Last Updated : 18 Sep, 2014 01:18 PM

 

Published : 18 Sep 2014 01:18 PM
Last Updated : 18 Sep 2014 01:18 PM

கொலு படிகள் சொல்லும் அர்த்தம்

நவராத்திரி பண்டிகையை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான்.

அந்த உயர்வைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்றைப் படையில் அமைந்திருக்க வேண்டும். அவை ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, மற்றும் ஒன்பது. அவரவர்களின் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பொம்மைகளை வைப்பதில் ஒன்பது படிமுறையைப் பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் ஓருயிரி முதல் ஆறறிவு மனிதன்வரை வளர்ச்சி அடைவதையே இந்தப் படிகள் நினைவு படுத்துகின்றன. மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் கொலு பொம்மைகள் நினைவுறுத்துகின்றன.

ஒன்றாம் படி

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்க வேண்டும். இது தவிர பொதுவாக, கொலு வைக்கும் இல்லங்களில் படிகளுக்குக் கீழே பூங்கா அமைப்பது உண்டு.

இரண்டாம் படி

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இரண்டாம் படியில் வைக்கலாம்.

மூன்றாம் படி

மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகளை மூன்றாம் படியில் வைக்கவேண்டும்.

நான்காம் படி

நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகளை வைப்பது சிறப்பு.

ஐந்தாம் படி

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.

ஆறாம் படி

ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். தலைவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரின் உருவங்களை வைத்தால், இல்லத்துக்கு வரும் விருந்தாளிகள் அச்சிலைகளில் உள்ளவர் களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.

ஏழாம் படி

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரை வைக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படி

தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதி கள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.

ஒன்பதாம் படி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தேவியருடன் அமர்ந்திருக்கும் சிலைகளை இந்த உச்சிப் படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும். இங்கே பூரண கும்பத்தை வைத்து நிறைவு செய்யலாம்.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவகிரக நாயகியின் அருளைப் பெறுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x