Last Updated : 21 Jul, 2016 12:09 PM

 

Published : 21 Jul 2016 12:09 PM
Last Updated : 21 Jul 2016 12:09 PM

யஜுர் வேதத்தை முழுமைசெய்தவர்

யஜுர் வேதத்தின் முதற்பகுதியான ‘அயாதயாமம்’ என்ற ஒன்றை பூமிக்குக் கொண்டுவந்தவர் யாக்ஞவல்கியர். யஜுர் வேதத்தில் மொத்தம் 101 சாகைகள். இரண்டாவதாகக் கருதப்படும் 86 பிரிவுகளே முற்காலத்தில் வைசம்பாயன மகரிஷியிடம் அளிக்கப்பட்டிருந்தன.

அண்டத்தில் ஏற்பட்ட சப்த அலைகள் மூலம் நான்கு வேதங்களும் ரிஷிகளால் கிரகிக்கப்பட்டன. இவற்றை வியாஸர் தொகுத்து பைலர் (ரிக்) வைசம்பாயனர் (யஜுர்) ஜைமினி (சாம) அதர்வர் (அதர்வ) ஆகியோரிடம் அளித்தார்.

அந்தச் சமயத்தில் ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பூமியை அப்படியே தூக்கி, பரவெளியில் ஒளித்தான். மகாவிஷ்ணு வராக (பன்றி வடிவம்) அவதாரம் மூலம் இரு கொம்புகள் போன்ற தெற்றிப் பற்களால் பூமியைத் தூக்கி மீண்டும் அதன் இடத்தில் நிலைநிறுத்தினார்.

அந்த அசுரன் பூமியைப் பந்தாடுவான் என அறிந்த பரமொபொருள், பால்வெளியின் அதிபதியான சூரிய நாராணனிடம் யஜுர் வேதத்தின் முதல் 15 சாகைகளை விட்டு வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

மீண்டும் பூமியில் அதைக் கொண்டுவந்து சேர்க்க பகவான் விஷ்ணுவே உதவினார். வைசம்பாயனரின் சகோதரியின் கர்ப்பத்தில் அவரது மகனாக அவதாரமெடுத்தார். பெயர் யாக்ஞவல்கியர். இவர் வைசம்பாயனிரின் மருமகன் மட்டுமல்லர்: பிரதம சிஷ்யரும்கூட.

யாக்ஞவல்கியரின் கோபம்

வைசம்பாயனரும் அவரது மாணாக்கர்களும் வாழ்ந்த பகுதியை ஆண்டுவந்த அரசனுக்குத் தீராத தொழுநோய். அவ்வரசன் தனது நோயைத் தீர்த்து வைக்கும்படி வைசம்பாயனரிடம் சரணடைந்தான். மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட நீரை தினந்தோறும் ஒவ்வொரு சிஷ்யர் மூலம் வைசம்பாயனர் அளித்துவந்தார். அது பயன் தரவில்லை. அதனால் அரசனுக்கு அவர்மீது அலட்சியம் தோன்றியது.

அன்று யாக்ஞவல்கியர் முறை. ‘பூத உதகத்தை’ அரசன்மேல் தெளிக்க வெகு நேரம் காத்திருந்தார். அரசன் வரவில்லை; சினம் கொண்ட யாக்ஞவல்கியர் அந்நீரை அங்குள்ள தூண்களில் தெளித்துவிட்டுக் குடில் திரும்பினார்.

மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட அந்த நீர், தூண்களில் ஓடிய வேகத்தில் பூக்களும் தளிர்க்கொடிகளுமாய் துளிர்விட்டன. அதைக் கேள்விப்பட்ட அரசன் ஓடோடிவந்து மந்திர நீரை அளிக்குமாறு கேட்கிறான். யாக்ஞவல்கியர் மறுக்கிறார். குருநாதர் யாக்ஞவல்கியரைக் கடிந்துகொள்கிறார். யாக்ஞவல்கியர் வெளியேறுகிறார்.

ஆசிரமத்திலிருந்து வெளியேறி அன்னபானம் இன்றிக் கடுந்தவம் இருந்த யாக்ஞவல்கியருக்குக் காயத்ரி தேவி அருள்செய்கிறாள். சூரியனை நோக்கித் தவம் செய்யக் கூறுகிறாள். யாக்ஞவல்கியர் அங்ஙனமே செய்கிறார்.

அவரது தவத்தின் உஷ்ணம் தாங்கவியலாத சூரியன், முனிவரைக் குதிரையாக்கி, அலையும் தேரில் கட்டி அலையவிட்டு, தான் ஓதும் சாகைகளை இடையறாது ஓதி அதன் ஆழம் அறிந்தோதும் முறையைக் கொடுத்துவிடுகிறான். சூரிய பகவானின் ஆசிகளுடன் பூமிக்கு வந்த யாக்ஞவல்கியர் அந்தச் சாகைகளை வைத்து யஜுர் வேதத்தைப் பூர்த்திசெவிக்கிறார். அவரது பிறவிக் கடமை பூர்த்தியானது.

ஞானத்தின் கருவூலமாகத் திகழ்ந்த யாக்ஜவல்கியர், ஆத்ம ஞானம் பெண்களுக்கும் உரியது என்பதை உணர்த்தினார். பெண்களும் முக்தியடைய முடியும் என்றார். ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே. அவை கொண்ட சரீரங்கள்தான் வேறுபட்டவை. எனவே பெண்களைச் சக மனிதர்களாக பார்க்க வேண்டும் என்று கருதியவர் யக்ஞவல்கியர். மைத்ரேயி என்ற ஞானத்தை மட்டுமே தாகமாகக் கொண்ட பெண்ணை ஆத்ம தரிசனத்தை உணரச் செய்தார்.

விஷ்ணு அம்சமாகப் பிறந்த இந்த ஆத்ம ஞானி சென்னையில் வீற்றிருக்கிறார். சென்னையில் ஜமீன் பல்லாவரத்தில் சூரியன் கோயில் என்று மக்களால் அழைக்கப்படும் யாக்ஞவல்கிய சபாவில் இவர் அருள்பாலிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x