Last Updated : 09 Jun, 2016 11:14 AM

 

Published : 09 Jun 2016 11:14 AM
Last Updated : 09 Jun 2016 11:14 AM

திருத்தலம் அறிமுகம்: அடியவர்களின் இடர் களைபவர்

கடலுக்கும் கரை உண்டு. ஆனால், அந்தத் திருக்கயிலைப் பதியான சர்வேஸ்வரனின் கருணைக் கடலுக்குக் கரையும் இல்லை. எல்லையும் இல்லை. காலமறிந்து தன் பக்தர்களின் குறைகளைப் பரிவுடன் போக்கி அருள்பவன் பரமேஸ்வரன்.

அன்பினால் அகம் குழைந்து தன்னை வழிபடும் அடியவர்களுக்காகவே ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாமல் பல்வேறு திருநாமங்களில் புராதனமான பல திருக்கோயில்களில் நித்யவாசம் செய்து எழுந்தருளி அருள் பாலிக்கின்றான் அம்பிகைபாகன்.

இவ்வாறெல்லாம் சிவனடியார்களால் ஆராதிக்கப்படும் சிவபெருமானின் மிகப் புராதனமான ஒரு அரிய சிவாலயம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள கீழ்பசார் என்னும் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

கொற்றவை சிற்பம்

பிற்காலச் சோழ மன்னர்களின் கட்டிடக் கலையையும் விஜயநகரப் பேரரசர்களின் கலை நுணுக்கங்களையும் கொண்ட இத்திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம் (விஷ்ணு துர்க்கை) கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னர் காலக் கட்டிடக் கலையை உணர்த்தும் விதமாக வேதிகை, கண்டம், பட்டிகை மற்றும் முப்பட்டைக் குமுதம் ஆகிய வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது இத்திருக்கோயில். கால வெள்ளத்தில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு தற்போது ‘சிவன்மேடு’ என்று அழைக்கப்படும் இயற்கை எழில் சூழ்ந்த கீழ்பசார் கிராமத்தின் வயல்வெளிகளுக்கு நடுவே இத்தலம் அமைந்துள்ளது.

முற்றிலும் சிதிலமடைந்த நிலையிலிருந்த இத்திருக்கோயிலில் பொன்னார் மேனியனின் அழகான, கம்பீரமான லிங்கத்திருமேனி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. சகஸ்ரகோடி நேத்ரங்கள் கொண்டு அருள்பாலிக்கும் இத்தல ஈசனின் திருநாமம் ‘ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்’ என்பதையும் அம்பிகையின் திருநாமம் ‘ஸ்ரீமரகதாம்பிகை’ என்பதையும் இத்திருக்கோயில் குறித்த ஆய்வுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த மண்மேட்டிற்கு அருகே இத்தலத்தின் புண்ணிய தீர்த்தமான ‘சந்திர தீர்த்தம்’ இருந்தமைக்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன.

சந்திரனைப் பிறையில் சூடியவன்

சந்திரனுக்கு விமோசனம் அளித்து சந்திரனைத் தன் தலையில் பிறையாகச் சூடிக் காட்சியளித்து சர்வேஸ்வரன் ஆட்கொண்டதால் கீழ் பசார் திருத்தல ஈசனுக்கு ‘ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்’ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது.

சந்திர பகவானுக்கு அருளிய திருக்கோலத்தில் காட்சி தரும் இத்தலத்தில் எம்பெருமானை வணங்கும் அன்பர்கள் மனநலமும் நெஞ்சுரமும் பெறலாம் என்றும் குடும்பச் சூழ்நிலைகளால் நிம்மதியின்றி அவதியுறுபவர்களும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி மீள முடியாமல் தவிப்பவர்களும் தங்கள் குறைகள் நீங்கப்பெற இத்திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள நன்மைகள் உண்டாகும் என்றும் நம்பிக்கை உள்ளது.

சுக்ரதோஷ நிவர்த்திக்குப் பரிகாரத் தலமாகவும் விளங்கும் இத்தலத்தின் ஈசனை, வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வழிபடுவதாக ஐதீகம்.

புனர்நிர்மாணப் பணிகள்

பல நூறு ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பாழடைந்திருக்கும் இத்திருக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்றுவருகின்றன. புனர் நிர்மாணப் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அன்று சிவனடியார்கள் சூழ மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

மன்னர்களின் காலத்தில் உன்னத நிலையிலிருந்து இத்திருக்கோயிலின் நிலை கண்டு மனம்வருந்திய இப்பகுதியைச் சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மனதில் நினைத்தாலே பல தலைமுறைகளுக்குப் புண்ணிய பலன்களை அளிக்கக்கூடிய இம்மாபெரும் திருப்பணி விரைவில் முடிக்கப்பட்டு மன்னர்கள் கால மகோன்னத நிலையை இத்திருக்கோயில் மீண்டும் பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். காஞ்சி ஸ்ரீமஹா பெரியவரின் நித்ய ஆராதனை மூர்த்தியான ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரின் திருநாமத்தைக் கொண்டது இத்தலம்.

திருத்தலம் செல்லும் வழி

திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் வழி நொளம்பூர், ஆட்சிப்பாக்கம் சாலையில் கீழ்பசார் பேருந்து நிலையத்தில் இறங்கி இத்திருத்தலத்தை அடையலாம். திண்டிவனம் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இத்தலத்திற்கு செல்ல அரசு பேருந்துகளும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x