Published : 04 Apr 2019 11:26 AM
Last Updated : 04 Apr 2019 11:26 AM

இசைபட வாழ்ந்த காருக்குறிச்சி

காருக்குறிச்சி அருணாசலம் நினைவு நாள்: ஏப்ரல் 8

அன்ன மய கோசத்தையும், பிராண மய கோசத்தையும், மனோமய கோசத்தையும் உலுக்கி உள்சென்று ஊடுருவுவது காருக்குறிச்சியாரின் இசை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில்1907-ம் ஆண்டில் அவர் பிறந்தார். அவருடைய தந்தைபலவேசத்துக்கு இசைக்கலை ஒரு தொழிலாக இல்லை. நெல் தானிய அளவையிடுவதே பணி.

ஒரு முறை காருக்குறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர்இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபலநாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார்.அப்பொழுது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்தநாதஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலை கட்டிக்கொண்டிருந்தார்.

“மாப்பிள்ளை புறப்படத்தயார், உங்களை அழைத்துவரச் சொல்கிறார்கள்” என்று நடேச பிள்ளைக்கு ஆள் வந்தது. “பத்து நிமிடங்களில் கிளம்பிவருகிறோம் என்று சொல்” என்று வந்த ஆளிடம் நடேசன் சொல்லியனுப்பினார். இதுபோலப் பல ஆட்கள் வந்தழைப்பதும், “இதோ கிளம்பிவிட்டோம்” என்று நடேச பிள்ளைசொல்வதுமாகவே இருந்தது.

அந்தப் பண்ணையார் ஒரு வார்த்தைசொல்லிவிட்டால், ‘உடனே’ அதற்கு கீழ்ப்பணிந்து எல்லோரும்நடப்பதும், அப்படி நடக்காமல் போனால் பண்ணையாரின் கோபம்அளவு கடக்குமென்ற பிரசித்தமான செய்தியை பலவேசமும்அறிந்திருந்தார். “இந்த நாதஸ்வரக்காரர்” இப்படிஅலட்சியமாகயிருக்கிறாரே, என்ன ஆகப் போகிறதோ என்றகவலை மிகுந்தது அவருக்கு.

கடைசியாகப் பண்ணையாரே நேரில் வந்துவிட்டார். “இதோவந்துகொண்டே இருக்கிறோம், நீங்கள் முன்னால்போய்க்கொண்டிருங்கள்”, என்று அப்போதும் நடேச பிள்ளைகூறியபோது, “அதற்கென்ன, தங்கள் சௌகரியம் போல்வாருங்கள்”, என்று சிறிதும் கோபமற்றவராகப் பண்ணையார்கூறிச் சென்றதைக் கண்ட பலவேசத்துக்கு இது மிகவும்ஆச்சரியத்தை உண்டாக்கியது.

‘ஆஹா! இவர் ஒரு பெரியநாதஸ்வர வித்வான்; இவரிடமுள்ள கலை எவ்வளவு மதிப்புடையதாயிருந்தால் நமது பண்ணையார் இவ்வாறு கோபம் கொள்ளாதிருப்பார்! இந்தக் கலையைப் பயில வேண்டும், அப்போதுதான் நமக்கும் மதிப்பு கிடைக்கும்’, என்று முடிவு செய்த பலவேசம், சேரன்மகாதேவியிலிருந்த நாகஸ்வரக் கலைஞர்ஒருவரிடம் சீடரானார். இவருடைய ஆசை பெரிதே ஒழிய, வயதும் இதரச் சூழ்நிலைகளும் அவரையொரு நாகஸ்வரக்கலைஞராக ஆவதற்கு இடையூறு செய்துவிட்டன.

தன்னால் சாதிக்க முடியாதவொன்றைத் தன் மகனாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் பலவேசத்துக்கு. அந்த நியாயமானவிருப்பம் ஈடேறவே அருணாசலம் தோன்றினார். இவருக்கு கணபதியெனும் இளையவர் ஒருவரும் உண்டு.

சீடனைத் தேடிய குரு

சுத்தமல்லி சுப்பையாக் கம்பர் என்பவரிடம் நாகஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத்தொடங்கினார் அருணாசலம். கலையில் ஒரளவு தேர்ந்தப்பின்,அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கச்சேரிகள் கிடைத்தன. உறவினர்கள் யாவரும் ‘நமது சமூகத்தில் இல்லாத வழக்கமாய் நாதஸ்வரம் கற்பதா? மகனை வீணடிக்கிறார் பலவேசம்’ என்றுஅங்கலாய்ப்பதும், கேலி பேசுவதுமாக இருந்தார்கள்.அருணாசலத்துக்கோ கலை மீதுள்ள பற்றும் ஆர்வமும் அதிகரித்துவந்தன.

