Published : 18 Apr 2019 12:12 PM
Last Updated : 18 Apr 2019 12:12 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 73: பழமை இருந்த நிலை கிளியே

ஒன்பது தந்திரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் திருமந்திரத்தின் தந்திரங்கள் எல்லாமே முதல் தந்திரம், மூன்றாம் தந்திரம் என்று எண்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்க, இரண்டாம் தந்திரம் மட்டும் ‘புராணத் தந்திரம்’ என்று ஒரு சிறப்புப் பெயராலும் வழங்கப்படுகிறது.

ஏன்? இரண்டாம் தந்திரம் புராணம் பேசுவதால். புராணம் பேசுதல் என்பது என்ன? கதை வடிவாகப் பழைமை பேசுதல். எந்தப் பழைமையைப் பேசுகிறது திருமந்திரம்? சைவப் பழைமையை.

சைவத்துக்குப் பழைமை பேச வேண்டிய கட்டாயம் என்ன? போட்டிக் கொள்கைகளுக்கு நடுவில் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவைக்காக.

மக்களை ஈர்ப்பதற்காக, வைணவம் ஒரு பக்கம் பழைமை பேசிற்று; சிந்து சமவெளிக் காலத்துக்குப்பின் புதிதாக வந்த வைதீகம் தானும் தன்பாட்டுக்குப் பழைமை பேசியது; பேசியதோடு நில்லாமல், களத்தில் நின்றவற்றையெல்லாம் உண்டு செரித்துத் தான் மட்டுமே தனிக் கொள்கையாகத் தலைமை பெறவும் முயன்றது.

தலைமை பறிக்கும் வைதீகத்தின் முயற்சியைத் தடுக்கவும், ஒற்றைப்படுத்தலை மறுக்கவும், தன் இருப்பை முன் நிறுத்தவும் சைவமும் பழைமை பேசிற்று.

வேதமும் நீயே! வேள்வியும் நீயே!

நீதியும் நீயே! நிமலன் நீயே!

புண்ணியம் நீயே! புனிதன் நீயே!

பண்ணியன் நீயே! பழம்பொருள் நீயே!

ஊழியும் நீயே! உலகமும் நீயே!

வாழியும் நீயே! வரதனும் நீயே!

தேவரும் நீயே! தீர்த்தமும் நீயே!

மூவரும் நீயே! முன்நெறி நீயே!

மால்வரை நீயே! மறிகடல் நீயே!

இன்பமும் நீயே! துன்பமும் நீயே!

தாயும் நீயே! தந்தையும் நீயே!

விண்முதல் பூதம் ஐந்துஅவை நீயே!

புத்தியும் நீயே! முத்தியும் நீயே!

சொலற்குஅரும் தன்மைத் தொல்லோய் நீயே!

(பதினோராம் திருமுறை, நக்கீர தேவ நாயனார், பெருந்தேவபாணி, வரிகள் 50-65)

-என்று பின்னாளில் திருவிளையாடல் திரைப்படத்தில் உரையாடல் வடிவம் பெற்ற வரிகளின் மூலப் பாட்டைப் பாடிச் சைவப் பழைமை போற்றுகிறார் நக்கீரர்.

வைதீக மதத்தின் வேதமும் வேள்வியும் தங்களுக்குப் பழைமை கோருகின்றன; அவை பழையவை என்றால் அவற்றைப் பண்ணியவனே நீதானே? பண்ணப்பட்டது பழையதா? பண்ணியவன் பழையவனா? பண்ணியவன்தானே? முன்னைப் பழம்பொருளுக்கும் முன்னைப் பழம்பொருள் நீ; வாழ்கிறவன் நீ; வரம் தருகிறவன் நீ; தேவர், மூவர், இன்பம், துன்பம், மலை, கடல், தாய், தந்தை, புத்தி, முத்தி எல்லாமே நீதான்; அனைத்துக்கும் முந்தி வந்த முதல் நெறியும் உன் நெறிதான். உன் பழைமை இத்தகையது என்று யாராலும் சொல்ல முடியாத பழைமை என்று போற்றுகிறார் நக்கீரர்.

