Last Updated : 02 Mar, 2017 10:19 AM

 

Published : 02 Mar 2017 10:19 AM
Last Updated : 02 Mar 2017 10:19 AM

குரு பாடிய சீடன்: உத்தமூர் சுவாமி 120

இந்தியாவின் சம்ஸ்கிருத மொழிக்கான முக்கிய மையங்களையும் வேதாந்தப் பாடங்களைக் கற்றுத்தந்த கலாசாலைகளின் வரலாற்றைப் பார்க்கும்போது, அங்கெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த உத்தமூர் வீரராகவாசாரியாரின் சுவடுகள் உண்டு. வடமொழி, தமிழ் மொழி இரண்டிலும் விற்பன்னரான இவரை அன்புடன் உத்தமூர் ஸ்வாமி என்றே அழைத்தார்கள்.

மதுராந்தகத்தை அடுத்த உத்தமூர் என்ற சிற்றூரில் நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தார். தந்தையும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். சிறு வயதிலேயே வேதம் படிக்கத் தொடங்கினார். கருடபுரம் ஸ்வாமியிடம் சம்பு நாடகக் கிரந்தங்களைக் கற்றார். திருவேங்கடாசாரியாரிடம் வியாகரணம் பயின்றார். மதுராந்தகம் பாடசாலையில் சேர்ந்து, தர்க்கத்தில் மிகச் சிறந்த விற்பன்னராக இருந்த ஸ்வச்சந்தம் ஸ்வாமியிடமே தர்க்க சாஸ்திரத்தைக் கசடறக் கற்றார். ஸ்வச்சந்தம் ஸ்வாமி திருவாரூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் பயிற்றுவிக்கச் சென்றபோது உத்தமூராரும் உடன் சென்றார்.

பாடங்களைக் கிரகிக்கும் ஆற்றல்

திருவையாறில் பிரம்மஸ்ரீ வேங்கடசுப்ரமணிய சாஸ்திரி என்ற அறிஞர், இவர் அதிவேகமாகப் பாடங்களைக் கிரகிக்கும் ஆற்றலைக் கண்டு வியந்து, பதிப்பிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதியாகவே தான் வைத்திருந்த மீமாம்ஸ கௌஸ்துபம் என்ற ஆய்வு நூலை இவருக்குப் படிக்கக் கொடுத்தார். மாலை வேளைகளில் காவிரிக் கரையில் அமர்ந்து வெவ்வேறு சம்ஸ்கிருத நூல்களைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டேயிருப்பார் உத்தமூர் ஸ்வாமி. தர்க்க சாஸ்திரங்களில் பெற்ற தேர்ச்சியால் வாதம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்த அவரை, கல்லூரியின் விவாதக் குழுவில் தொடர்ந்து இடம்பெறச் செய்தனர். சிரோமணி பாடத் தேர்வில் அன்றைய மதறாஸ் மாகாணத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். திருவையாறு கல்லூரியில் ஆய்வு மாணவராக நியமிக்கப்பட்டார்.

கோழியாலம் ஸ்வாமி என்பவரிடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார். அவர் தன்னுடைய மாணவரான உத்தமூர் ஸ்வாமி மீது பாடுவதற்காக ‘தனியன்’ எனப்படும் வாழ்த்துப் பாடலை சமஸ்கிருதத்தில் இயற்றினார்! ஒரு ஆசார்யர் தன்னுடைய சீடனுக்காகத் தனியன்களை இயற்றுவது வெகு அபூர்வம். ஸ்வாமி தேசிகரின் படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தமூர் ஸ்வாமி மிகவும் விரும்பினார். இதனால் ஊர் ஊராகச் சென்று தேசிகரைப் பற்றிப் பேச வேண்டிய பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

இப்படித்தான் கல்கத்தா நகரில் உரையாற்ற மதறாஸிலிருந்து புறப்பட்டார். இரவில் பயணம் செய்வார். பகலில் ஏதாவது ஒரு ஊரில் அல்லது சில ஊர்களில் தேசிகரைப் பற்றி உரை நிகழ்த்துவார். இப்படி உரை நிகழ்த்திக்கொண்டே பயணத்தை மேற்கொண்டு கல்கத்தா நகரை அடைய அவருக்கு நான்கு மாதங்கள் பிடித்தன! கல்கத்தாவைச் சேர்ந்த மங்கிராம் சேத் என்ற தீவிர வைணவர், ஸ்வாமிகள் அங்கிருந்து ராஜஸ்தானில் உள்ள புஷ்கரம் செல்ல யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

அங்கும் கல்விப் பணியை மேற்கொண்டார். அதற்குப் பிறகு தென்னாடு திரும்பிய ஸ்வாமிகள், திருப்பதி சமஸ்கிருதக் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுப் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரிடம் படிப்பதற்காகவே ஏராளமான மாணவர்கள் திருப்பதி கல்லூரியில் சேர்ந்தனர். புஷ்கரத்திலிருந்தும் திருப்பதி சென்று அவரிடம் படிப்பைத் தொடர்ந்தனர்.