ஆயிரம்தான் வாசித்தாலும், தஞ்சை மண்ணில் உதித்த நல்லதொரு கலைஞரிடம் சில காலமாவது சீடனாகவிருந்தால்தான் தன் கலை மெருகேறும் என்ற எண்ணமும் அவரிடம் வளர்ந்தது. உலகிலேயே நாகஸ்வரத்தில் ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கிய, திருவாவடுதுறையார்போன்ற ஒருவரிடம் சீடனாதல் வேண்டும்; ஆனால், தன்னைஅழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தி வைப்பவர் யார்?அப்படியொரு நல்வாய்ப்பு தனக்குக் கிட்டுமா? இவ்வாறு சிந்தனை வயப்பட்டார், அருணாசலம்.

ஆனாலும் அந்த நல்வாய்ப்பு அவரைத் தானாக நாடி, விரைவிலேயே வந்தது. காருக்குறிச்சியிலுள்ள ஒருபண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை வந்திருந்தார். அவருடன் வாசித்து வந்த‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. ‘யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும்’ ஒத்தாசைக்குக் கிடைப்பானா என்று தம் நண்பர்களிடம் கேட்டார், திருவாவடுதுறையார்.

மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்தார். ‘பையன்தேவலாமே. இவன் சில காலம் என்னோடிருக்கட்டும்’, என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம்.

திருவாவடுதுறைக்குப் பிறகு காருக்குறிச்சி

தனித்து, அமர்ந்து, முறைப்படியெல்லாம் கற்பிப்பவரல்ல திருவாவடுதுறையார். வீட்டிலிருக்கும் போதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பார். அதைக் கவனமாகக் கேட்பது, கச்சேரிகளில்கூட அமர்ந்து கேட்பது இவைதான் பயிற்சி.கற்பதைக் காட்டிலும், இசையில் 'கேள்வி' பெரும் பயனைத் தரும். அருணாசலத்தை நோக்கி மிக உயர்ந்த ஸ்தானம் விரைந்துவந்தது. ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளைவாசிப்பது போன்ற பல அம்சங்களில் நிகரற்றவராக அவர் ஆனார்.

பாராட்டுகளும், பட்டங்களும், சன்மானங்களும் வந்து குவிந்தன. ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின்பு, மிக உயர்ந்த இடம் அவருக்குக்கிடைத்தது. புகழும், பொருளும், பெயரும், மதிப்பும் எந்த அளவுக்குக் கூடியதோ, அதற்கு முற்றிலும் மாறாகச் சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகுபவராகவே அருணாசலம் இருந்துவந்தார். தன்னை இழித்தோ இடித்தோ எவர் பேசினாலும், அவர் சிறிதும் வருந்தியதில்லை.

ரசிகர்களுக்குக் காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் அவர்மீது உயிரையே வைத்திருந்தனர். ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நிகழ்ந்த அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை, வானொலி நிலையத்தினர் வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பினர்.

மகா வித்வான்

'தந்தை ஆசைப்பட்டார், தனயன் சாதித்தார்' என்று கூறும் விதத்தில் புகழை ஈட்டிய அருணாசலம், கோவில்பட்டியில்அழகான மாளிகையொன்றை எழுப்பி அதிலே வாழ்ந்து வந்தார். நெல்லையப்பர் கோயில் சோமவார மண்டபத்தில் காருக்குறிச்சியின் நாதஸ்வர கச்சேரி என்றால் முக்கியமானபெரியவர்கள் அனைவரும் தவறாமல் வந்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்லலாம்.

அப்படி அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம்.'அனார்கலி' என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டுபாடுவார். அந்தப் பாடலை காருக்குறிச்சி தனது நாதஸ்வரத்தில் இசைத்திருப்பார்.

புகழேணியின் உச்சியை எளிதாகவும் விரைவாகவும் எட்டிப்பிடித்த நாகஸ்வர விற்பன்னரான காருக்குறிச்சி அருணாசலம் 7.4.1964 அன்று தன் கோவில்பட்டி இல்லத்தில் இயற்கையைத் தழுவி, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார். கடந்த மாதம் அவருடைய மனைவி ராமலட்சுமி அருணாசலம் காலமானார்.

காருக்குறிச்சியைப் பற்றி புகழும்போது அவருடன் சேர்ந்து வாசித்தவர்களை மறக்க முடியாது. வாசிப்பது ஒரு சுவை, வாங்கி வாசிப்பது அதைவிட சுவை. அந்த பெருமைக்குரியவர் ரி.வி. அருணாசலம்.

காருக்குறிச்சியின் வாசிப்பு ஒரு சுகத்தைத் தரும். அந்த சுகம் ரசிகர்களுக்கு ஒரு போதை. 'ஒப்பாரும் மிக்காரும் இலர்' என்று வாழ்ந்தவர். நாகஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கிறவரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். நாகஸ்வரத்தில் அப்படியொரு மஹா வித்வான் அவர்.

- எல். மகாதேவன், ஆயுர்வேத மருத்துவர்
தொடர்புக்கு: mahadevan101@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x