Last Updated : 13 Nov, 2014 11:28 AM

 

Published : 13 Nov 2014 11:28 AM
Last Updated : 13 Nov 2014 11:28 AM

கிறிஸ்தவத்தைக் கண்டடைந்த ஞானி

கிறிஸ்தவத் திருச்சபையின் முன்னோடிகளுள் ஒருவர் எனப் போற்றப்படுவர் ஹிப்போ நகர புனித அகஸ்டின் (Augustine of Hippo).

இவர் கி.பி. 354-ல் அல்ஜீரியாவில் உள்ள சூக் அஹ்ராஸ் நகரில் ஒரு மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தார். வட ஆப்பிரிக்கப் பகுதியான இது பண்டைய காலத்தில் ரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அகஸ்டின் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. அவருடைய முன்னோர் அப்பகுதியின் முக்கிய இனக் குழுக்களான பெர்பர், லத்தீன், பெனீசிய ஆகிய இனங்களின் கலப்பில் தோன்றியவர்களாக இருக்கலாம் எனப் பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

இவரது குடும்பம் ரோமப் பேரரசில் செல்வாக்குப் பெற்ற குடும்பமாக இருந்தது. அதனால் இளம் பிராயத்திலேயே அகஸ்டீனிக்கு நல்ல கல்வி கிடைத்தது. தனது 11-ம் வயதிலேயே மதாவ்ருஸ் என்னும் நகரத்தில் லத்தீன் மொழியின் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் கற்றறிந்தார். அதுமட்டுமல்லாது அவர்கள் குடும்பம் பின்பற்றிய பாகன் (Pagan) மதத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அங்கு கற்றார்.

இளமையின் பலவீனம்

நண்பர்களுடன் சேர்ந்து பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் பழங்களைத் திருடும்போதுதான் முதன்முதலாகப் ‘பாவம்’என்ற ஒன்றை உணர்ந்ததாக, அவர் தன் வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார். இச்சம்பவத்துக்குப் பிறகு மெய்யியலில் அவருக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. இதற்கிடையில் அவருக்குப் பதினேழு வயதானபோது, கல்வி கற்பதற்காக கார்த்தேஜ் என்ற நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு இளமைப் பருவம் அவர் மனத்தைப் பலவீனப்படுத்தியது. இளமைப் பருவத்துக்குரிய பிரச்சினைகளில் அவர் உழன்றார். பாலுணர்வின் பிடியில் சிக்கித் தவித்தார். முறை தவறிய உறவுகளில் ஈடுபட்டுச் சில தவறுகளைச் செய்ததாக, தன் வாழ்க்கைக் குறிப்பில் அவர் சொல்கிறார். அகஸ்டினின் இந்த நடவடிக்கைகள் அவரது தாயாருக்கு வருத்தம் அளித்தன. அது மட்டுமல்லாமல் முறைப்படி திருமணம் முடிக்காமல் ஒரு பெண்ணுடன் அங்கு வாழ்ந்தார். அந்த உறவின் மூலம் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு, ‘கடவுளின் குழந்தை’ (ஆதேயோதாத்துஸ்) எனப் பெயரிட்டார்.

ஆசிரியர் பணி

அகஸ்டின் தன் படிப்பை முடித்த பிறகு, சில காலம் லத்தீன் இலக்கணம் கற்பித்தார். அதன் பிறகு கார்த்தேஜ் நகருக்குச் சென்று, பேச்சுக் கலைக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். அங்குச் சில காலம் பணியாற்றிய அவர், பிறகு ரோம் நகருக்குச் சென்று ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் மணிக்காயிஸ (Manichaeism) சமயத்தைத் தீவிர ஈடுபாட்டுடன் பின்பற்றினார். அந்தச் சமய நண்பர்களின் தொடர்பால்

மிலன் நகருக்கு ஆசிரியப் பணி ஆற்றச் சென்றார். ஆனால், கொஞ்ச காலத்தில் மணிக்காயிஸ சமயத்தைப் பின்பற்றுவதில் இருந்து விலகினார். சில காலம் நியோ-பிளோட்டனிஸத்தின் கருத்துகள் அவருள் தெளிவை உண்டாக்கின. ஆனால், தாயின் விருப்பதுக்கிணங்க இறுதியாக அவர் கிறித்துவத்தை ஏற்றார்.

இதற்கிடையில் அவரது தாயின் வற்புறுத்துதலால், அவர் சொன்ன ஒரு பெண்ணையும் மணக்க முன்வந்தார். திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அகஸ்டின் மனம் மாறித் தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்தார்.

ஆன்மிக ஆசிரியர்கள்

அகஸ்டின் சிறு வயதில் இருந்தே ஆன்மிகத் தேடலால் உந்தப்பட்டவர். தொடக்கத்தில் ரோமத் தத்துவ ஆசிரியர் மார்க்கஸ் ஜூலயஸ் சீசரின் ‘ஹோர்த்தேன்சியுஸ்’ (Hortensius - Now lost) என்னும் நூலைப் படித்தார். இந்த நூல ஆன்மிகம் தொடர்பான அடிப்படைக் கேள்விகளை அவருள் எழுப்பியது.

பிறகு அவருடைய இளமைக் காலத்தில் ஈரானிய தீர்க்கதரிசியான மணி என்பவரின் கருத்துகளின் மூலம் கவர்ந்திழுக்கப்பட்டார். அவர் தோற்றுவித்த மணிக்காயிஸத்தையும் பின்பற்றினார். பிறகு பிளோட்டோவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். இறுதியில் மிலன் நகர அம்புரோஸ் என்னும் முக்கியமான கிறிஸ்தவப் பேராயர் அகஸ்டினுக்கு கி.பி. 387-ல் திருமுழுக்கு அளித்தார். அம்புரோஸின் கருத்துகள் அகஸ்டினின் மனத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றனார்.

கிறித்துவத் திருச்சபை முன்னோடி

கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகு அதன் இறையியல் கொள்கைகளை விளக்கிப் பல நூல்களை எழுதியுள்ளார். அதன் முக்கியக் கொள்கையான பிறப்புநிலைப் பாவம் (Original sin), போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப் போர் கொள்கை (Just war theory) ஆகியவை அகஸ்டினின் முக்கியக் கருத்துகள். மேலும் இவரது நூலான ‘கடவுளின் நகரம்’(City of God) கிறித்துவச் சிந்தனைக்கு வலுச்சேர்த்து வருகிறது. அவர் எழுதிய ‘வாக்கு மூலம்’ (Confessions) என்னும் தன் வரலாற்றுக் குறிப்பு நூல் கிறித்துவ இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும் இருந்துவருகிறது. புனித அகஸ்டினின் திருநாள் ஆகஸ்டு மாதம் 28-ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள், விண்ணகத்தில் அவர் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x