Last Updated : 20 Mar, 2019 11:36 AM

 

Published : 20 Mar 2019 11:36 AM
Last Updated : 20 Mar 2019 11:36 AM

பிரிந்த தம்பதியை சேர்க்கும் பங்குனி உத்திர விரத முறைகள்!

உத்திரம் எனும் விசேஷமான நட்சத்திரமும் பங்குனி மாதமும் கூடிய பங்குனி உத்திரப் பெருநாளில், விரதமிருந்து இறைவனைத் தரிசிப்பது வீட்டில் ஒற்றுமையை மேம்படுத்தும். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நாளை 21.3.19 பங்குனி உத்திரம்.

இந்தநாளில், முறையே விரதம் இருந்து, முருகப்பெருமானை தரிசியுங்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும்.

விரதம் எப்படி இருப்பது?

அதிகாலையில் நீராடுங்கள். வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வத் திருமேனிகள் அலங்கரிக்கும் படங்களுக்கு பூக்களால் அலங்கரியுங்கள். முடிந்தால், முருகனுக்கு உகந்த செந்நிற மலர்களை சூட்டுங்கள்.

பிறகு, காலையிலும் மதியத்திலும் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே உத்தமம். இதுவே விரதம். இயலாதவர்கள், வயதானவர்கள் ஏதேனும் கஞ்சி முதலான ஆகாரங்களை உட்கொள்வதில் தவறொன்றுமில்லை.

உங்கள் வசதிக்குத் தக்கபடி, அன்னதானம் செய்யலாம். அப்படி செய்ய இயலாதவர்கள், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம்.

அதேபோல், வீட்டு வாசலில் அல்லது கோயில் வாசலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து வழங்கலாம். நீர்மோர், பானகம் தருவதும் சிறப்பு வாய்ந்தது. ’இதுக்கெல்லாம் வசதி இல்லியே’ என்று வருந்துவோர், வீட்டு வாசலில், ஒரு பானையில் நீர் பிடித்து வைத்துவிடுங்கள். அதுவே மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம்.

மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்குச் செல்லுங்கள். முருகப்பெருமானுக்கு அப்போது திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். முடிந்தால், திருக்கல்யாணத்தை தரிசியுங்கள். அல்லது முழுமனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிற முருகப்பெருமானை தரிசித்தாலே போதும்... ஏதோவொரு காரணத்தால், பிரிந்திருக்கிற கணவனும் மனைவியும், சீக்கிரமே மனம் திருந்தி, சேருவார்கள் என்பது ஐதீகம். பிறகு வீட்டுக்கு வந்து விளக்கேற்றி, நமஸ்கரித்து, உணவு எடுத்துக்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

அதேபோல், இல்லத்தில் கருத்து ஒற்றுமை இன்னும் பலப்படும். கணவனும் மனைவியும் பரஸ்பரம் இன்னும் இன்னும் புரிந்துகொண்டு அன்புடனும் அனுசரனையாகவும் இருப்பார்கள் என்பது உறுதி.

பங்குனி உத்திர விரதம்... பிரிந்த தம்பதியையும் ஒன்று சேர்க்கும். இணைந்து வாழும் தம்பதிக்குள் இன்னும் அந்நியோன்யத்தையும் அன்பையும் பெருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x