாடினால் என்னைப் பொறுமை உள்ளவனாகக் காண்பீர்!” என மூஸா(அலை) கூறினார்.

மூஸாவின் கோரிக்கையை கிள்ரு ஏற்றுக்கொண்டார். பயணம் செல்ல இருவருக்கும் கப்பல் எதுவும் கிடைக்கவில்லை. கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றனர். அப்போது ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் அதில் ஏற்றிக்கொள்ளுமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் கிள்ருவை அறிந்திருந்ததால் கட்டணமே இல்லாமல் இருவரையும் கப்பலில் ஏற்றிக் கொண்டார்கள்.

ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் இரண்டு முறை கொத்தியது.

“மூஸாவே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என் ஞானமும் உன் ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறையும்' என கிள்ரு கூறினார். சற்று நேரத்தில் கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்ரு கழற்றி எடுத்தார்.

இதைக் கண்ட மூஸா(அலை), “நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிவந்த இந்த மக்கள் மூழ்கட்டும் என, வேண்டும் என்றே கப்பலை உடைத்துவிட்டீரே?” எனக் கூறினார்.

“மூஸாவே! உன்னால் என்னுடன் பொறுமையாக இருக்கவே முடியாது என நான் முன்பே உன்னிடம் சொல்லவில்லையா” என கிள்ரு கேட்டார்.

“நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றப்படுத்தாதீர், இனி அவ்வாறு நடக்காது” என மூஸா(அலை) கேட்டுக் கொண்டார்.

கடல் வழிப் பயணத்தை முடித்து இருவரும் தரையில் நடந்து போய்க் கொண்டிருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிள்ரு அவர்களில் ஒருவனின் தலையை மேலிருந்து பிடித்து தம் கையால் திருகித் தலையை முறித்தேவிட்டர்.

உடனே மூஸா (அலை), “யாரையும் கொலை செய்யாத, ஒரு பாவமும் அறியாத தூய ஆத்மாவைக் கொன்றுவிட்டீரே?” எனக் கேட்டார். “மூஸாவே! உன்னால் என்னுடன் பொறுமையாக இருக்கவே முடியாது என உம்மிடம் நான் முன்பே கூறவில்லையா?” என கிள்ரு சற்றுக் கண்டிப்புடன் சொன்னார்.

இதுவும் மறதியாகவே நடந்துவிட்டது என மூஸா (அலை) கூற இருவரும் சமாதானமாகி நடந்து போய்க்கொண்டிருந்தனர். இறுதியாக இருவரும் ஒரு கிராமத்தைச் சென்றடைந்து அவர்களிடம் தங்களுக்கு உணவு கேட்டார்கள். அந்த மக்களோ அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள்.

அந்தக் கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தது. கிள்ரு தம் கையால் அச்சுவரைச் சரிசெய்து நிலைநிறுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மூஸா (அலை), “நீர் விரும்பி இருந்தால் இதற்காக ஏதாவது கூலி வாங்கி இருக்கலாமே!” எனக் கூறினார்.

இரண்டு முறை மூஸாவுக்கு மன்னிப்பு வழங்கிய கிள்ரு சட்டென்று, “இதுதான் எனக்கும் உனக்கும் இடையே பிரிவாகும்; எது குறித்து உம்மால் பொறுமையாய் இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தை உமக்கு நிச்சயம் அறிவிக்கிறேன்” எனக் கூறினார்.

“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானதாகும். அவர்களுக்குப் பின்னால் கொடுங்கோல் அரசன் ஒருவன் இருந்தான். பழுதில்லா மரக்கலங்களை எல்லாம் பலவந்தமாய் அவன் எடுத்துக் கொள்கிறான். எனவே அதைப் பழுதாக்க விரும்பினேன்.

“அச்சிறுவனின் பெற்றோர் மிகவும் நல்லவர்கள். அவன் தன் இளமையில் அவ்விருவரையும் வழிகேட்டிலும், இறைமறுப்பிலும் கொண்டுபோய்விடுவான் எனப் பயந்தோம் ஆகவே அவனைக் கொன்றோம். இன்னும், அவ்விருவருக்கும் தூய்மையாக, அன்பில் நெருக்கமாக இருப்பவனை அவ்விருவரின் இரட்சகனுக்குப் (அவனுக்கு) பதிலாகக் கொடுப்பதை விரும்பினோம்.

இச்சுவர் இந்நகரத்தில் உள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியதாகும். அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது. அவ்விருவரின் தந்தை நல்ல மனிதராய் இருந்தார். எனவே, அவ்விருவரும் வயதை அடைந்து தம் இருவரின் புதையலையும் வெளிப்படுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும் என உம் இரட்சகன் நாடினான்.

இவையனைத்தும் உம் இரட்சகனின் அருளில் உள்ளவை. என் விருப்பத்துக்கு எந்தச் செயலையும் நான் செய்யவில்லை. எதைக் குறித்து உம்மால் பொறுமையாய் இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இதுதான்” என கிள்ரு கூறினார்.

பேரறிஞர் யார் என மக்கள் கேட்டபோதும் மூஸா (அலை) அவசரப்பட்டுவிட்டார்; பேரறிஞரின் கல்வி கற்கச் சென்ற இடத்திலும் அவசரப்பட்டுவிட்டார். அவர் பொறுமை காத்திருந்தால் பெரும் பயன் அடைந்திருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x