நூற்றுக்கு நூறு

நான்கு சாஸ்திரங்களிலும் விற்பன்னரான ஸ்ரீவத்ஸாங்காசாரியார், காரப்பங்காடு வேங்கடாசாரியார், பெருக்கரணை சக்ரவர்த்தியாசாரியார் போன்ற அவருடைய மாணவர்கள் அவருக்குப் பெருமை சேர்த்தனர். தன்னிடம் பயின்ற என்.எஸ். ராமானுஜ தாத்தாசாரியார், நியாய ஸாஸ்திரத்தில் (தர்க்கம்) மிகச் சிறந்த அறிஞராக வருவார் என்று உத்தமூர் ஸ்வாமி தொடக்கத்திலேயே கூறியதைப் போலவே நடந்தது. மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பதில் மிகவும் கறாரானவர் என்று பெயர் பெற்ற ஸ்வாமிகள், ராமானுஜ தாத்தாசாரியாருக்கு எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கினார்.

என்ன இப்படி மதிப்பெண் அளித்துவிட்டீர்களே என்று கல்லூரி முதல்வர் உத்தமூர் ஸ்வாமியிடம் கேட்டார்; இதற்கும் மேல் மதிப்பெண் அளிக்க முடியாதே என்று பரவசத்துடன் குறிப்பிட்டார் ஸ்வாமிகள். மைசூர், சென்னை, ஆந்திரம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவற்றில் சமஸ்கிருத பாடத் தேர்வாளராகப் பணியாற்றினார் உத்தமூர் ஸ்வாமி.

தன்னுடைய வட இந்தியப் பயணத்தின்போது அப்பகுதி மக்களுக்கு விசிஷ்டாத்வைதச் சித்தாந்தம் பற்றி ஏதும் தெரியாமல் இருப்பதைக் கண்ட ஸ்வாமிகள், இந்தச் சித்தாந்தத்தை அவர்களிடம் பரப்பாதது வைணவர்களுடைய தவறு என்று உணர்ந்து அப்பொறுப்பைத் தானே ஏற்றார். விசிஷ்டாத்வைதத்தைப் பரப்புவதற்காக நிறைய புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகங்களைப் படித்துப் பிழை திருத்துவது, பிரசுரத்துக்கேற்ப நீளத்தைக் குறைப்பது போன்ற பணிகளை முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. பாஷ்யம் மனமுவந்து செய்தார்.

விசிஷ்டாத்வைதத்தைப் பரப்புவதற்காக, ‘விசிஷ்டாத்வைத பிரசாரணி சபா’ என்ற அமைப்பை வி.டி. கிருஷ்ணமாசாரி, வழக்கறிஞர் டி. ராமசுவாமி ஐயங்கார், அனந்தசயனம் ஐயங்கார் ஆகியோர் தொடங்கினர். அதில் ஸ்வாமிகள் எழுதிய நூல்கள் முன்னுரிமை பெற்றன.

சீனாவில் பாடநூல்

உத்தமூர் ஸ்வாமி, சதஸ் என்று அழைக்கப்படும் விவாத மன்றங்கள் பலவற்றில் பங்கேற்றார். மன்னார்குடியில் பங்கேற்ற அத்வைத அறிஞர்கள், உத்தமூர் ஸ்வாமி எழுதிய பரமார்த்த பூஷணம் என்ற 1,000 பக்க நூலிலிருந்து அத்வைதத்தின் நுட்பங்களையும் சிறப்புகளையும் தெரிந்துகொண்டதாகக் கூறி அவரைப் பாராட்டினர். சீன நாட்டின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் வேதாந்தம் பயிலும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஸ்வாமி எழுதிய நூல் பாட புத்தகமாகவே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தத்தை விரிவாக விளக்கும் நூல்களில்கூட மொழிநடை மிகவும் சுருக்கமாக, எளிதில் புரியும் வண்ணம் இருக்கும் என்பது அவருடைய தனிச் சிறப்பு. அறிந்துகொள்ள வைப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், புரிந்துகொள்ள வைப்பதும் என்று ஜி.கே. செஸ்டர்டன் எழுதியதற்கேற்ப ஸ்வாமிகள் செயல்பட்டிருக்கிறார்.

