Last Updated : 16 Mar, 2017 10:19 AM

 

Published : 16 Mar 2017 10:19 AM
Last Updated : 16 Mar 2017 10:19 AM

சாந்தோக்ய உபநிடதம்: பிரம்மத்தை அறிதல்

முன்பொரு காலத்தில், அடர்ந்த வனப்பகுதி ஒன்றில், ஒரு தாயும் சிறுவனும் எளிய குடிசையில் வசித்துவந்தனர். சிறுவனின் பெயர் சத்தியகாமன் (உண்மையைத் தேடுபவன்). நல்ல குருவை அடைந்து, அவர் மூலம் பிரம்மத்தை அறிவதுதான் சத்யகாமனின் முதன்மையான விருப்பம். தன் தாயான ஜாபாலாவிடம் சென்று தன் விருப்பத்தைச் சொன்னான். சீடனாக வேண்டும் என்றால் தந்தையின் குடும்பப் பெயர் தெரிந்திருக்க வேண்டும். எனவே, தன் குடும்பப் பெயரைக் கேட்டான் சத்தியகாமன்.

“விலைமதிப்பற்ற செல்வமே! எனக்கு உன் குடும்பப் பெயர் தெரியாது” என்றாள் ஜாபாலா.

“அப்படியானால், நான் குருவிடம் சென்று என்ன சொல்வது?”

“நான் உன்னிடம் என்ன சொன்னேனோ, அதை அப்படியே உன் குருவிடம் சொல்” என்றாள் அன்னை.

தாயின் ஆசிகளோடு, சத்தியகாமன் வீட்டை விட்டு வெளியேறினான். வனத்தின் எல்லையில் ஆசிரமம் அமைத்திருந்த கவுதமரை அடைந்தான். அவரை விழுந்து வணங்கினான். “நீங்கள் என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் ஆசிகளோடு நான் பிரம்மத்தை அறிய விரும்புகிறேன்” என்றான். “நீ எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன்?” என்று கேட்டார் கௌதமர்.

“என் தாயின் பெயர் ஜாபாலா. என் பெயர் சத்தியகாமன். என் தந்தையின் குடும்பத்தைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. நான் சத்தியகாம ஜாபாலன்.”

அச்சிறுவனின் தாய் அவனுக்கு உண்மை பேசக் கற்றுக் கொடுத்திருப்பதை நினைத்து கௌதமர் மகிழ்ச்சியடைந்தார். “ சிறந்த குடும்பத்திலிருந்து வந்த ஒருவனாலேயே, இத்தனை நேர்மையாகத் தன்னைப் பற்றிக் கூற முடியும், உன்னை என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

கவுதமர் கொடுத்த பசுக்கள்

கவுதமர், அவனுக்கு முதலில் தியானத்தைக் கற்றுக்கொடுத்தார். அமைதியான மனதுடன், சத்தியகாமன் தனது உள்முக அனுபவத்தை அடைந்தான். அது நிசப்தத்தின் பரந்த சமுத்திரம் என இருந்தது. பிறகு கௌதமர், சத்தியகாமனை நூற்றுக்கணக்கான பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அதிலிருந்து, 400 நலிந்த பசுக்களைப் பிரித்தார். சில காளைகளையும் கொடுத்தார்.

“இந்தப் பசுக்களை வனத்தின் மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல். இவற்றை கவனமாகப் பராமரித்துவா. இவை ஆயிரமாகப் பெருகிய பின் திரும்பி வா” என்றார்.

எந்தக் கேள்வியும் இல்லாமல், பணிவின் இலக்கணமாய் சத்தியகாமன், 400 பசுக்களையும் வனத்தின் மற்றொரு பகுதிக்கு ஓட்டிச் சென்றான். அங்கு சென்றதும் முதலில் சத்தியகாமன் தனிமையாய் உணர்ந்தான். வனத்தினுள் அவனே எல்லாமுமாக இருந்தான். பசுக்களிடம் பிரியமாகப் பாடினான். படிப்படியாக வன வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தொடங்கினான். பசுக்கள் பசும்புல்லை நன்கு மேய்ந்தன; தூய்மையான நீரை அருந்தின.

