Last Updated : 07 Mar, 2019 11:01 AM

 

Published : 07 Mar 2019 11:01 AM
Last Updated : 07 Mar 2019 11:01 AM

உட்பொருள் அறிவோம் 06: பரிபூரண சரணாகதி

ஆன்ம சாக்ஷாத்காரம், முழுவிழிப்பு நிலை, கடவுளை அறிதல், தன்னை அறிதல் என்று பல பெயர்களால் அறியப்பட்டு வந்திருக்கும் உள்முகத்தேடலின் ஆணிவேராகக் கருதப்பட்டு வந்திருப்பது சரணாகதி என்னும் தத்துவம். மிகவும் மாறுபாடுகள் கொண்டவையாகக் காணப்பட்டு வரும் பல்வேறு கலாச்சாரங்கள் இந்தத் தத்துவத்தை மைய முக்கியத்துவம் கொண்டதாக முன்வைக்கின்றன.

முதலில் மகாபாரதத்தில் ஒரு காட்சி. தருமபுத்திரன் சூதாட்டத்தில் முதலில் தன் சகோதரர்களையும், பிறகு தன்னையும், கடைசியாகப் பாஞ்சாலியையும் பணயம் வைத்து இழந்து விடுகிறான். துரியோதனன் துச்சாதனனை அனுப்பிப் பாஞ்சாலியை சபைக்கு இழுத்துவரச் செய்கிறான். ‘அடிமைக்கு உடையெதற்கு?' என்று பாஞ்சாலியின் உடையைக் களைய உத்தரவிடுகிறான். அவன் கட்டளைக்கு இணங்கி துச்சாதனன் அவளுடைய உடையைக் களைய முற்படுகிறான்.

பாஞ்சாலி உடல் நடுங்குகிறாள். மனம் நடுங்குகிறாள். கைகளால் தன் நெஞ்சை மறைத்துக்கொண்டு, ‘கண்ணா, என்னைக் காத்தருள்வாய் உன் சகோதரியாகிய எனக்கு இங்கு நேரும் இழிவிலிருந்து என்னைக் காத்தருள்வாய்,' என்று கதறுகிறாள்.

அங்கே கண்ணன் ருக்மணியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கிறான். பாஞ்சாலியின் குரல் அங்கே கேட்கிறது. ருக்மணி கண்ணனிடம், ‘கண்ணா, உன் பக்தை, உன் சகோதரி, திரௌபதி, அங்கு உன் உபகாரம் வேண்டி அழுகிறாள். உன்னைக் கூப்பிடுகிறாள். நீ இங்கே என்னோடு சுகமாகச் சொக்காட்டான் ஆடிக்கொண்டிருக்கிறாய். ஆபத்பாந்தவன் என்று உன்னைச் சொல்கிறார்கள். அதுவும் ஒரு பெண். மானபங்கம் ஆகும் நிலையில் நிற்கிறாள். நீ போய் உதவி செய்ய மாட்டாயா?' என்று கேட்கிறாள்.

நீ உன் ஆட்டத்தை ஆடு

கண்ணன், ‘நீ ஆடு ருக்மணி, எனக்கு எப்போது போகவேண்டும் என்று தெரியும். நீ உன் ஆட்டத்தை ஆடு,' என்கிறான்.

‘உங்களுக்கு இரக்கமே இல்லை. அங்கே பாருங்கள். அவள் எப்படித் தவிக்கிறாள் என்று,' என அழுகிறாள் ருக்மணி.

‘எனக்குத் தெரியும், ஒன்றும் ஆகிவிடாது. நீ இப்போது ஆடு,' என்கிறான் கண்ணன்.