திருமூலர் பழமை போற்றுபவரா?

ஒரு கருத்து அல்லது கொள்கை பழைமையானது என்பதாலேயே சிறப்புடையதாக ஆகிவிடுமா? புதியது என்பதாலேயே மட்டமாகப் போய்விடுமா? எங்கள் கொள்கை தோற்றமும் முடிவும் இல்லாத நிரந்தரக் கொள்கை (சனாதனம்) என்றெல்லாம் சொல்லிக்கொள்வது நிரந்தர முதல்வர், நிரந்தரத் தலைவர் என்பதைப்போல ஒரு பொய்ம்மைப் புரட்டுத்தானே? இத்தகைய புரட்டைத் திருமூலர் செய்வாரா? அறிவையும் ஆற்றலையும் போற்றும் திருமூலர் பழைமையைப் போற்றுவாரா?

போற்றினார் என்று சொல்வதற்கில்லை. புராணம் என்ற பெயரில் கதையாக்கிப் பேசப்படும் பழைமையைச் சில இடங்களில் அயராமல் குத்தி மலர்த்துகிறார்.

திருமந்திரத்தின் முதல் தந்திர நூலில் பேசப்பட இருக்கும் மெய்யியலுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டவர், புராண தந்திரம் என்று அழைக்கப்படும் இரண்டாம் தந்திரத்தில் சில கதைப் பொய்ம்மைகளைப் பிளந்து கருத்து உண்மைகளைக் காட்ட முயல்கிறார். முதலாவதாகப் பிளந்து காட்ட முயல்வது அகத்தியப் பழங்கதையை.

அகத்தியரைப் பற்றிய பழங்கதைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. கயிலாயத்தில் சிவனுக்கும் உமைக்கும் திருமணம். இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்வோர் அனைவரும் திருமணம் பார்க்கக் கயிலையில் கூடிவிட்டனர்.

வடக்கே எடை கூடிவிட்டதால் துலாக்கோல் தட்டைப்போல வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்துவிட்டது. ஏற்றத்தாழ்வாகிவிட்ட இந்தியத் துணைக்கண்டத்தைச் சமன் செய்ய இறைவன் அகத்தியரைத் தேர்ந்தெடுத்தான். ‘அகத்தியா! நீ தெற்கே போய் இந்தியத் துலாக்கோல் தட்டுகளைச் சமன் செய்’ என்றான்.

அகத்தியர் தெற்கே வந்தார். இந்தியா சமன் செய்யப்பட்டது. தெற்கே வந்த அகத்தியர் என்ன செய்தார்? இறைவனாலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் இலக்கணமே இல்லாதிருந்த தமிழ் என்னும் கரட்டு மொழிக்கு இலக்கணம் செய்து கொடுத்தார்.

உழக்குமறை நாலினும் உயர்ந்து

உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும்

மரபின் நாடி

நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி

உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க் கடவுள்

தந்த தமிழ் தந்தான்

(கம்ப இராமாயணம்,

ஆரணிய காண்டம், அகத்தியப் படலம், 41)

வேதமொழி என்று சொல்லப்படும் வடமொழி தனது கடினப்பாட்டால் பயில்கின்றவர்களை உழக்கி எடுக்கிறது; அதை நோக்கத் தமிழ் எளியதும் இனியதும் ஆகும். தமிழைத் தந்தவன் நெற்றிக் கண்ணில் நெருப்பு உமிழும் சுடர்க் கடவுள் ஆவான்.

இறைவனிடமிருந்து வாங்கி அதைத் திருத்திச் செம்மைப்படுத்தி, உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று இரண்டாகப் பிரித்து இலக்கணம் செய்து தமிழர்களுக்குத் தந்தான் அகத்தியன் என்று கம்பன் பாட, அதை அடியொற்றி,

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்து – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்...

