Last Updated : 22 May, 2019 03:58 PM

 

Published : 22 May 2019 03:58 PM
Last Updated : 22 May 2019 03:58 PM

பல வண்ண புடவை கட்டி, தேய்பிறை ஞாயிறில் பூஜை; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; குடும்பம் சிறக்கும்!

தம்பதி ஒற்றுமை பலப்படவும் செழிக்கவும் தேய்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டில் பூஜை செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஒரு குடும்பத்தில், தம்பதி ஒற்றுமை என்பது மிக மிக அவசியம். ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போல என்று தம்பதியையும் அவர்களின் ஒற்றுமையையும் சொல்லுவார்கள். ஒரு குடும்பம் சிறந்து விளங்கவேண்டும் என்றால், தம்பதி கருத்தொருமித்திருக்கவேண்டும். அதேபோல், குழந்தைகள் எந்தக் குழப்பமோ தவிப்போ இல்லாமல் வளரவேண்டும் என்றாலும் அப்பா அம்மாவின், அதாவது தம்பதியின் ஒற்றுமை மிகப்பெரிய பலம்.

ஆனால், சமீப காலங்களில், கணவன் மனைவி இடையே ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. கூட்டுக்குடும்பம் என்பதெல்லாம் மாறி, கணவன், மனைவி, குழந்தை என்கிற கட்டமைப்புக்குள் சுருங்கிவிட்ட உலகில், கணவன் கிழக்கு என்றால் மனைவி மேற்கு எனும் நிலையே அதிகரித்திருக்கிறது.

’ஏன்... இப்படி? உன் கணவர் குடிக்கிறாரா? அடிக்கிறாரா? வீண் சண்டை வருகிறதா?’ என்று கேட்டால், ‘எம் புருஷன் குடிக்கமாட்டாரு. அடிக்கமாட்டாரு. எங்களுக்குள்ளே சண்டையோ பூசலோ எதுவுமில்ல’ என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கணவன் ஒரு திசை; மனைவி ஒரு திசை.

சண்டை போட்டு, காச்மூச்சென்று கத்தி கூப்பாடு போட்டு, தங்களது எதிர்ப்பைக் காட்டுவது ஒருவகை என்றால், அமைதியாக இருந்து, முகம் திருப்பிக் கொண்டு, புறக்கணிப்பது என்பது இன்னொரு வகையான சண்டை. இது சண்டையில் புதுவகை. கருத்துவேற்றுமையின் இன்னொரு பக்கம்.

இப்படியாக, கருத்துவேற்றுமையால் கணவனும் மனைவியும் ஆளுக்கொரு திசையில் இருந்தால், அவர்கள் ஒற்றுமையுடன், அன்பாகவும் பண்புடனும் சேர்ந்து வாழ, வழிபாட்டைச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

தேய்பிறை காலம் தெரியும்தானே. ஒருமாதத்தில் 15 நாள் தேய்பிறை. 15 நாள் வளர்பிறை. இந்த தேய்பிறை காலங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டில் அமர்ந்து பூஜை செய்யவேண்டும். அப்போது பெண்கள், பல வண்ணங்கள் கொண்ட புடவையை உடுத்திக்கொள்ளவேண்டும். காலையில் குளித்துமுடித்துவிட்டு, பூஜையறையில் நெய்தீபமேற்றவேண்டும். காலை 7 முதல் 9 மணிக்குள் பூஜை செய்யவேண்டும்.

உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். பூஜையின் நிறைவில், அரிசியால் செய்யப்பட்ட உணவை (சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் முதலானவை) நைவேத்தியம் செய்து, வழிபடவேண்டும். கோதுமையால் செய்யப்பட்ட உணவையும் நைவேத்தியம் செய்யலாம்.

இப்படியாக தொடர்ந்து ஏழு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்து வந்தால், கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும். கருத்துவேற்றுமைகள் அகலும். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதேபோல், வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த பூஜைகளைச் செய்யலாம். வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 7 முதல் 9 மணிக்குள் நெய்தீபமேற்றி, இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும். அப்போது பெண்கள், பச்சை, சிகப்பு அல்லது மஞ்சள் நிறப் புடவையை அணிந்துகொள்ளலாம்.  வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில், தானிய வகைகள் அதாவது சுண்டல் வகைகளை நைவேத்தியமாக படைக்கவேண்டும்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் இருந்தால்தான், அந்தக் குடும்பமும் வளரும். சந்ததியும் செழிக்கும் என்பதைப் புரிந்து உணர்ந்து, இந்த பூஜைகளை மனமொன்றிச் செய்யுங்கள். கைமேல் பலன் கிடைப்பதை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x