Last Updated : 06 Jun, 2019 12:59 PM

 

Published : 06 Jun 2019 12:59 PM
Last Updated : 06 Jun 2019 12:59 PM

தம்ளர் நீரில் உப்பு; பணக்கஷ்டம் தீரும்; துஷ்ட சக்திகள் ஓடும்!

தம்ளர் நீரில் உப்பு வைத்தால், வீட்டில் பணக்கஷ்டங்களும் மனக்குழப்பங்களும் தீர்ந்துவிடும். வீட்டில் உள்ள தீயசக்திகள் தலைதெறிக்க ஓடிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆன்மிகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்டது உப்பு. இதுவே பரமாத்மாவின் தத்துவம் என்கிறது ஆன்மிகம்.

கடலில் இருந்துதான் உப்பு கிடைக்கிறது. கடலில் இருந்துதான் மகாலக்ஷ்மி தோன்றினாள். எனவே, உப்புக்குள், லக்ஷ்மி கடாக்ஷம் இருப்பதாகச் சொல்வர். அதேசமயம், துர்சக்தியை விரட்டும் வல்லமையும் திருஷ்டியைப் போக்குகிற குணமும் உப்புக்கு உண்டு.

உப்பை வைத்துக்கொண்டு, ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நல்வாழ்க்கை வாழ்வதற்கு, தீயசக்திகள் அனைத்தும் விலகி ஓடுவதற்கு கல் உப்புப் பிரார்த்தனையைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றனர், ஆச்சார்யர்கள்.

மனிதர்களாகிய நமக்கு பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும்தான் பெருங்கவலை. பணமில்லையே என்று மனதளவில் தவித்துப் போகிறோம். பணமிருந்தும் நிம்மதி இல்லையே என்றும் நொறுங்கிப் போகிறோம். நமக்கே தெரியாமல், தீயசக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து, நமக்குள் எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்கின்றன. நமக்குள் இருக்கிற நேர்மறை சிந்தனைகளை மழுங்கடிக்கும் வல்லமை தீயசக்திகளுக்கு உண்டு. இவற்றையெல்லாம் போக்கும் சக்தி ஒரு துளி உப்புக்கு உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நன்றாகக் குளித்துவிட்டு, ஒரு தம்ளரில் நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு கல் உப்பைப் போடுங்கள்.பூஜையறையில் வைத்து நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டில் உள்ள தென்மேற்கு மூலையில், வைத்துவிடுங்கள்.

மறுநாள்... குளித்து, விளக்கேற்றிவிட்டு, அந்த தம்ளர் உப்பு நீரை, பாத்ரூம் வாஷ்பேஷின் தண்ணீரைத் திறந்து, இதையும் கொட்டிவிடுங்கள். அதாவது ஓடுகிற தண்ணீரில் இதையும் கலந்துவிடுங்கள். அடுத்து, தம்ளரில் புதிய தண்ணீர், ஒரு சிட்டிகை அளவு உப்பு என இப்படியாக தினமும் மாற்றி மாற்றி, தென்மேற்கு மூலையில் வைத்துக்கொண்டே வாருங்கள்.

இதுவரை உங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தும் தலைதெறிக்க ஓடிவிடும். பணக்கஷ்டங்களும் கடன்களும் நிவர்த்தியாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x