பல வருடங்கள் கழிந்தன. சத்தியகாமனுடைய நாட்கள் தியானத்தில் துவங்கி தியானத்தில் முடிந்தன. அவன் மனம் மேலும் மேலும் அமைதியடைந்தது. சத்தியகாமனுக்கு வயது முதிர்ந்தது. பசுக்களின் கூட்டம் பெருகத் துவங்கியது. காலம் வேகமாகக் கடந்ததையோ, பசுக்களின் எண்ணிக்கை பெருகியதையோ கவனிக்காத அளவுக்கு அவன் தன்னிறைவோடு இருந்தான். சத்தியகாமனிடம் ஆழமான மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவன் சுயத்தை உணர ஆரம்பித்தான். அவன் மனம் அமைதியடைந்தது. இதயம் அன்பால் நிறைந்தது. முகம் ஒளிர்ந்தது.

சத்தியகாமன் தனியாய் உணரவில்லை. ஒவ்வொரு உயிரினமும் அவன் குடும்பத்தில் இணைந்தது. அவன் தாய் கற்றுத்தந்ததை நினைவில் இருத்தினான். “ இந்த உலகம் என் குடும்பம்” (வசுதைவ குடும்பகம்). “சுற்றியுள்ள அழகு அத்தனையும் பிரம்மத்தின் பகுதியே” என்று சிந்தித்தான். “வளர்ந்து தேயும் ஒவ்வொன்றும், பெரும் முழுமையின் அங்கமே.” நித்திய சுழற்சியில் தானும் ஒரு அங்கமாக உணர்ந்தான்.

சத்தியகாமனை அழைத்த காளை

ஒரு நாள், பசுக்களின் கூட்டதிலிருந்த காளை மாடு அவனை அழைத்தது. “நாங்கள் இப்பொழுது 1000 பசுக்களாகிவிட்டோம்” என்ற காளை, “எங்களை உங்கள் குருவின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், நான் பிரம்மத்தின் தன்மையை உங்களுக்குக் கற்றுத்தருவேன்” என்றது.

“தயைகூர்ந்து சொல்க!” என்றான் சத்தியகாமன்.

“பிரம்மம் கிழக்கில் இருந்து மேற்காக ஒளிர்கிறது, வடக்கிலிருந்து தெற்காகவும். ஏனெனில், பிரம்மம் எங்கும் இருக்கிறது. அது உலகளாவியது. இது பிரம்மத்தின் கால் பகுதியாகும். நெருப்பு, அக்னி உங்களுக்குப் பிரம்மத்தைப் பற்றி மேலும் கற்பிக்கும்” என்றது காளை.

சத்தியகாமன் ஆசிரமத்தை நோக்கிப் பசுக்களை ஓட்டிச் சென்றான். மாலை நெருங்கியது; தீ மூட்டினான். நெருப்பின் மேற்குப் பக்கம் உட்கார்ந்து, கிழக்கு நோக்கினான். நட்சத்திரங்கள் நிரம்பிய இருண்ட வானத்தைப் பார்த்தான். சிறிது நேரத்திற்குப் பின், அக்னி, பிரம்மத்தின் தன்மையைப் பற்றிப் பேசியது.

பேசத் தொடங்கிய அக்னி

“புவியும், வளிமண்டலமும் பிரம்மம்” என்றது அக்னி. “ஆகாயமும், சமுத்திரமும் அதுவே. ஏனெனில், பிரம்மம் முடிவில்லாதது. அது ஆரம்பமோ, முடிவோ இல்லாதது. இது பிரம்மத்தின் கால் பங்காகும்.”

