Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

மஹா சிவராத்திரி - சிவனுக்காக ஓரு கர்ஜனை

மக்களில் பல தரப்பினர்களும் வெவ்வேறு விதமான அடிப்படைகளில் மஹா சிவராத்திரியைச் சிந்தித்தும், புரிந்து கொண்டும், கொண்டாடியும் வருகிறார்கள். இந்த உலகில் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழும் சராசரி மனிதர்களுக்கு, மஹா சிவராத்திரி என்பது சிவனின் வருகைத் திருநாளாகவும் அவன் பெற்ற வெற்றிகளின் திருநாளாகவும் படுகிறது.

எத்தனையோ புராணங்களும் நம்பிக்கைகளும் பேசப்பட்டு வந்தாலும் அவற்றில் சிவனின் பிறப்பு குறித்தோ, பெற்றோர்கள் குறித்தோ ஏதும் இருக்காது. ஏனெனில் சிவனுக்குப் பிறப்பும் இல்லை, குழந்தைப் பருவமும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. சிவம் ஒரு சுயம்பு.

இந்தப் பிரபஞ்சத்தை இன்றைய நவீன விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய புதிய ஆய்வுகளுக்கு உட்படுத்திக்கொண்டே இருந்தாலும், அந்த ஆய்வுகளில் இருந்து முன்னரைவிடவும் பிரபஞ்சம் குறித்த மர்மங்கள் கூடிக்கொண்டே போகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.

ஆண்டின் மிக இருண்ட நாளாகிய மஹா சிவராத்திரியில் ஆகாயத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் நட்சத்திரங்களை நீங்கள் எண்ணி முடிக்க முடியும். எனவே காலங்காலமாகப் பத்தாயிரம் நட்சத்திரங்களே என்று மக்களால் கருதப்பட்டது. பிறகு தொலைநோக்கிகளின் மூலம் மேலும் பல நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.

இன்றைய நவீன விஞ்ஞானம் தர்க்க அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்களைப் பேசி வருகிறது. பிரபஞ்சத்தின் எல்லையின்மை குறித்துப் பேசுகிகிறது. எல்லாமே மாயை என்பதைத்தான் இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மாயை என்று சொன்னால், இல்லாத ஒன்று என்று பொருள் அல்ல. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவல்ல என்பதுதான் மாயைக்கு அர்த்தம்.

ஐம்புலன்களில் நீங்கள் உணர்கிற தன்மையில் அது இல்லை. இந்தப் பிரபஞ்சம் என்பது ஒன்று சேர்ந்திருக்கும் சாத்தியம், ஒருவகைச் சலனம். எங்கே சலனம் இருக்கிறதோ, அங்கே ஒலி எழும்புவது நிச்சயம். எனவே இந்தப் பிரபஞ்சம் பலவகைப்பட்ட ஒலிகளின் சங்கமம். இந்த ஒலிகளின் ஓர் இழை தன்னைத்தானே சிவமாக வெளிப்படுத்தியதைத்தான் புராணங்கள் சுயம்பு என்று சொல்கின்றன.

எனவே, பெரிய நம்பிக் கைகளும் ஆசைகளும் கொண்டு இருப்பவர்களுக்கு மஹா சிவராத்திரி தினம், சிவனின் வருகை நிகழ்ந்த தினம். இதர வாழ்வில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, இந்த நாள் சிவனின் திருமண நாள்.

ஆத்ம சாதகர்களைப் பொறுத்தவரை சிவன் நிச்சலனமடைந்து அச்சலேஸ்வரர் ஆகி, கைலாய மலையுடன் கலந்த தினம் இந்த தினம். அவர் மலை போல அசைவற்று மலையோடு மலையாகி, தான் அறிந்த அனைத்தையும் கைலாய மலைக்குள் கலக்கச் செய்தார். அவரைப் பின்பற்றித்தான் பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த ஞானிகள் மனித குலத்துக்கு என்றென்றும் பயன்படும் விதமாகத் தங்கள் ஞானத்தைக் கைலாயத்தில் நிலைநிறுத்தினார்கள். இந்த மூன்று முக்கியமான அடிப்படையில் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவா என்ற சொல்லுக்கு இரண்டு அடிப்படையான அம்சங்கள் உண்டு. சிவா என்ற சொல்லின் நேரடிப் பொருள், எது இல்லையோ அது என்பதாகும். இருப்பின் அடிப்படையே, இன்மைதான். இந்த

