Last Updated : 09 Feb, 2017 10:34 AM

 

Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM

நகரங்களில் காஞ்சி தெய்வங்களில் காமாட்சி: இன்று கும்பாபிஷேகம்

‘நகரேஷு காஞ்சி’ என்று புராதனத்திலும் கோயில்களின் நகரம் என இன்றும் கொண்டாடப்படும் காஞ்சி மாநகரில் நடுநாயகமாக தேவி எழுந்தருளியிருக்கும் ஆலயமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. ஏறக்குறைய 25, 30 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும் வைபவமாக வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது.

தெய்வங்களின் பொற்பாத தரிசனத்தை பக்தர்களுக்கு அளிக்கும் ஆலயங்கள் அரிது. அப்படிப்பட்ட அம்பிகையின் பாத தரிசனத்தை பக்தர்களுக்கு வழங்கும் ஆலயமாகக் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. பாத தரிசனத்தின் பெருமையை சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் மிகவும் விரிவாக, மும்மூர்த்திகளும் வழிபடும் ஆதி சக்தி சொரூபமாக தேவி விளங்குவதை பார்க்க முடியும் என்கிறார் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் குருக்கள் நடராஜ சாஸ்திரி.

ஜெய ஸ்தூபியும் ஸ்ரீ சக்கர வழிபாடும்

புராண காலத்தில் பண்டகாசுரன் என்னும் அரக்கனை சிறுமி வடிவத்தில் தோன்றி சம்ஹாரம் செய்து பின், காமாட்சி அன்னையாக பிரத்தியட்சம் தரும் ஆலயம் இது. அம்பிகை, சிறுமியின் வடிவத்தைத் தாங்கி பண்டகாசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை இன்றைக்கும் சொல்கிறது, ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விஜயஸ்தம்பம்.

காமாட்சியின் கோபக் கனலை தணிக்கவே இந்தக் கோயிலில் ஆதி சங்கரரால்  சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்துக்கே அபிஷேகம், வழிபாடு அர்ச்சனை எல்லாம் நடைபெறுகின்றன என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.

பழமை மாறாத புதுமை

திருக்கோயிலின் பழமை மாறாமல் பஞ்சகங்கா தீர்த்த குளம், அர்த்த மண்டபம், காயத்ரி மண்டபம், ஊஞ்சல், வஸந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், கனு மண்டபம், வாகன மண்டபம், கோசாலை, சுக்ரவார மண்டபங்கள், ரிஷி கோபுரம், த்வஜ ஸ்தம்ப மண்டபம், திருமடப்பள்ளி, வெளிப் பிராகாரம் ஆகியவை அவற்றிற்குரிய ஆதாரமான பழமை மாறாதவண்ணம் புதுப் பொலிவோடு காட்சியளிக்கின்றன.

சாசனங்களில் கிடைத்த வரலாறு

மகா கும்பாபிஷேகத்திற்காகத் தொடங்கிய திருப்பணிகளில் பல வரலாற்றுப் பெருமைகளும் பல சாசனங்களின் மூலமாகக் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார் திருக்கோயிலின்  கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி.

“ஆலயத்தில் இருக்கும் காயத்ரி மண்டபம், விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது என்றுதான் இதுவரை நினைத்துவந்தோம். ஆனால் இது சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டிருப்பதை அறிவிக்கும் ஒரு சாசனம் இந்த கும்பாபிஷேகப் பணிகளின்போது கிடைத்துள்ளது. அதோடு 7- ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் கிடைத்திருக்கிறது.

