Last Updated : 08 Mar, 2018 10:35 AM

 

Published : 08 Mar 2018 10:35 AM
Last Updated : 08 Mar 2018 10:35 AM

துளி சமுத்திரம் சூபி 20: அன்பில் கரைந்த ராபியா பஸ்ரி

 

டலமைப்பால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் உணர்வின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு மாதிரியானவரே. தேவைகளும் ஆசைகளும் பற்றும் துறவும் அறிவும் பக்தியும் ஞானமும் இருவருக்கும் பொதுவாகவே உள்ளது. இருப்பினும், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவது முகமது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இருந்துள்ளது.

பெண்கள் எந்த அளவு மதிக்கப்பட்டார்கள், சிறப்பிக்கப்பட்டார்கள், முக்கியத்துவம் பெற்று இருந்தார்கள் என்பதை முகமது நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதிஜா (ரலி) அவர்களின் ஆளுமையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். நபி அவர்களை மணமுடிக்கும் முன்பே கதிஜா அவர்கள் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார்.

அன்றைய காலகட்டத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒட்டகங்களில் மூன்றில் இரண்டு பகுதி அவருடையதாக இருந்தது. அது மட்டுமின்றி, தான் யாரை மணமுடிக்க வேண்டும் என்பதையும் அவர்தான் முடிவெடுத்தார்.

நபிக்கு வந்த எதிர்ப்புகளை ஒரு பெண் சிங்கம் போன்று எதிர்கொண்டு அவற்றைக் களைந்து எறிந்ததை யாரால் மறுக்க முடியும்?

இல்லறத் துறவிகள்

சூஃபி ஞானிகளின் வாழ்வுமுறை சற்று வினோதமான ஒன்று. ஏனென்றால், அவர்கள் சமூகத்திலிருந்து விலகி வாழாமல் பெரும்பாலும் சமுகத்தோடு இயைந்தே வாழ்ந்தனர். கடவுளின் மீதான பக்திக்காகத் தங்களின் உலகக் கடமைகளை அவர்கள் ஒருபோதும் புறந்தள்ளி வைக்கவில்லை. இல்லற வாழ்வில் ஈடுபடாத சூஃபி ஞானிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்குப் பெரும்பாலோனோருக்குக் குடும்பம் இருந்தது. அதைக் காப்பாற்றத் தொழிலில் ஈடுபட்டுப் பொருளும் ஈட்டினர்.

ஆனால், அந்த உலகக் கடமைகளையும் கடவுளின் மீதான பக்தியையும் சமமாகக் கையாளும் தனித்திறன் கைவரப் பெற்றிருந்தனர். சூஃபி ஞானிகளுக்குச் சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் இல்லாள்களின் பக்தியும் ஞானமும். சில நேரத்தில் அது சூஃபி ஞானிகளின் ஞானத்தையும் மிஞ்சி வென்று நின்றது.

உதாரணத்துக்கு, ஹாத்திம் அஸம் என்ற சூஃபி ஞானியின் வாழ்வை எடுத்துக் கொள்ளலாம். ஒருமுறை அவர் பயணத்துக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்முன் தன் மனைவியிடம், தான் திரும்பி வரும்வரை வீட்டுச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்று கேட்டுள்ளார். “எங்கிருந்து இவ்வளவு அகந்தையைப் பெற்றீர்கள்? எப்போது திரும்புவீர்கள் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியுமா?

அல்லது திரும்பி வருவது உங்கள் கையில் உள்ளதா? எது உங்கள் கையில் உள்ளது? அடுத்த நொடியே உங்கள் கையில் இல்லை, இதில் எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று எப்படி உங்களால் கேட்க முடிகிறது? நானும் எந்த நம்பிக்கையில் இவ்வளவு பணம் வேண்டும் என்று உங்களிடம் கேட்க முடியும்?” என்று சினத்துடன் கேட்டுள்ளார். இத்தனைக்கும், ஹாத்திம் ஹஸம் சூஃபி, வெளியே மிகவும் போற்றப்படும் முக்கியமான ஞானிகளில் ஒருவர். ஆனால், இந்த நிகழ்வில் யாருடைய நம்பிக்கை பெரியது என்பது குறித்து ஏதேனும் ஐயமிருக்கக் கூடுமா?

துன்பங்களும் கடவுளின் கொடையே

இன்றும் சூஃபி ஞானிகளிலேயே மிகவும் உயர்வாகப் போற்றப்படுபவர் ராபியா பஸ்ரி எனும் பெண் சூஃபி ஞானி. அவர்தான் முதன்முதலாகக் கடவுளின் மீதான அன்பை மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழியில் சொன்னார். அவர் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களைச் சொல்லி மாளாது. சாமானியர்களின் மனம் இன்பத்தில் எங்ஙனம் மகிழ்ந்து திளைக்குமோ அங்ஙனம் தன் வாழ்நாள் முழுவதும், “இன்பங்கள் மட்டுமல்ல துன்பங்களும் கடவுளின் கொடைதான்” என்று சொல்லித் துன்பத்தில் மகிழ்ந்து திளைத்தார்.

இன்பங்கள் நாடி வந்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவருடைய அறிவிலும் ஞானத்திலும் மயங்கி நாட்டின் மன்னனே மணமுடிக்க முன்வந்தும் அதைத் தைரியமாக மறுதலிக்கும் ஆளுமையையும் பக்தியையும் அவர் கொண்டிருந்தார்.

சூஃபி ஞானிகள் உடல் கொண்டு எவரையும் பிரித்துப் பார்க்காமல் மனம் கொண்டு அனைவரையும் இணைத்து, ஆண் - பெண் என்ற வேறுபாடையும் பாகுபாட்டையும் கடந்து பார்த்தனர். இதனால்தான் சூஃபி ஞானம், பாலின பேதமற்ற ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. உடலின் வலிமையே நிரந்தரம் என்ற மடமையில், அகந்தையில் செருக்கேறி, பெண்களைவிட உயர்ந்தவர்கள் என நினைக்கும் ஆண்களுக்கு, பெண்கள் குறித்துச் சரியான புரிதலை சூஃபி ஞானம் இன்றும் ஏற்படுத்துகிறது. ராபியா பஸ்ரியின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

யாருடைய இருத்தலில் நீங்கள்

மறைந்து போகிறீர்களோ

யாருடைய இருத்தலில் நீங்கள்

இன்னும் இருக்கிறீர்களோ

யாரைத் தேடி உங்கள்

பயணம் தொடர்கிறதோ,

அவருடைய அன்புக்கு

ஏங்கி, அதில் கரைந்து

தொலைந்தபின், உங்கள்

அனைத்தையும் உள்ளடக்கிய

வெறுமையைத் தவிர

வேறென்ன இருக்க

முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x