Published : 06 Jun 2019 11:14 AM
Last Updated : 06 Jun 2019 11:14 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 80: காலனை வெல்லலாம்

‘வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது? போனால் போகட்டும் போடா!’ என்று சாவுக்கு நியாயம் கற்பித்தது பட்டினத்தார் பாடல்களில் தோய்ந்த கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று.

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் உலகு.

(குறள் 336)

நேற்று இருந்தான்; இன்று இறந்தான். இதுவே இந்த உலகின் இயல்பு என்று சாவைப் பற்றிச் சமாதானம் சொல்கிறது குறள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றுஓர் அன்ன;

சாவதும் புதுவது அன்றே; ...

(புறநானூறு, 192)

ஊர்கள் எல்லாமே ஊர்கள்தாம்; உயிர்க் குலத்தார் எல்லோரும் உறவினர்தாம். நமக்கு வரும் நல்லதும் கெட்டதும் பிறர் செய்தா வருகின்றன? நாம் செய்தே வருகின்றன. ‘பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று கேட்டதில்லையா? துன்பமும் இன்பமும்கூட அப்படித்தான். சாவது என்ன புதியதா? உலகம் தோன்றிய நாளாய், உலகத்தில் நாம் தோன்றிய நாளாய் இருக்கும் பழையதுதானே என்று பாடுகிறார் மெய்யாசிரியர் கணியன் பூங்குன்றனார்.

சமயங்களும் சாவை பற்றிச் சமாதானமே பேசின. சாவை எதிர்கொள்வதை ஒரு கலையாகவும் பேசின. வடக்கிருத்தல் அல்லது சல்லேகனை (sallekhana) என்பது சமணம் பேசிய சாகுங் கலை. உடல் தன்னுடைய தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ளும் வலிமை அழியும்போது, வடக்கு நோக்கி அமர்ந்து, முதலில் திட உணவு துறந்து, பின் நீருணவும், பின் நீரும்கூடத் துறந்து, மெல்ல மெல்ல வாழ்வை விடுதல் சல்லேகனை.

இது தற்கொலை என்று சமணர் சல்லேகனையைத் தடுத்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். அந்தத் தடைக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தற்கொலை என்பது கண நேர முடிவு; வடக்கிருத்தலோ ஆய்ந்து எடுத்த முடிவு. தற்கொலைச் சாவு பொசுக்கென்று முடிந்துவிடும்; வடக்கிருப்பில் சாவுக்கு ஏறத்தாழ முப்பது நாட்கள் பிடிக்கலாம்.

தற்கொலை மன அழுத்தம், நம்பிக்கை இழப்பு ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுவது; வடக்கிருத்தலோ இலை பழுத்துவிட்டது, இனிக் காம்பை விட்டு உதிர வேண்டியதுதான் என்ற முதிர்ச்சி உணர்வில் மேற்கொள்ளப்படுவது. தற்கொலை என்பது சாவு தழுவுதல்; வடக்கிருத்தலோ வாழ்வை விடுதல். இரண்டுக்கும் வேறுபாடில்லையா? என்று வாதம் வைத்து வென்றார்கள் சமணர்கள்.

எல்லாப் படியும் விலக்கப்படாது எரியால்

இல்லம் அழியில் அதன்அகத்தில் – நல்ல

பொருள்கொண்டு போவான்போல் சாம்போது பற்றுஅற்று

அருள்கொண்டு போதல் அறம்.

இது சமண திவாகர வாமன முனிவரின் நீலகேசி உரையில் சுட்டப்படும் பாடல். மயிலை சீனி.வேங்கடசாமியின் ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் வடக்கிருத்தல் என்னும் தலைப்பில் காட்டப்படும் மேற்கோள். வீடு தீப்பற்றி எரியும்போது அதிலிருந்து நல்ல பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுவதைப் போல, சாகும்போது எதன் மீதும் பற்றில்லாமல் அருளை மட்டும் கொண்டுபோவதே சல்லேகனை என்னும் அறம் என்பது பொருள். இனி, வடக்கிருத்தலை யார் செய்யலாம் என்பதற்கும் வரம்புகள் உள்ளன:

இடையூறு, ஒழிவில்நோய், மூப்பு இவை வந்தால்

கடைதுறத்தல் சல்லே கனை.

(அருங்கலச் செப்பு, 145)

பொறுக்க முடியாத தொந்தரவுகள், ஒழியாத நோய், மூப்பு இவை வரும்போது உணவைத் துறந்து ஆற்றுவதே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல். சமணம் சாகுங் கலை பாடியதுபோலவே சமணத்திலிருந்து சைவத்துக்கு வந்த திருநாவுக்கரசரும் சாகுங் கலை பாடுகிறார்:

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி,

ஆர்வத்தை உனக்கே தந்து,

பங்கத்தைப் போக மாற்றிப்

பாவித்தேன் பரமா நின்னைச்

சங்குஒத்த மேனிச் செல்வா!

சாதல்நாள் நாயேன் உன்னை

எங்குஉற்றாய் என்ற போதா

இங்குஉற்றேன் என்கண் டாயே.