அங்கே கௌரவ சபையில் துச்சாதனன் பற்றியிழுக்க, திரௌபதியின் உடை கலையத் தொடங்குகிறது. ‘கண்ணா, கண்ணா, இனி நீதான் எனக்கு எல்லாம். சரணம். உன் திருவடி சரணம்,' என்று தன் நெஞ்சை மறைத்திருந்த இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, ‘கண்ணா, மணிவண்ணா,' என்று காலம், தேசம் மறந்து, தன் உள்ளுயிரில் கலந்து நிற்கிறாள்.

கண்ணன் தன் கையைத் தூக்குகிறான். அவன் கையிலிருந்து வெள்ளமெனத் துணிகள் தோன்றுகின்றன. திரௌபதியின் உடலைச் சுற்றிக் கொள்கின்றன. துச்சாதனன் இழுக்க இழுக்க அதைவிட வேகமாகத் துணிகள் கண்காணாத ஒரு அருவியிலிருந்து விழுவதுபோல் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. துச்சாதனன் கை ஓய்ந்துபோய் விழுகிறான்.

பசியும் தாகமும்

இதோ மற்றொரு கதை. அந்தக் காலத்துக் கதை. சிறு வயதிலிருந்தே இறைச் சிந்தையில் தன் மனத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்த பக்திமானான மௌல்வி ஒருவரின் கதை. இஸ்லாமின் கொள்கைகளுக்கேற்ப வாழ்ந்து, தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தி, தன் பெண்களுக்கு நிக்காஹ் செய்வித்து, மகன்களும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின், புனித மெக்காவுக்கு ‘ஹஜ்' பயணம் தொடங்குகிறார் மௌல்வி. அப்போதே அவருக்கு வயதாகிவிடுகிறது. தள்ளாமையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார்.

அந்தக் காலத்தில் விமானத்தில் போய் இறங்கும் வசதி இல்லை. பாலைவனம் முழுவதும் கால்நடையாக நடந்துபோய்த்தான் மெக்காவை அடைய முடியும். கையில் வெறும் வாளி ஒன்றையும் நான்கு முழக் கயிறு ஒன்றையும் மட்டுமே எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் அவர்.

முதலில் சில நாட்கள் அங்கங்கே வழியில் தென்படும் பாலைவனச் சோலைகளில் கிடைக்கும் உணவையும், பேரீச்சம்பழங்களையும் உண்டு, அங்கு இருந்த சுனைகளிலிருந்து தண்ணீரைக் குடித்து மேலே பயணத்தைத் தொடருகிறார். நாட்கள் செல்லச் செல்லப் பாலைவனச் சோலைகள் தென்படுவது அரிதாகிவிடுகிறது. பசியும் தாகமும் வருத்துகின்றன.

எப்போதாவது அங்கங்கே நீர்ச்சுனைகள் மட்டும் கண்களில் படுகின்றன. அதுவும் அல்லாவின் கருணை என்று கயிறு கொண்டு வாளியால் வெறும் தண்ணீரை மட்டும் இழுத்துக் குடித்துவிட்டு மேலே செல்கிறார். போகப் போகத் தண்ணீர்கூடக் கிடைப்பது அரிதாகிவிடுகிறது.

சில நாட்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் பாலைவனத்தின் கடும் வெயிலில் நடந்து களைப்புடன் ஒவ்வொரு அடியாக நடந்து செல்கிறார். பசியிலும் தாகத்திலும் கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன. மெக்காவுக்குப் போய்ச் சேருவோமா என்பதே அவருக்குச் சந்தேகமாகிவிடுகிறது.

கண்களை மூடிப் பிரார்த்திக்கிறார். ‘அல்லா, உன் கருணையால், உன் உத்தரவுப்படி என் சமூகக் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு உன் தரிசனம் தேடிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன். உன்னைத் தவிர என் வாழ்க்கையில் எதையும் பெரிதாக நான் கொள்ளவில்லை. நான் உன்னை வந்து சேருவதற்குப் போதுமான அளவுக்குச் சக்தி வேண்டும். அவ்வளவுதான். வேறெதையும் நான் உன்னிடம் கேட்கவில்லை. உன் அடிமை குடிப்பதற்கு ஒரு வாய்த் தண்ணீர் இருந்தால் போதும். வேறொன்றும் வேண்டாம்,' என்று நெஞ்சுருகப் பிரார்த்தனை செய்கிறார்.

