Last Updated : 03 Sep, 2014 09:35 AM

 

Published : 03 Sep 2014 09:35 AM
Last Updated : 03 Sep 2014 09:35 AM

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மாநில கட்சிகள்; வரிந்துகட்டும் தேசிய கட்சிகள் - முடிவெடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித் துள்ள அதேநேரத்தில், பாஜக, இடதுசாரிகள் ஆகிய தேசிய கட்சிகள் அதிமுக-வை எதிர்த்து களம் காண முடிவெடுத்துள்ளன.

தமிழகத்தில் காலியாக இருந்து வரும் நெல்லை, தூத்துக்குடி, கோவை மேயர் பதவிகள், அரக்கோணம், விருத்தாச்சலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன் கோவில் நகராட்சி தலைவர் பதவிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக, நகர்ப்புற வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கவுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய இதற்கான வேட்புமனுத்தாக்கல், வியாழக்கிழமையுடன் (செப். 4) நிறைவடைகிறது. இரு நாட்களே மீதம் உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டிக்களத்தில் இருந்து விலகி வருகின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மேயர் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக பிரமுகர்கள் பட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

ஆனால், கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் கட்சியுடன் மோதிய முக்கிய எதிர்க்கட்சியான திமுக இம்முறை போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது. தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்று அதற்கான விளக்கத்தையும் திமுக அளித்துள்ளது.

மதிமுக-வும் தேர்தலை புறக் கணிக்கப்போவதாக அறிவித்துள் ளது. பாமக தேர்தலில் போட்டி யிடாது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னதாகவே அறிவித்து விட்டார். அதேபோல தமுமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளும் தேர்தலில் போட்டி யிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

“உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது சந்தேகமே. எனினும் முடிவை தலைவர்தான் அறிவிப்பார்” என்று தேமுதிக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் பாஜக, முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது.

தங்களது தலைமையிலான கூட்டணியில் இடம்பெற் றிருக்கும் மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைமை களை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். அதற்கு உடனடி பலனாக, மதிமுக ஆதரவையும் தெரிவித்துவிட்டது.

கம்யூனிஸ்டுகளுக்குள் பிணக்கு

இதுபோல், இடதுசாரிகளும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத் துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சார்பில் கோவை மேயர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, “எங்களிடம் ஆலோசனை செய்யாமலே மார்க்சிஸ்ட் கட்சியினர் வேட்பாளரை அறிவித்துவிட்டனர். இருந்தபோதிலும் எங்களுக்கி டையே பிரச்சினை வராமல் இருப்பதற்காக அதை பெரிதாகக் கருதவில்லை. நாங்களும் தேர்தலில் போட்டியிடுகிறோம். மார்க்சிஸ்ட் போட்டியிடாத இடங்களில் நாங்கள் போட்டியி டுவது உறுதி” என்றார்.

மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ், தேர்தலில் போட்டி யிடுவது குறித்து உறுதியான முடிவெடுக்க முடியாமல் உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். அவர் மேலிடத்தில் விவாதித்துவிட்டு பேசுவதாகக் கூறியிருக்கிறார். அவரது பதிலுக்காக காத்திருக் கிறோம்” என்று கூறினார்.

இந்த உள்ளாட்சித் தேர்தலை கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக பாஜக, இடதுசாரிகள் போன்ற தேசியக் கட்சிகள் நினைக்கின்றன. அதனால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் முழுவீச்சில் களமிறங்கு கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x