Published : 10 Dec 2014 11:18 AM
Last Updated : 10 Dec 2014 11:18 AM

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் டிரா

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-டெல்லி டைனமோஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணி அபாரமாக ஆடிய அளவுக்கு தவறுகளையும் செய்தது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற சென்னை அணி 2-வது பாதி ஆட்டத்தில் தேவையில்லாமல் தடுப்பாட்டம் ஆடி வெற்றியை பறிகொடுத்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இடது கார்னரில் இருந்து புருனோ பெலிஸாரி உதைத்த பந்து மிகத்துல்லியமாக கோல் வலைக்குள் விழ, சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 28-வது நிமிடத்தில் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்ற ஜேஜே லால்பெக்குலா, வலதுபுறத்தில் இருந்த கப்ராவுக்கு பாஸ் செய்து விட்டு பெனால்டி ஏரியாவுக்குள் விரைந்தார்.

அப்போது கப்ரா துல்லியமாக பந்தை கிராஸ் செய்ய, அசத்தலாக கோலடித்தார் ஜேஜே. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் டெல்லி அணியின் மாற்று ஆட்டக்காரர் டெல் பியாரோ கோலடிக்க, பின்னர் அந்த அணி உத்வேகம் பெற்றது. அதேநேரத்தில் சென்னை அணி தடுப்பாட்டம் ஆடியது பின்னடைவாக அமைந்தது.

88-வது நிமிடத்தில் 18 யார்ட் பாக்ஸ் அருகே டாஸ் சான்டோஸ் பந்தை தலையால் முட்டிவிட, அப்போது வேகமாக முன்னேறிய டெல்லி கேப்டன் ஹன்ஸ் முல்டர் கோலடித்தார். இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது. 90-வது நிமிடத்தில் சான்டோஸ் அடித்த மற்றொரு பந்து கோல் கம்பத்தின் நுனிப் பகுதியில் பட்டு வெளியேறியது.

கோவா-கொல்கத்தா இன்று மோதல்

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கோவாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட கோவா, முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்கலாம். கொல்கத்தா அணியோ, அரையிறுதியை உறுதிசெய்ய குறைந்தபட்சம் டிரா செய்யவேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை கொல்கத்தா இந்த ஆட்டத்தில் தோற்குமானால் டெல்லி அணி அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x