Last Updated : 01 Jun, 2017 10:05 AM

 

Published : 01 Jun 2017 10:05 AM
Last Updated : 01 Jun 2017 10:05 AM

ஆன்மிக நூலகம்: நுண்மாண் நுழைபுலம் நுவலும் நூல்

நம் பாரதத் திருநாட்டில் வரலாற்றுப் புகழ்பெற்று உலகளவில் உயர்ந்து நிற்கும் உத்தம குருமார்கள் மூவர். முதலாமவர், அத்வைத சித்தாந்தத்தின் மூலவர் ஆதிசங்கரர். பிறிதொருவர் துவைத சமயப் பிரிவை நிலைநாட்டிய தூயவர், மத்வர். மூன்றாமவர் விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடி, வைணவத் திருவாய்கள் வணங்கிப் போற்றி வாழ்த்தி மகிழும் பாஷ்யகாரர் ஸ்ரீஇராமானுசர்.

‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுறவே மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களிவளர ஆனந்தக் கனவுபல காட்டல்' என்று சுயவாழ்வைச் சுடராக்கி, வையத்து வீதியெல்லாம் ஒளி விளங்க வலம்வந்த மெய்ஞ்ஞானச் சூரியன் - பூஜ்யகுரு ஸ்ரீஇராமானுசர். பிறப்பால் உயர்ந்தவர் என்று அகங்காரம் கொள்வது எத்துணை தவறோ அத்துணை தவறு பிறப்பால் தாழ்ந்தவர் என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதுவும் என அறிவித்து அறிவுக் கிளர்ச்சி ஊட்டிய ஆன்மிகப் புயல் அவர்.

அவரது ஆயிரமாம் அவதாரத் திருநாளைச் சிறப்பிக்கும் விதத்தில், ‘ஆயிரம் காணும் அற்புதர்' என்னும் ஆன்மிகப் பொக்கிஷம் ஒன்றை ‘தி இந்து’வின் தமிழ் திசை பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. வைணவ முதலிகள் வரலாறு என்னும் முத்துமாலையில் நாயகக் கல்லாய் ஒளிரும் ஸ்ரீஇராமானுசர் அவதாரம் நிகழ்ந்திராவிட்டால் இன்று அடைந்திருக்கிற உச்சத்தை வைணவம் தொட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஸ்ரீஇராமானுசரைப் பற்றிய குறிப்புகள் குரு பரம்பரை, யதிராஜ வைபவம், பிரபந்நாம்ருதம் போன்ற வடமொழி நூல்களிலும், ஸ்ரீஇராமானுச நூற்றந்தாதி, வார்த்தா மாலை, கோயிலொழுகு, திருமலையொழுகு, திவ்யப் பிரபந்த வியாக்கியானங்கள் போன்ற தமிழ் நூல்களிலும் கல்வெட்டுகளிலும் விரவிக் கிடக்கின்றன. இவ்வாறு ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கருத்து மணிகளில் சிலவற்றை அறிஞர்கள் தேடி எடுத்துக் கட்டுரை என்னும் அணிகலனாக்கி நூல் என்னும் தங்கத் தட்டில் வைத்துத் தந்துள்ளார்கள்.

பொற்குடத்துக்குப் பொட்டு

நூலின் நுழைவாயிலில் கேள்வியப்பன் திருமலை பெத்த ஜீயரின் நேர்காணல் நின்று திருத்துழாய் அலங்காரமாய் மணக்கிறது. காலமெல்லாம் ஓய்வு ஒழிச்சல் இன்றி வேங்கடவனுக்குக் கைங்கர்யம் செய்வதே ஜீயர்களின் கடமை என்றும், பாஷ்யகாரர் இல்லையென்றால் ஸ்ரீவைஷ்ணவத் தத்துவமே இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ள பல சிந்தனைச் சுடர்கள் நம் அறிவுப் பொறிகளை ஆக்கிரமிக்கின்றன.

நான் விஷ்ணு பக்தன் என்று எவரேனும் சொன்னால் பகவான் அதில் மகிழ மாட்டான். நான் விஷ்ணு பக்தனின் பக்தன் என்றால் அதில் கற்பூரமாய்க் கரைந்துவிடுவான் அந்தக் கண்ணன். இந்தப் பணிவான பாகவதக் கைங்கர்யத்தை திருமலையில் தொழும்பாய்ச் செய்துவரும் தொண்டர்குலத் தோன்றல் கேள்வியப்பன் திருமலை பெத்த ஜீயர் பேட்டி பொற்குடத்துக்குப் பொட்டிட்டதுபோல் அமைந்துள்ளது.

நவமணிகளாய் மிகவுயர்ந்த ஒன்பது கிரந்தங்களைப் படைத்த உடையவர், தமிழில் தனியே நூலொன்றும் வடிக்கவில்லை என்றாலும் அவர்தம் தமிழ்ப் புலமை செறிவுடையது என்பதை முத்தமிழ் வளர்த்த ஸ்ரீஇராமானுசர் என்னும் கட்டுரை சிறப்பாய்ச் சித்திரிக்கிறது.

ஸ்ரீஇராமானுசர் திருக்கோட்டியூருக்குப் பதினெட்டு முறை நடையாய் நடந்து அறிந்த மறைபொருள் பற்றி முனைவர் இரா.அரங்கராஜன், இளங்கண்ணன், சுதா சேஷய்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். செய்தி ஒன்றே என்றாலும் சிந்தனைத் தடத்தில் வெவ்வேறு சுவையுடையதாய்த் திகழ்கின்றது – காவிரி நீர் ஒன்றே ஆனாலும் துறைகளின் வேறுபாட்டால் சிறப்பு வெவ்வேறாய் அமைதல்போலே. உடையவருக்குத் திருக்கோட்டியூர் நம்பி உணர்த்திய மந்திரம் எது என்பது பற்றிய ஆய்வை அரங்கராஜன் மேற்கொண்டு மணவாள மாமுனிகளின் முமூட்சுப் படி விளக்கத்தை அண்டைகொண்டு சரம சுலோகம் என்று அறுதியிடுகிறார்.

