Published : 14 Feb 2017 10:46 AM
Last Updated : 14 Feb 2017 10:46 AM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 8: கிரக பார்வை என்றால் என்ன?

கிரகப் பார்வை

ஒளியின் ஆதி மூலம் என்று கூறப்படும் சூரியனைச் சுற்றி வரும் ஏழு கிரகங்களும் சரிவிகித கால அளவில் சுற்றி வருகின்றன. சூரியன் மூலம் கிரகிக்கும் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறது என்பதை தற்கால அறிவியலும் ஒத்துக்கொள்கிறது.

ஜோதிடத்தில் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டே அதன் பார்வைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜோதிடத்தில் எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை அல்லது சம சப்த பார்வை இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கூறப்படும் சம சப்த பார்வை என்பது என்ன என்பதை சற்று விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது புவி மாயா கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை விஷயம். அதாவது பூமியில் இருந்தே கிரகங்களின் நிலைகள் கணிக்கப்பட்டு பின்னர் அதனைக் கொண்டு ஜோதிட விதிகள் உருவாக்கப்பட்டன. அது போல பார்வைகள் என்பதும் புவியை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு கிரகத்திற்கும் இருக்கும் பார்வை என்பது அந்த கிரகமே கண்கள் கொண்டு பார்க்கிறது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜோதிடம் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. சமஸ்கிருதத்தில் கிரக பார்வை என்பதை 'கிரக திருஷ்டி' என்று சொல்வார்கள். எந்த கிரகத்திற்கும் கண்கள் கிடையாது. சூரிய ஒளியை எந்த அளவில் பூமிக்கு செலுத்துகிறது என்பதே பார்வை.

ஒரு பொருள் அல்லது மனிதன் நம்மை பார்க்கிறான் என்பதன் பொருள் நாமும் அதை பார்க்கிறோம் என்றே பொருள்படும். இதை வேறு விதமாக சொல்வதென்றால், ஒரு பொருளை எப்போது நம் கண்களால் பார்க்க முடியும்? அந்த பொருள் ஒளியை பிரதிபலித்தால் மட்டுமே அந்த பொருளை காண முடியும் என்கிறது இயற்பியல். அது போலவே ஒரு கிரகம் பிரதிபலிக்கும் ஒளியானது பூமிக்கு கிடைகிறது என்றால், அந்த கிரகத்தை நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி கொண்டு எளிதில் காண முடியும் என்பது தானே அர்த்தம்.

ஏழாம் பார்வை

7 ம் பார்வை என்பது எல்லா கிரகங்களுக்கும் இருக்கிறது என்கிறது ஜோதிடம். இதன் அர்த்தம், நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி துணை கொண்டு. அதாவது 180 பாகை அல்லது நேர் கோட்டில் அந்த கிரகத்தை எளிதில் பார்க்க முடியும் என்பதுதான். இதில் சூட்சுமம் என்னவெனில் நமது கண்கள் 180 பாகை அல்லது நேர்கோட்டில் மட்டுமே பார்வை செலுத்தும் என்பதே.

மேலும் தெளிவாக சொன்னால், இந்த ராசியில் இருந்து இந்த பாகை அளவில் பார்க்கும் போது, குறிப்பிட்ட கிரகம் தெரியும் என்பதே கிரக பார்வை.

ஆனால் சிலர் கிரகங்களுக்கு கண்கள் உள்ளன. அவைகள் தம் கண்கள் கொண்டு பார்க்கிறது என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே அதற்குக் காரணம்

(மேலும் அறிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x