(தேவாரம் 4:75:8)

‘உடல் மண்ணுக்கு; உயிர் சிவனுக்கு’ என்று ஆக்கி, என் குற்றங்கள் எல்லாவற்றையும் மீதமின்றிப் போக்கி, எப்போதும் உன்னையே கருதி இருக்கிறேன். சங்குபோலக் குளிர்ந்த மேனிச் செல்வா! பரமா! சாகும் நாளில் ‘ஐயா, எங்கிருக்கிறாய்?’ என்று நான் கேட்டால் ‘இங்குதான் இருக்கிறேன்’ என்று ஒன்று சொல்; போதும்.

பௌத்தம் தொடங்கிச் சமணம், சைவம், வைதிகம் என்று அனைத்தும் சாவைத் தவிர்க்க முடியாததாகவும் அதை எதிர்கொள்ளும் மனத்தை வளர்த்துக்கொள்ளவும் சொல்ல, ஏன்? சாவை வெல்ல முடியாதா? என்ற எதிர்க் கேள்வியோடு தங்கள் முனைப்பைத் தொடங்குகிறார்கள் சித்தர்கள்.

சாவை வெல்வது ஒரு பழங்கனவு. வாய்ப்பில்லை என்று புத்தர்கள் ஒரு புறம் போதித்துக்கொண்டே இருக்க, வாய்க்காமலா போகும் என்று சித்தர்கள் மறுபுறம் முயன்றுகொண்டே இருந்திருக்கிறார்கள்.

சாவை வெல்லல் பற்றிய பழங்கதைகளில் மிகுதியும் சொல்லப்பட்டது மார்க்கண்டேயன் கதை. மிருகண்டு முனிவனுக்கு மக்கட்பேறு இல்லை. தவம் செய்தான். சிவன் வந்தான். ஒரு மகன் வேண்டும் என்றான் மிருகண்டு. பதினாறு ஆண்டே வாழும் அறிவாளி வேண்டுமா, பல ஆண்டுகள் வாழும் முட்டாள் வேண்டுமா என்று கேட்டான் சிவன். பதினாறு ஆண்டே வாழ்ந்தாலும் அறிவாளிதான் வேண்டும் என்றான் மிருகண்டு. தந்தேன் என்று சென்றான் சிவன்.

மிருகண்டுவுக்குப் பிறந்த மகன் மார்க்கண்டேயன். அறிவாளி. பதினாறு ஆண்டுகள் நிறைய, சாகும் நாள் வந்தது. சிவனின் லிங்கத் திருமேனியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான் மார்க்கண்டேயன். உயிர் பறிக்கக் காலன் வந்தான். கயிறு வீசினான். மார்க்கண்டேயன் தழுவி அமர்ந்திருந்த லிங்கத்தையும் கட்டியது கயிறு. இழுத்தான் காலன்; வெடித்தான் சிவன்.

வரம்பு மீறிய காலனைக் காலால் உதைத்தான். சட்டத்தில் ஓட்டை கண்டு வழக்கை முறிப்பதுபோல, வரத்தில் ஓட்டை கண்டு, தான் கொடுத்த வரத்தையே முறித்தான் சிவன். பதினாறைக் கடந்தால்தானே சாவு? பதினாறைக் கடக்கவே மாட்டாய் என்று சொல்லிப் போனான். மார்க்கண்டேயன் என்றும் பதினாறாகச் சாவே இல்லாதவன் ஆனான்.

எனில், காலனை வெல்ல நாம் என்ன செய்ய? லிங்கம் தழுவவா? லிங்கத் திருமேனி தீண்ட நமக்கு வாய்ப்புண்டா? கதை ஆயிரம் சொல்லும்; நிகழ் என்று ஒன்று உண்டல்லவா? திருமேனி தீண்டவே வாய்ப்பில்லாவிட்டால் காலனை வெல்வது எப்படி?

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேல்உற நோக்கிமுன்

கால்உற்றுக் காலனைக் காய்ந்துஅங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

(திருமந்திரம் 345)

-என்று மேற்படிப் பழங்கதைக்கு விளக்கம் புனைகிறார் திருமூலர். காலன் என்பவன் காலன்தான்; ஆனால், கால் என்பது கால் இல்லை; காற்று. காலனைக் காலால் உதைத்தல் என்பது காலனைக் காற்றால் அடித்தல். துருத்தி அடிப்பதுபோலக் காற்றை உள்ளுக்குள் அடித்தால் மூலாதாரத்தில் தீ கிளம்பும்.

தீ கிளம்பினால் சூடு பொறுக்காமல் உடம்பினில் இருக்கும் உறுபொருளாகிய குண்டலினி என்னும் ஆற்றல் பாம்புபோலச் சீறிக் கிளம்பும். மூலத் துளையிலிருந்து கிளம்பும் குண்டலினி மேலே இருக்கும் ஆணைத் தலமாகிய ஆக்ஞை என்னும் புருவநடுவுக்கு வரும்; நெற்றிக்கு நடுவில் அதனை உற்று உணரலாம். அவ்வாறு உணர்ந்தவர்கள் உலகம் என்னும் ஊருக்குள் சாவை வென்று நலமாய் இருக்கலாம்.

உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்; வள்ளல் பிரானுக்கு வாகனம் குண்டலினி. ஞாலக் கடவூரில் நலமாய் வாழத் தீண்டும் திருமேனி விடுத்துத் தீண்டாத் திருமேனியைத் தமக்குள்ளே தழுவுக.

(காற்று வீசும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x