ராஜராஜ சோழன் காலத்து சாசனம் ஒன்றும் கிடைத்துள்ளது. `காமக்கோட்ட நாச்சியார்’ என்றே அந்தச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது. அதேபோல் `ஒரு அடிக்கு ஒரு அடி’ அளவுள்ள கல் கிடைத்தது. அவ்வளவு பெரிய கல்லைப் பயன்படுத்திக் கட்டிடங்களை அமைக்கும் முறை மிகவும் புராதன முறை. தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்கள் இதன் பழமையை முறையாக வெளிப்படுத்திச் சொல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த சாசனங்களைக் கொண்டு பார்க்கும்போது, வரலாற்று ரீதியாக மாலிக்காபூர் இங்கு வருவதற்கு முன்பாகவே இந்தக் கோயிலின் கட்டிடம் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு அதிகச் சான்றுகள் கிடைத்துள்ளன” என்கிறார் திருக்கோயிலின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி.

24 அட்சரம் 24 தூண்கள்

“பால உருவமாக அம்பாள் அவதாரம் செய்த ஸ்தலம் இது. காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. அம்பாள் காட்சி அளிக்கும் காயத்ரி மண்டபம், 24 தூண்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. இன்றைக்கும் அம்பாள் நித்ய விஸ்வரூப தரிசனம் அளிக்கும் ஸ்தலம் இது. அதிகாலையில் கோ பூஜைக்குப் பின்தான், ஆலயத்தின் அன்றாடப் பணிகள் கோயிலில் தொடங்கப்படும். ஏனென்றால் முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்றைக்கும் அம்பாளை இந்த ஆலயத்தில் வழிபடுவதாக ஐதீகம்” என்று கூறிய நடராஜ சாஸ்திரி, ஆலயத்தில் நடைபெறும் பல முக்கியமான பரிகார பூஜைகளைக் குறித்தும் நமக்கு விளக்கினார்.

திருமணமும் குழந்தைப்பேறும்

காமாட்சிக்கு முன்னால் சாற்றிய மாலையை திருமணமாகாத ஆண், பெண்ணுக்கு அணிவித்தால் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு நிர்மால்ய மாலை என்று பெயர்.

காஞ்சி காமாட்சி ஆலயம் சந்தான விருத்தி ஸ்தலமும்கூட. தசரதரின் குல தெய்வம் காமாட்சி என்பதால் புத்திரகாமேஷ்டி யாகத்தை இங்கு நடத்தியதன் பலனாகத்தான் ராம, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் பிறந்தனர் என்கிறது புராணம். சந்தான சம்பம் என்று நாபி விழுந்த இடம் உள்ளது. அதனால் இதை நாபிஸ்தலம் என்றும் கூறுவார்கள். இந்த சந்தான சம்பத்தை வணங்கிவிட்டு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பவுர்ணமியில் தீர்த்தம்

பவுர்ணமிதோறும் இங்கு நடக்கும் நவா வர்ண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரவு 10 முதல் 12 மணிவரை நடக்கும் நவா வர்ண பூஜைக்கு பக்தர்கள் முன்னதாக சங்கல்பம் செய்துகொண்டு வர வேண்டும். அன்றைக்கு மட்டுமே பூ, குங்குமத்துடன் தீர்த்தமும் பிரசாதமாக அளிக்கப்படும். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மட்டும்தான் தீர்த்தம் அளிப்பார்கள். இந்த ஆலயத்திலும் பவுர்ணமி அன்று நடக்கும் நவா வர்ண பூஜையின்போது தீர்த்தம் அளிக்கப்படும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்புகளில் அம்பாள் தங்க ரதத்தில் தரிசனம் அளிப்பாள். இதுவும் காமாட்சி கோயிலில் மிகவும் விசேஷமாக நடக்கும். மூன்று கால அபிஷேகம் நடக்கும். மாசி மக உற்சவமும் வெகு விமரிசையாக நடக்கும்.

அம்பாளின் அனுக்கிரகமும் மகா பெரியவரின் ஆசீர்வாதமும் இருப்பதால்தான் மகா கும்பாபிஷேகத்துக்கான காரியங்கள் எந்த விதமான சுணக்கமும் இல்லாமல் நடக்கின்றன என்று கோவில் குருக்களும் இதர பணியாளர்களும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x