சித்தாந்தங்களில் வைணவம் அல்லாதவற்றை ஏற்க மறுத்தாலும், அக்கருத்துள்ளவர்களுடன் நட்பும் அன்பும் பாராட்டியே நயமாகக் கருத்துகளை உரைப்பார். இதனால் அறிஞர்களுக்கு அவரிடத்தில் அன்பும் மதிப்பும் மேலிட்டது. பிற பிரிவு சித்தாந்த வழிமுறையை ஏற்க மறுத்து விவாதிக்கும்போதுகூட அவர்களுடைய மனம் புண்படும் வகையில் ஒரு முறைகூட அவர் வாதிட்டதே இல்லை என்பதை காஞ்சி பரதாச்சார்யரே குறிப்பிட்டுள்ளார். மயிலை சமஸ்கிருதக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு முறை பேசிய பரமாசார்ய ஸ்வாமிகள், உத்தமூராரைப் போல பாண்டித்தியம் மிக்க அறிஞரை இதுவரை தான் கண்டதே இல்லை என்று மனமுவந்து பாராட்டினார். 1960-ல் சமஸ்கிருத மொழிக்கான விருதை மத்திய அரசு உருவாக்கி, அதை யாருக்குக் கொடுக்கலாம் என்று பிரம்மஸ்ரீ

கே. பாலசுப்ரமணிய ஐயரிடம் ஆலோசனை கேட்டது. அவர் சிறிதும் தயங்காமல் உத்தமூர் ஸ்வாமியின் பெயரைக் கூறினார். ஸ்ரீ வைணவர்களின் வழிகாட்டி உத்தமூர் ஸ்வாமி என்று கோஷ்டிபுரம் ஸ்வாமி பாராட்டியிருக்கிறார். வேதாந்த தேசிகர் இயற்றிய தத்வமுக்தாகலாப, சர்வார்த்த சித்தி என்ற இரு நூல்களையும் படிக்க உத்தமூர் ஸ்வாமி எழுதிய ஆலாப்யலாபா என்ற விளக்க உரை பேருதவியாக இருக்கிறது என்று திருக்குடந்தை ஆண்டவன் சாதித்திருக்கிறார். தேசிகரின் நூல்களைப் புரிந்துகொள்ளப் பல்வேறு நூல்களை இயற்றிய ஸ்வாமிகளுக்கு மயிலாப்பூரில் உள்ள தேசிகன் சன்னிதியில் நடந்த நிகழ்ச்சியில் ‘அபினவ தேசிகர்’ என்ற பட்டத்தை அறிஞர்கள் அளித்து மகிழ்ந்தனர்.

திருப்பாவைக்கு இன்னொரு விளக்கம்

திருப்பாவை வைணவர்கள் அன்றாடம் ஐந்து வேளை நிகழ்த்த வேண்டிய மதக் கடமைகளைக் கூறுகிறது என்று அவர் அளித்த விளக்கம் தனித்துவமானது. உத்தமூராரின் திருப்பாவை விளக்கவுரையில் ஒரு பக்கத்தை மட்டும் படித்தால், ஒரு மாதத்துக்கு அதிலிருந்து பொருள் சொல்லிக்கொண்டே போகலாம் என்று திருக்கள்ளம் ஸ்வாமி வியந்து பாராட்டியிருக்கிறார். 1953-ல் சென்னையின் மூன்று வெவ்வேறு இடங்களில் திருப்பாவை உபன்னியாசம் நிகழ்த்திய உத்தமூரார், மொத்தம் மூன்று மணிநேரம் பேசியிருக்கிறார்.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். திவ்வியப் பிரபந்தத்துக்கு அவர் எழுதிய உரை மட்டும் 5,700 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. மற்றவர்களுடைய புத்தகங்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகள் அவருடைய மேதமையைக் காட்டுவன. அவற்றைத் தொகுத்தாலே விசிஷ்டாத்வைதத்தின் சிறப்புகளை வெளிக் கொண்டுவரும் அளவுக்கு இருக்கின்றன. ஸ்வாமி சிறந்த கவிஞருமாவார். தனது தந்தைக்கும் கற்ற பிற அறிஞர்களுக்கும் கடிதங்களைக் கவிதையாகவே எழுதி அனுப்பியிருக்கிறார்.

உத்தமூர் ஸ்வாமியின் 120-வது பிறந்த நாள், இந்த ஆண்டு ஜனவரி 20-ம் நாள் கொண்டாடப்பட்டது. அவருடைய ஆக்கங்கள் பற்றிய கருத்தரங்குகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத மற்றும் வைணவத் துறைகள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x