ஒளிப்பட உன்னதம்

‘ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்கான் கூறும் என்று, பேசி வரம்பறுத்த' பேராண்மையைப் பேசும் முத்து. இராமமூர்த்தியின் கட்டுரை பதினெட்டு முறை திருக்கோட்டியூர் சென்று உபதேசங்கள் கேட்டுவந்த உன்னதத்தை ஒளிப்படமாய் வர்ணிக்கிறது.

‘எதிகட்கிறைவன், யமுனைத் துறைவன், இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்' கண்டவரும் விண்டுரைக்க முடியாத கைங்கர்ய சாம்ராஜ்யம் புரிந்த காரேய் கருணைக் கடல். அவரைத் தம் ஆழ்புலமைத் திறத்தால் அர்ச்சிக்கிறார் வேளுக்குடியார்.

வடமொழியில் ஸ்ரீஇராமானுசர் படைத்த நூல்களின் சாரத்தை, தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஈரம் குறையாமல் எடுத்துத் தந்துள்ளார் எஸ்.கோகுலாச்சாரி.

மொத்தம் பதின்மூன்று பேர் விளக்கம் எழுதியுள்ள 545 பிரம்ம சூத்திரங்களுக்கு உடையவர் எழுதிய விளக்கமே ஸ்ரீபாஷ்யம் என்று தெரிவித்து, அதனை ஒட்டியே ஏனைய நூல்கள் அமைந்துள்ளன என்று குறிப்பிடுகிறார் அவர்.

ஸ்ரீஇராமானுசர் காலத்தில் அவரை ஆதரித்த காஞ்சி, காஷ்மீரம், மேல்கோட்டை ஆகிய இடங்களில் இருந்த அரசர்கள் மற்றும் அவருக்குத் தீங்கு கருதிய சோழ மன்னன் இவர்களைப் பற்றித் தெரிவிக்கிறது ஸ்ரீ.உ.வே.மு.வ.அனந்த பத்மாசாரியாரின் கட்டுரை.

அதில் யாதவப்பிரகாசரின் முன்பிறப்புப் பற்றிப் பிரம்மராட்சசன் கூறியதைக் காட்டும் சிற்பம், பெருமாள் கோயிலில் கோடை உற்சவ நான்கு கால் மண்டபத்தில் வடக்கு உள்முகமான முதல் தூணில் இருப்பதைக் குறித்துள்ளது அரியதோர் குறிப்பாகும்.

உபநிடதத்தில் தைத்ரியப் பறவை என்று ஒரு பறவையைப் பற்றிய குறிப்பு வரும். கூழாங்கல்லையும் கூழாக்கித் தன் குஞ்சுக்கு ஊட்டுமாம் அந்தப் பறவை. அப்படித்தான் பொன்னை உருக்குவதுபோல் தன்னை உருக்கித் தமிழ் செய்திருக்கிறார்கள் இந்நூலின் ஆசிரியர்கள்.

“உபநிடதங்கள் எனப்படுபவை யாவும் பசுக்கள். கிருஷ்ண பரமாத்மாதான் அந்தப் பசுக்களிடமிருந்து பால் கறப்பவர். அறிவிற் சிறந்த அர்ச்சுனன் அந்தப் பசுக்களைப் பால் சுரக்கச் செய்து பாலருந்தும் கன்று. இவ்வாறு கறந்த பாலே மிக உயர்ந்த கீதாம்ருதம்!” என்பதாக ஓர் உருவகச் செய்யுளை அடியேன் எப்போதோ வாசித்திருக்கிறேன். ‘தமிழ் திசை’யின் முதல் வெளியீடான இந்த தெய்வ மணம் கமழும் பனுவலும் அத்தகைய சிறப்புடையதுதான்.

ஸ்ரீஇராமானுசரின் ஜீவாம்ருதச் சிந்தனைகளை எல்லாம் அறிவின் மிக்க அருளாளர்களைக் கொண்டு, கற்கண்டுத் தமிழில் கறந்தளித்திருக்கும் எண்ணப் புதுமை, கற்பார் அனைவரையும் களிப்பு வெள்ளத்தில் தள்ளக்கூடியது என்றால் அது உண்மை; வெறும் புகழ்ச்சி அன்று.

‘தி இந்து’வின் வாசகர்களுக்கு நிறைவாய் ஒன்று சொல்கிறேன்: நெல்லிக்காய் சாப்பிட்டு நீர் குடித்த மாதிரி, நினைக்கின்ற போதெல்லாம் இனிக்கின்ற நன்னூல் இது. வாசித்துப் பாருங்கள். உங்கள் பொறிபுலன்கள் அனைத்துமே வாசிக்கத் தொடங்கும்.

- எஸ்.ஜெகத்ரட்சகன்

ஆயிரம் காணும் அற்புதர்
நூல் விலை: ரூ.300/-

தபாலில் பெற: இந்தியாவுக்குள் ரூ.360/- KSL MEDIA LIMITED என்ற பெயரில் டிடி அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:

‘தி இந்து’ - தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்களைக் குறிப்பிட மறவாதீர்கள்
தொடர்புக்கு: 044-30899000, 7401296762

ஸ்ரீராமானுஜர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x