பிறகு அக்னி சொன்னது. “ஒரு அன்னம், உனக்கு பிரம்மத்தைப் பற்றி மேலும் கூறும்”

அடுத்த நாள் மாலையும் சத்தியகாமன் தீ மூட்டினான். கிழக்கு நோக்கி அமர்ந்தான். வெண்ணிற அன்னம் ஒன்று அவனை நோக்கி வந்தது. அது பிரம்மத்தின் தன்மையைப் பற்றிச் சொன்னது.

“பிரம்மம் என்பது அக்னி. பிரம்மம்தான் கதிரவன். பிரம்மம்தான் நிலவு. பிரம்மம்தான் மின்னல். பிரம்மத்தின் கால் பங்கு ஒளி. பிரம்மம்தான் வாழ்வின் ஒளி” என்றது. “ஒரு பறவை உனக்கு பற்றி மேலும் கூறும்” என்று சொல்லிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள் மாலை, வழக்கம் போல் தீ மூட்டினான். கிழக்கு நோக்கி அமர்ந்தான். இந்த முறை ஊதா நிற சூரியப் பறவை பறந்து வந்தது. அதன் சிறகுகள் அக்னியின் ஒளியைக் கொண்டிருந்தன. “பிரம்மம்தான் சுவாசம், பிரம்மம்தான் கண். பிரம்மம்தான் காது, மனது. பிரம்மத்தின் இந்தக் கால் பங்கு, ஓய்வெடுக்கும் ஆசனம். காண்பவற்றின் ஆசனமாய் கண் இருப்பதைப் போல, சிந்தனையின் ஆசனமாய் மனமமிருப்பது போல், பிரம்மம் எல்லாவற்றின் ஆசனம். எல்லாமே, பிரம்மத்தின் மீது நிலைகொள்கின்றன” என்றது அது.

சத்தியகாமன், தனது குருவின் வசிப்பிடத்தை வந்தடைந்தான். சத்தியகாமனின் முகம் ஒளிர்வதை குரு கவனித்தார். அவர் “ நீ பிரம்மத்தைக் கண்டடைந்துவிட்டாய் என்பது எனக்குத் தெரிகிறது” என்றார்.

சத்தியகாமன் பிரம்மத்தின் உண்மைத்தன்மையைத் தன் குருவின் வாயிலாகக் கற்றுக்கொள்ள விரும்பினான். “குருவே! பிரம்மத்தின் தன்மையை எனக்கு கற்றுத் தாருங்கள்” எனப் பணிவுடன் கூறினான்.

“கிழக்கும் மேற்கும் பிரம்மம். புவியும் ஆகாயமும் பிரம்மம். கதிரவனும் நிலவும் பிரம்மம். கண்ணும் காதும் பிரம்மம் என்பதை நீ அறிந்திருப்பாய். சமுத்திரத்தின் உள்ளேயே அலைகள் அடித்துக்கொண்டு இருப்பதைப் போல, இவையெல்லாம் பிரம்மத்தின் பகுதிகளே. ஏனெனில், பிரம்மம் எங்கும் உள்ளது. பிரம்மம்தான் எல்லாம். (பிரம்மவைதம் சர்வம்). அது முடிவில்லாதது. அதுதான் வாழ்வின் ஒளி. அனைத்தும் பிரம்மத்தில் நிலை கொள்கிறது.

சுயத்தை, உன் உண்மைத் தன்மையை உணர்ந்துகொள்வதின் மூலமே, பிரம்மம் உணரப்படுகிறது. அப்பொழுது நீ உணர்வாய். நீ எங்கும் இருக்கிறாய்; நீ முடிவில்லாதவன், நீ ஒளிர்பவன். இதுதான் உச்ச அறிவு, பிரம்ம வித்யா. ஆம்; இதுதான் உச்ச அறிவு, பிரம்ம வித்யா” என்று குரு சொன்னார்.

இவ்வாறு சத்தியகாமன் பிரம்மத்தை உணர்ந்துகொண்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x