Published : 06 Nov 2014 11:41 AM
Last Updated : 06 Nov 2014 11:41 AM

ஆறுமுகம் ஆன பொருள்

ஒரு கடவுளைப் பல பெயர்களால் பூஜிப்பது இந்து மதத்தில் வழக்கமான ஒன்று. ஒவ்வொரு பெயரும், அந்தக் கடவுள் அவதாரக் காரணம், அற்புத சக்தி, உடல் தோற்றம், ஏந்திய ஆயுதம் என இன்னும் பல காரணங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

முருகன்

‘முருகன்’ என்றால் அழகுடையவன் என்று ஒரு பொருள். சிவபெருமானின் நெற்றிக்கண் பொறிகள், பார்வதியின் சரீரமான சரவணப் பொய்கையில் சேர்ந்தவுடன் முருகன் தோன்றியதால், சிவபெருமானின் என்றும் மாறா இளமையையும், தேவியின் அழகையும் சேர்த்துப் பெற்றார் முருகப் பெருமான்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலை முறையே புரியும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் அம்சமாகக் கருதப்பட்டு, ‘முருகன்’ என அழைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதாவது முருகாவிலுள்ள ‘மு’ முகுந்தனையும் (விஷ்ணு), ‘ரு’ ருத்திரனையும் (சிவன்), ‘க’ கமலனையும் (பிரம்மா) குறிப்பதாக ஒரு கருத்து உள்ளது.

கார்த்திகேயன்

பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்திகைப் பெண்கள் (கிருத்திகா நட்சத்திரங்களின் அதிதேவதைகள்) என்னும் அறுவர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் ‘கார்த்திகேயன்’ என்று பெயர் வந்தது.

ஆறுமுகன் (அ) ஷண்முகன்

சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார். முதல் ஐந்து முகங்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன். ஆகையால், அம்மையின் ஒரு முகமும் அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்று ஒரு விளக்கம் உள்ளது.

ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது.

பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஒரு முகம், பக்தர்களின் அறியாமையை ஒழித்து அறிவை நிலைநிறுத்த ஒரு முகம், பக்தர்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒரு முகம், யாக யக்யங்களைச் செய்யத் துணை புரிய ஒரு முகம், நல்லவர்களைக் காத்துத் தீயவர்களைத் தண்டிக்க ஒரு முகம், மற்றும் பக்தர்களிடம் அன்பு என்ற சுடரை ஏற்றி இன்பத்தை நிலைநிறுத்த ஒரு முகம் என ஆறுமுகங்களுக்கும் தனித்தனியான முக்கியத்துவம் உள்ளன.

வேலாயுதன் (அ) வேலவன்

கிரவுஞ்ச மலையாக நின்ற தாரகாசுரனை அழிக்கவும், சூரபத்மனை அழிக்கவும், தாய் பார்வதி தேவியிடமிருந்து ‘வேல்’ எனும் ஆயுதத்தைப் பெற்றார். ஆயுதமாக வேல் வைத்திருப்பதால் ‘வேலாயுதன்’ என அழைக்கப்படுகிறார். வேல் மூலம் பக்தர்களின் அறியாமையை அழித்து அறிவை நிலைநாட்டுவதாக நம்பிக்கை உள்ளது.

கந்தன் (அ) ஸ்கந்தன்

‘ஸ்கந்த’ என்னும் வார்த்தைக்கு, சம்ஸ்கிருதத்தில் ‘வெளிப்படுவது’ என்று அர்த்தம். மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ‘ஸ்கந்தன்’ என்ற பெயர் உண்டாயிற்று. ‘ஸ்கந்தன்’ தமிழில் ‘கந்தன்’ என மருவியுள்ளது.

குகன் (அ) குஹன்

மலைக்குகைக்குள் வசிப்பவன் குகன் என்று அழைக்கப்படுவான். முருகப் பெருமான் பக்தர்களின் இதய குகைக்குள் என்றும் வசிப்பதால் ‘குகன்’ என்று அழைக்கப்படுகிறார். பக்தர்களின் இதயத்தில் வசித்து, எண்ணங்களை மேம்படுத்தி, பக்தர்களை நல்வழியில் நடத்திவைப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

காங்கேயன்

சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்த பிறகே முருகனாக தோன்றியதால், முருகருக்குக் கங்கை நேர் தாயார் ஆகிறாள். அதனால் முருகன் ‘காங்கேயன்’ என்று அழைக்கப்படுகிறார். மேலே விவரித்துள்ள பெயர்களைத் தவிர முருகனுக்கு, ‘சுப்ரமண்யர்’, ‘தண்டாயுதபாணி’, ‘சரவணபவ’, ‘சுவாமிநாதன்’, ‘குமாரஸ்வாமி’, ‘ஞானஸ்கந்தன்’ என இன்னும் பல பெயர்கள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x