Last Updated : 09 May, 2019 10:51 AM

 

Published : 09 May 2019 10:51 AM
Last Updated : 09 May 2019 10:51 AM

ரமலான் சிறப்புக் கட்டுரை: ஆன்மிக அறுவடையின் பருவம்

இறைநம்பிக்கை யாளர் களுக்கு இறைவன் கடமையாக்கியுள்ள மற்றொரு இறைவழிபாடு நோன்பு. வைகறையிலிருந்து அந்திவரை குறிப்பிட்ட காலம் உண்ணாமலும், அருந்தாமலும், இல்லற இன்பங்களிலிருந்து விலகி யிருப்பதும் நோன்பு எனப்படுகிறது.

அதன் சட்டங்கள், எண்ணிக்கைகள், அதன் காலக்கட்டம் ஆகியவை வேறு வேறாக இருந்தாலும், எல்லா தீர்க்கதரிசிகளின் காலத்திலும் நோன்பு கடமையாக்கப்பட்டதாகவே இருந்தது.

இது குறித்துத் திருக்குர்ஆன் இப்படி சான்றுரைக்கிறது: “இறைநம்பிக்கை யாளர்களே, உங்களுக்குமுன் இருந்த நபிமார்களைப் பின்பற்றியவர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போலவே, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”

எல்லா காலத்திலும் இறைவழிப் பாடான நோன்பு கட்டாயக் கடமை யாக்கப்பட்டதற்கு காரணம், மனித வாழ்வு முழுவதும் ஒருவர் இறை வனுக்கு செய்கிற இறைவழிபாடாக இருக்க வேண்டும் என்பதுதான். இறைவனின் கட்டளைகளுக்கு இம்மியும் பிசகாத ஓர் இறையடி யாராக ஒருவர் இருக்க வேண்டும் என்பதே வாழ்வியல் நோக்கம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனிதனின் முழு வாழ்க்கையும் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பதாகவே இருக்க வேண்டும் என்கிற இறைவிருப்பத்தை வெளிப்படுத்துகிறது திருக்குர்ஆன்: “நான் ஜின்களையும் மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே அன்றி, வேறு எதற்காகவும் படைக்கவில்லை”. இதன் அடிப்படையில் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற இறைவழிபாடுகளைப் போலவே நோன்பும் அடிப்பணிவதற்கான நற்பயிற்சி அன்றி வேறில்லை.

மாறுபட்ட வழிபாட்டு முறை

நோன்பைத் தவிர மற்ற இறைவழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒருவிதத்தில் வெளிப்படையாகவே நிறைவேற்றப்படுகின்றன.

தொழுகையை எல்லோரும் பார்க்க முடியும். ஒருவர் கொடுப்பதை யும், மற்றொருவர் பெறுவதையும் ‘ஜகாத்’ இறைவழிபாடு மூலமாக பார்க்க முடியும்.

ஆனால், நோன்பு இவற்றில் மாறுபட்ட மறைவான தொரு இறைவழிபாடு. நோன்பு நோற்பவரும் இறைவனும் அன்றி வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாத இறைவழிபாட்டு முறை.

இறைகட்டளையை செயற்படுத்தும் முனைப்புடன் ஒருவர் உண்ணாமலும், அருந்தாமலும், மனஇச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட காலம்வரை இருப்பது அசாத்தியமான ஒன்றே எனலாம்.

இப்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இறைநம்பிக்கைக்கு வைக்கப்படும் தேர்வுதான் நோன்பு.

இந்தப் பயிற்சியில் எந்த அளவுக்கு மனிதன் வெற்றியடைந்துகொண்டே போகிறானோ, அந்தளவுக்கு அவனது இறைநம்பிக்கையும் வலுபெறுகிறது.

தொடர் பயிற்சி

நோன்பு தனிச்சிறப்புப் பெற்றது. ஏனென்றால், தொழுகையைப் போல சில நிமிடங்களில் நோன்பு முடிந்துவிடுவதில்லை. ஹஜ்ஜைப் போல ஆயுளில் ஒரே முறையில் முற்றுப் பெறுவதுமில்லை.

நோன்பு நீண்ட காலத்துக்கு தொடர் பயிற்சியைத் தருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நபிகளாரைப் பின்பற்றும் சமூகத்தவருக்கு ஒரு மாதம் முழுமைக்கும் பகலிலும், இரவிலுமாக நோன்பு பயிற்சி அளிக்கிறது.

