Published : 09 Nov 2016 05:37 PM
Last Updated : 09 Nov 2016 05:37 PM

வார ராசிபலன் 10-11-2016 முதல் 16-11-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பது சிறப்பு. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். மாணவர்களது நிலை உயரும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நிலபுலங்கள் லாபம் தரும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் பிள்ளைகளால் மன அமைதி குறையும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் சூழும். வயிறு, கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். 16-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13.

திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், இள நீலம், பச்சை.

எண்கள்: 4, 5, 6 | பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. குருவுக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 10-ல் ராகுவும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். எதிரிகள் அடங்குவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். இன்ஜினீயர்களது நிலை உயரும். நிலபுலங்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கணவன்-மனைவி இடையே களிப்புறவு கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும். ஜன்ம ராசியில் புதனும், சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். சூரியன் பலம் குறைந்திருப்பதால் அரசுப்பணிகளில் கவனம் தேவை. நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கண் உபத்திரவம் உண்டாகும். தந்தை நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13, 16.

திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 9 | பரிகாரம்: பிள்ளையாருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 3-ல் கேதுவும், 11-ல் சூரியனும் உலவுவது சிறப்பு. புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் சேரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். பண வரவு சீராக இருக்கும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்கக்கூடும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக இடமாற்றம் ஏற்படும். 16-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13, 16.

திசைகள்: வட மேற்கு, கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 6, 7 | பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவுவது நல்லது.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 10-ல் சூரியனும், 11-ல் புதனும்; சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். நிர்வாகத்திறமை கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். முக்கியமானவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்களுக்கு நன்மைகள் உண்டாகும். புதியவர்களிடம் விழிப்பு தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13, 16.

திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 8 | பரிகாரம்: ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் புதன்; சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெற்றோராலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். நண்பர்கள் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். பெண்களின் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பிள்ளைகளாலும், உடன்பிறந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. அலட்சியப்போக்கு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 10, 11, 13, 16.

திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, கருநீலம்.

எண்கள்: 5, 6, 8 | பரிகாரம்: சர்ப்ப வழிபாடு செய்யவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெறவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 7-ல் குருவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருள்வரவு அதிகமாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். செந்நிறப் பொருட்கள், கட்டடப் பொருட்கள், மின் சாதனங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள், வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கனியும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் பணியாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 11, 13, 16.

திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு

எண்கள்: 3, 4, 9. | பரிகாரம்: ஆதித்தனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினருக்கும் உதவுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x