(பாரதியார் கவிதைகள்,

தேசிய கீதங்கள், தமிழ்த் தாய்)

- என்று பாரதியும் பாடுகிறான்.

‘அகத்தியர்’ என்னும் தலைப்பில் அகத்தியர் வரலாற்றை ஆராய்ந்து நூல் எழுதிய ந.சி.கந்தையா பிள்ளை தனது முன்னுரையில் எழுதுகிறார்: சாத்தன் வாந்தி எடுத்தான். அதனைப் பார்த்திருந்த ஒருவன் ‘சாத்தன் கறுப்பாக வாந்தி எடுத்தான்’ என்று ஒருவனிடம் கூறினான்.

அவன் ‘சாத்தன் காகம்போலக் கறுப்பாக வாந்தி எடுத்தான்’ என்று மற்றொருவனிடம் கூறினான். அவனோ ‘சாத்தன் காகத்தையே வாந்தி எடுத்தான்’ வேறொருவனிடம் கூறினான். ‘சாத்தன் வாந்தியெடுத்தால் வெறும் காகமாக வருகிறதாம்’ என்று செய்தி ஊர் முழுக்கப் பரவிற்று.

புராணம் என்ற பெயரில் வழங்கும் பழங்கதைகள் எல்லாம் சாத்தன் வாந்தி எடுத்த கதைகள்தாம். பிள்ளையார் பால் குடித்த கதைகளை நாமும் பரப்பியிருக்கிறோம்தானே?

உலகம் என்பது உடல்தான்

வடக்கின் சரிவைச் சமன் செய்வதற்காகத் தெற்கே வந்த அகத்தியர் கதையை வேறாகச் சித்திரிக்கிறார் திருமூலர்:

நடுவுநில் லாதுஇவ் உலகம் சரிந்து

கெடுகின்றது எம்பெரு மான்என்ன, ஈசன்,

நடுஉள அங்கி அகத்திய! நீபோய்

முடுகிய வையத்து முன்நில்என் றானே.

(திருமந்திரம் 337)

‘உலகம் சமநிலை இல்லாது சரிகிறதே பெருமானே’ என்று சிவனிடம் முறையிட்டபோது, ‘நடுவிலே தீயாக இருக்கும் அகத்தீயா! விரைந்து சரியும் இவ்வுலகத்தை நீ முன் நின்று சமன்படுத்து’ என்றான்.

உலகம் என்பதென்ன? உடல்தான். சமநிலை இல்லாது ஒரு பக்கமாகச் சரிவது எது? மூச்சின் ஒழுக்குதான். இடதும் (வடக்கு) வலதுமாக (தெற்கு) இயங்கும் மூச்சுக் காற்று இடதில் (வடக்கில்) மட்டுமே இயங்கினால் கோளாறு; வலதிலும் (தெற்கிலும்) இயங்கவேண்டும்.

அப்போதே சமன்படும். அதைச் செய்ய, அங்கி (தீ) எனப்படும் நடுநாடியை எழுப்பி முன் நிறுத்தவேண்டும். அகத்தியப் பழங்கதை திருமூலர் கையில் உடைபட்டு அகத் தீயின் உருவகமாக மாறி விடுகிறது.

அகத்தியன் இலக்கணம் செய்துகொடுத்த பழங்கதை பாடும் பாரதி வேறோர் இடத்தில் பாடுகிறான்:

பழமை பழமை என்று

பாவனை பேசலன்றிப்

பழமை இருந்த நிலை-கிளியே

பாமரர் ஏதுஅறிவார்?

(பாரதியார் கவிதைகள், நடிப்புச் சுதேசிகள்)

(அகத் தீ எரியட்டும்)

கட்டுரையாசிரியர்,

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x