வைகறை இருள் விலகுவதற்கு முன் ‘ஸஹர்’ எனப்படும் உண்ணுவதில் தொடங்கி, பகல் முழுவதும் உண்ணாமல், அருந்தாமல் ஒரு வரையறைக்குள் மனித வாழ்வு சுழன்று அந்தியில் குறிப்பிட்ட காலத்தில் நோன்பை விட்டு விலகி உண்டு முடித்து, ‘தராவீஹ்’ எனப்படுத் ரமளான் காலத்து சிறப்பு இறைவழிப் பாட்டுக்கு விரைதல், தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதுதல், ஓதுவதைக் கேட்டல் என்று தொடர் பயிற்சியே நோன்பு.

இறைவன் விரும்பிய கூலி

இதில் தனிமனித வழிபாடு ஒட்டுமொத்த சமூக வழிபாடாக மாறிவிடுவதால் நோன்பால் உருவாகும் மனித மதிப்பீடுகளும், ஆன்மிகப் பண்புகளும் கூட்டாக செழித்துத் தழைக்கின்றன.

அதுவும் உலகில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் இந்தத் தொடர் பயிற்சியில் ஈடுபடுவதால் ரமளான் மாதம் நன்மையும், ஒழுக்கமும் நிறைந்த சமூகச் சூழலை தோற்றுவிக்கிறது. நன்மைகள் பூத்துக் குலுங்கும் பருவகாலமாக திகழ்கிறது.

அதனால்தான், ஒவ்வொரு நற்செயலும், இறைவனிடத்தில் பத்திலிருந்து எழுநூறு மடங்குவரை பல்கி பெருகுவதாகவும், ஆனால், நோன்பு விதிவிலக்கு பெற்றது என்றும், அந்த நோன்புக்கு இறைவன் விரும்பிய அளவுக்கு கூலி கொடுப்பான் என்றும் நபிகளார் எடுத்துரைக்கிறார்.

ரமலான் நோன்பின் லட்சியம்

பழைய வழக்கங்களிலிருந்து விடுபடுவது, சுயகட்டுப்பாட்டுக்கான சக்தியைப் பெறுவது, எது தீயதோ அதை ஒறுப்பது ஆகியவற்றை ரமலான் நோன்பு நமக்குக் கற்றுத்தருகிறது. பிரார்த்தனை, விரதத்தின் வாயிலாக நமது அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தரத்தை மேம்படுத்த ரமலான் மாதமும் நோன்பும் பேரளவில் உதவுகிறது.

நம்மைச் சரிய வைக்கும் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சுயகட்டுப்பாட்டில் விழிப்புணர்வை அடையும்போது அல்லாவை நெருங்கியுணர்கிறோம். அல்லாவின் கதவுகளைத் திறக்கும் சாவியை நோன்பே நமக்குத் தருகிறது. மனம் சுத்தமாக, உடல் சுத்தமாக ஆகும் நிலையில் நமது பாவங்களும் இந்நாட்களில் துடைத்தழிக்கப்படுகின்றன.

இறந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்த்து ஆராய்வதற்கும் எதிர்காலத்துக்கு உரிய முறையில் தயாராவதற்குமான மாதம் இது. தனது தவறுகளைக் களைவதோடு அடுத்தவர் செய்த தவறுகளை மன்னிக்கும் மனப்பக்குவத்தையும் அல்லா நமக்கு அளிக்கிறார்.

குடும்பம், நண்பர்கள், சக குடிகள், ஏழைகளை நோக்கிப் பரிவையும் அன்பையும் புதுப்பிக்கும் நாட்கள் இவை. சேவையும் பெருந்தன்மையும் மதிப்பீடுகளாக நம் இதயத்தில் பொறிக்கப்படும் காலமும் இதுதான்.

எடுப்பதைவிடக் கொடுப்பதே இந்த உலகின் தலையாய கடமை என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஈவதின் மகிழ்ச்சியை உதவுவதன் மனநிறைவை உணரத் தொடங்குகிறோம்.

மனத்தின் உருமாற்றம், புனர்நிர்மாணம், பிரதிபலிப்புக்கு வாய்ப்பைத் தரும் ரமலான் மாதத்தை நம் ஆத்மா ஈடேறுவதற்குப் பயன்படுத்திக் கொள்வோம். உலகை மேலும் வாழத் தகுந்ததாகவும் நம் குழந்தைகளுக்கு அமைதியையும் வளத்தையும் வழங்குமாறும் மாற்றுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x