Last Updated : 09 May, 2019 12:01 PM

 

Published : 09 May 2019 12:01 PM
Last Updated : 09 May 2019 12:01 PM

கல்யாண வரமளிக்கும் விநாயகர்

தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழனின் அரசவையில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்த கல்யாணசுந்தரம் என்பவர் தீவிர விநாயகர் பக்தர். அவரது கனவில் வந்த விநாயகர், “என் தந்தையுடன் இணைந்த அம்சத்தில் உசிலை மரத்தடியில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் என் சிலையைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்” எனக்கூறித் திசையைக் காட்டி மறைந்துள்ளார்.

அதன்படியே, குமாஸ்தா கல்யாணசுந்தரம், கனவில் விநாயகப் பெருமான் கூறிய திசை நோக்கி சென்று உசிலை மரத்தடிப் பகுதியில் தோண்டிப் பார்த்தார்.

அங்கே இருந்த விநாயகரை அதே உசிலை மரத்தடியில் நிர்மாணித்து வழிபட்டு வந்தார். அதுதான் இப்போது கல்யாண சுந்தர விநாயகர் ஆலயமாக மாறியுள்ளது.

தந்தையுடன் இணைந்த அம்சத்தில் இருப்பதாக விநாயகர் கனவில் உரைத்ததால், சிவலிங்க பீடத்தின் மீது விநாயகர் சிலையை கல்யாண சுந்தரத்தின் வம்சாவழியினர் நிறுவியுள்ளனர்.

அரியலூருக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை சாலையில் வாரணவாசி அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலில், தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சன்னதியில் லிங்கபீடத்தில் அருள்பாலிக்கிறார் விநாயகர்.

அரசு வேம்பின் நிழலில் விநாயகர்

அரசு வேம்புமரத்தடியில் உள்ள சன்னிதியில் ராகு, கேதுவுடன் அமர்ந்துள்ளார் கற்பகவிநாயகர். விஸ்வநாதர் சமேத விசாலாட்சி ஆகியோர் அப்பனும் அம்மையுமாக ஒரே சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். பரிவாரத் தெய்வங்களாக சண்டிகேஸ்வரர், கால பைரவர், பாலமுருகன், குருதட்சிணாமூர்த்தி, நவகிரக நாயகர்கள் ஆகியோர் உள்ளனர்.

மஞ்சள் கயிறு விரளி மஞ்சள்

மாதம்தோறும் அமாவாசை நாட்களில் இணைந்திருக்கும் அரசு வேம்பு மரங்களில் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் சேர்த்துக் கட்டினால் திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க மஞ்சள் துணியில் கோயில் வளாகத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அதனுடன் வெற்றிலை-பாக்கு வைத்து மரத்தில் தொட்டில் போலக் கட்டிக் குழந்தைப் பேறுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள் தொடங்கி குடும்பத்தில் எந்த விசேஷங்கள் நடந்தாலும் இங்கே வந்து நன்றி தெரிவிக்கிறார்கள். கல்யாண சுந்தர விநாயகரை அபயம் அளிப்பவராக அரியலூர் மக்கள் கருதுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x