உயிராகட்டும், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமாகட்டும், ஒன்றுமின்மையிலிருந்துதான் உருவாகியுள்ளன. படைப்பு என்று நீங்கள் பார்ப்பதெல்லாம் ஒரு நீர்க்குமிழி போல் நிகழும் சிறு நிகழ்வுதான். எல்லைகளே இல்லாத இந்த ஒன்றுமின்மை சிவா என்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு அம்சத்தில் பார்த்தால், சிவா என்று நாம் அழைப்பது ஆதிகுருவாகிய யோகக் கலையின் முதல் குருவைத்தான். யோகக் கலை என்று நாம் குறிப்பிடுவது, குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்வதையோ, தலைகீழாக நிற்பதையோ, மூச்சைப் பிடித்துக்கொள்வதையோ அல்ல. இந்த வாழ்க்கை எப்படி உருவாகியுள்ளது, இதனை உச்சபட்ச நிலைக்குக் கொண்டுபோவதன் சாத்தியம் என்ன என்பதையெல்லாம் குறிக்கிறோம். ஒன்றுமின்மை பற்றிப் பேசுகிற நாம், மறு விநாடியே யோகக் கலையின் ஆதிகுரு என்றும் சிவனைக் குறிக்கிறோம்.

சிவனை, ஆதியோகி என்று சொல்லக் காரணம் உண்டு. இமாலயப் பிரதேசத்தில் கேதாரநாத்தில் இருந்து சில மைல்கள் தாண்டி காந்திசரோவர் என்ற நீர்ப்பரப்பு இருக்கிறது. இந்த நீர்ப்பரப்பின் கரையில்தான் யோகக் கலை முதல் முதலாகப் போதிக்கப்பட்டது. ஒரு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்கக்கூடும். அணுக்களில் தொடங்கி பிரபஞ்சம் வரையிலான வாழ்க்கையின் அத்தனை நுட்பங்களையும் குறித்த பேரறிவை, தன் ஏழு சீடர்களுடன் சிவன் முதன் முதலாக இங்கேதான் பகிர்ந்துகொண்டார். இந்த ஏழு சீடர்கள் சப்த ரிஷிகள் என்று அழைக்கப்பட்டனர். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்பதற்காக புரிதலின் பொருட்டு அவற்றை ஏழு பிரிவுகளாகப் பகுத்தார். சப்த ரிஷிகள் ஒவ்வொருவரும் அதன் ஒவ்வொரு பகுப்பையும் உள்வாங்கிக்கொண்டனர். ஏழு பகுப்புகளையும் ஒன்றாக உள்வாங்கக்கூடிய ஒரு மனிதர் கிடைக்கவில்லை. எனவே அவையனைத்தையும் கைலாய மலையில் பொதித்துவைத்தார். இன்றளவும் கைலாயம் இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான ஆன்மீக நூலகமாகத் திகழ்கிறது.

எனவே ஒரு தனி மனிதராகவும் எல்லையில்லாத வெற்றிடமாகவும் சிவனை நாம் சொல்வது ஒரே தொனியில் பொருள் கொள்ளத்தக்கது. ஏனெனில், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பு எப்படியென்றால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதைவிடவும் என்ன செய்கிறீர்கள் என்பதைத்தான் அது கணக்கில் கொள்கிறது. சிவாவின் தன்மையும் அப்படித்தான்.

சமீபத்தில் ஈஷா பள்ளிக்குச் சென்றிருந்தபோது, சில சிறுவர்கள் என்னிடம் வந்து, ‘‘இந்த உலகம் கனவா அல்லது உண்மையா?’’ என்று கேட்டார்கள். நான், ‘‘இந்த உலகம் ஒரு கனவு, ஆனால் அந்தக் கனவு உண்மை’’ என்று பதில் சொன்னேன்.

இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களை நீங்கள் புரிந்துகொண்டதாகக் கருதுகிறீர்கள். ஆனால் அந்தப் புரிதல் எல்லாம் உங்களுக்குள்தான் நிகழ்ந்திருக்கிறது.

உங்களுக்குள் நிகழ்கிறதென்றால் உங்களுக்கு வேண்டியதை உங்களால் நிகழச் செய்ய முடியும். இது ஒரு கனவு என்று நீங்கள் நம்பினால் இது ஒரு கனவு. உண்மை என்று நம்பினால் உண்மை!

வளைத்தளம்: www.anandaalai.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x