பத்து அடி தூரத்தில் மண்ணிலிருந்து தண்ணீர் ஊற்றாக மேலே எழுகிறது. 'ஆகா, அல்லாவின் கருணையே கருணை. இந்த எளிய பக்தனுக்கும் அருள் புரியும் உன் கருணைக்கு அளவேது, என் இறைவா!' என்று மனமுருகி, அந்த ஊற்றை நோக்கி நகரும் கணத்தில் பாலைவன நாய் ஒன்று அந்த நீரூற்றை நோக்கிப் போகிறது. இவர் அங்கேயே நின்றுவிடுகிறார். அந்த நாய் தண்ணீர் குடித்துச் செல்லட்டும், பிறகு நாம் குடித்துக்கொள்வோம் என்று காத்திருக்கிறார். நாய் தண்ணீர் குடித்துவிட்டு நகர்கிறது. இவர் ஊற்றருகே செல்கிறார். தண்ணீர் மண்ணுக்குள் போய்விடுகிறது!

என்னை மட்டும் நம்பு

உலகமே இருண்டு போனதுபோல் ஆகிவிடுகிறது பெரியவருக்கு. கண்களில் நீர் வழிய, மனம் நொந்து போய், பாலைவனத்துச் சுடுமணலில் மண்டியிட்டு அமர்ந்து, 'அல்லா, கருணையே உருவானவனே, உன்னால் ஆகாதது எதுவும் கிடையாது. நீ அறியாதது ஒன்றுமில்லை.

நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னை நினைத்துத்தானே என் வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறேன்? இப்போது இந்தத் தள்ளாத வயதில் இந்தப் பாலைவனத்து வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து எங்கே போகிறேன்? உன் தரிசனத்துக்காகத்தானே? நாக்கு நனைய ஒரு வாய் தண்ணீர்தானே கேட்டேன்? நீ இருப்பதைக்கூட அறியாத அந்த ஐந்தறிவுள்ள நாய்க்கு நீ காட்டிய கருணைகூட இந்த ஏழை பக்தனுக்குக் கிடையாதா?' என்று புலம்புகிறார்.

அப்போது பாலைவன வெளியில் ஒரு அசரீரி கேட்கிறது. ‘அந்த நாய் என்னை மட்டுமே நம்பி வந்தது. உன்னைப்போல் கயிறையும் வாளியையும் தூக்கி வரவில்லை!'

கயிறும் வாளியும் கையிலிருந்து தாமாகக் கீழே விழுகின்றன. ‘அல்லா, என்னை மன்னித்துவிடுங்கள். இனி நீங்கள்தான் எனக்குத் துணை. நான் மெக்கா போய்ச் சேருவது இனி உங்கள் தயவில்தான் இருக்கிறது! என்று புதிய தெளிவுடன் மெக்கா போய்ச் சேருகிறார் பெரியவர்.

முழு நம்பிக்கை வரும்போதுதான் இறைவனின் அருள் அளவற்றுப் பொழியும். ‘என்னால் முடியும்' என்று நினைக்கும் வரையில் இறைவன் குறுக்கிடுவதில்லை. தன்னால் ஆனதையெல்லாம் செய்துவிட்டு, அதற்குமேல் முடியவில்லை என்பதறிந்து, ‘நீதான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும்,' என்று முழுமையாகச் சரணடையும்போதுதான் நம்மைக் கடந்த தளத்திலிருந்து இறைவனின் அருள் நம்மை வந்தடையும். பூரண சரணாகதியின் மகத்துவம் இதுதான்.

(மகத்துவம் தொடரும்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x