Last Updated : 25 Aug, 2016 12:05 PM

 

Published : 25 Aug 2016 12:05 PM
Last Updated : 25 Aug 2016 12:05 PM

திருத்தலம் அறிமுகம்: திருப்பாலைத்துறை- புலித்தோல் தரித்த பெம்மான்

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 276 இல் 237 தலங்கள் கிழக்கு திசை நோக்கியன. இத்தலங்களை வழிபட்டால் புண்ணியங்கள் சேரும் என்று வேதாகமங்கள் சொல்கின்றன. அந்த வரிசையில் பாபநாசம், திருப்பாலைத்துறைத் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சிறப்புக்குரியதாகும். திருநல்லூரைச் சார்ந்த சப்த ஸ்தானங்களுள் இத்தலமும் ஒன்று. பாலைமரம் தல விருட்சமாக இருக்கும் காரணத்தினால் பாலைத்துறை எனப்படுகிறது.

ஒரு காலத்தில் தாருகாவனத்து முனிவர்கள் இறையருள் இன்றி முக்தி அடைய முயற்சித்தனர். அதற்காகப் பல வேள்விகள் நடத்தினர். எவ்வளவோ முயன்றும் தோல்வியையே தழுவினர். கோபத்துடன் கடுந்தவம் புரியத் தொடங்கினர். அவர்களை சாந்தப்படுத்த சிவபெருமான் பிச்சாடனராகவும் திருமால் மோகினியாகவும் சென்றனர். முனிவர்கள் சினம் தணியவில்லை. மேலும் பெரிய வேள்வி நடத்தி ஒரு கொடும் புலியை உண்டாக்கி அதைச் சிவன்மீது ஏவினர். சிவன் அப்புலியின் தோலை உரித்து ஆடையாக உடுத்திக்கொண்டார். இது நிகழ்ந்த தலம் திருப்பாலைத்துறை என்று நம்பப்படுகிறது.

திருமண வரமருளும் தாயார்

அம்பிகை, கோயிலின் வடக்குத் திசையில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் பெயர் தவள வெண்கையாள். அப்பர் பெருமான், தம் திருப்பாட்டுள் ‘தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்’ என்று அம்பாள் பெயரைச் சூட்டியுள்ளார். மூலஸ்தானலிங்கம் அமைந்துள்ள கருவறையின் வலப்புறம் அம்பிகை சந்நிதி அமைந்தால் அத்தலம் திருமணத்தலமாகும். நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து சிவன், அம்பாளை வழிபட்டால் விரைவில் திருமணம் நிகழும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

லிங்க வடிவில் பாலைவனநாதர்

இராஜகோபுரம் மற்றும் மூன்று நிலை கோபுரத்தைக் கடந்து சென்றால் கருவறை மகா மண்டபத்தை அடையலாம். கருவறையில் மூலவர் பாலைவனநாதர் லிங்க வடிவில் உள்ளார். மண்டபத்தின் இடப்புறம் ஆடல்வல்லான் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஊர்த்துவ தாண்டவர், தெட்சிணாமூர்த்தி, முருகப்பெருமான் உள்ளிட்டோரும் வடக்குப் பிரகாரத்தில் சண்டீசரும் கோயில் தீர்த்தக் கிணறும் வடகிழக்கில் நவக்கிரகங்களும் அருள் பாலிக்கின்றனர்.

புராதனச் சிறப்புமிக்க சின்னம்

நெல் முதலான தானியங்களை சேமித்து வைக்கும் பழமையான நெற்களஞ்சியம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. முழுவதும் செங்கல்லால் ஆன நெற்களஞ்சியம் தஞ்சை நாயக்க மன்னர்களின் வழிவந்த ரகுநாத நாயக்கரால் (கி.பி.1600 1634) எழுப்பப்பட்டது. 36 அடி உயரம் கொண்ட இக்களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்ட வடிவிலும் மேல் பகுதி கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. இதில் சுமார் 3000 கலம் தானியங்களைச் சேமிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x