Last Updated : 28 Feb, 2019 10:04 AM

 

Published : 28 Feb 2019 10:04 AM
Last Updated : 28 Feb 2019 10:04 AM

விவிலிய மாந்தர்கள்: கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்

கடவுள் தந்த திருச்சட்டங்களைப் பெற்று இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த முதுபெரும் தலைவரான மோசேயின் உதவியாளர்தான் யோசுவா. மோசேயேயைவிட 35 வயது இளையவர். மோசேவுக்கு இணையாக, பரலோகத் தந்தையிடம் முழுமையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தவர். மிகச்சிறந்த போர்வீரராக விளங்கிய யோசுவா, எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த நூன் என்பவரின் மகன்.

யோசுவாவின் தகுதியைக் கண்ட கடவுள் அவரை இஸ்ரவேலர்களின் 12 கோத்திரங்களுக்கும் தலைவராகத் தேர்ந்தெடுத்தார். கடவுளின் தேர்வு தூய்மையும் துல்லியமும் மிக்கதாக இருக்கும் என்பதற்கு யோசுவா எப்படி சிறந்த உதராணமாக அமைந்தார் என்பதைப் பார்ப்போம்.

குருவின் முதன்மைச் சீடர்

மோசே இஸ்ரவேலர்களின் தலைவராக நீண்டகாலம் இருந்தார். முதுமையின் விளிம்பில் இருந்த அவர், “ எனக்குப் பின்னர் மக்களைக் கவனித்துக் கொள்ள ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள்” என கடவுளிடம் கேட்டார். அதற்கு கடவுள், “ உனது உதவியாளனாகிய ‘யோசுவாவிடம் போய், நீதான் புதிய தலைவர் என்று சொல்” என்றார். உடன் மோசே இஸ்ரவேலர்களிடம் யோசுவாவை அழைத்துச் சென்று “நான் இன்னும் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டேன்.

உங்களுக்குப் புதிய தலைவராக யோசுவாவை கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் நமக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்தான் உங்களைக் கூட்டிக்கொண்டு போவார்” என்று சொன்னார். பின்னர் மோசே தனது 120-வது வயதில் இறந்து போனார். மோசேயின் மறைவுக்குப் பின்னர் கடவுள் தேர்ந்துகொண்ட யோசுவாவை இஸ்ரவேலர்கள் முறைப்படி தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

கடவுளின் கட்டளையை ஏற்ற தலைவர்

மோசே உயிரோடு இருந்தவரை அவரிடம் கடவுள் உரையாடியதைப் போலவே இப்போது தனது புதிய ஊழியனாகிய யோசுவாவிடம் கடவுள் உரையாடினார். யோசுவாவை அழைத்த கடவுள், “நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன். உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன். நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு. உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ள மக்களை நீ வழிநடத்திச் செல்.

தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே, அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய். இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு. அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக இரவும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி.

அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய். நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன். நீ மக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றைக் கடந்து, கானான் தேசத்துக்குப் போ” என்று சொன்னார்.

கடவுளின் வார்த்தைகளே ஆயுதம்

யோசுவா தன்னிடமும் தனது வீரர்களிடமும் இருந்த ஆயுதங்களை நம்பவில்லை. மாறாக கடவுள் தனக்குச் சொன்ன வார்த்தைகளையே ஆயுதமாக எண்ணினார். யோர்தானுக்கு அந்தப் பக்கமிருந்த கானான் தேசத்தில் எரிகோ நகரத்தின் கோட்டை யாராலும் தகர்க்கமுடியாததாக இருந்தது. அந்த நகரின் நிலவரத்தை உளவறிந்த யோசுவா, “கானான் தேசத்துக்குப் போக இதுதான் சரியான நேரம்; எல்லாரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்புங்கள்” என்று சொன்னார்.

பிறகு, திருச்சட்டங்கள் வைக்கப்பட்ட புனிதப் பெட்டியை சுமந்து செல்லும் குருமார்களை, முதலில் யோர்தான் ஆற்றுக்குள் இறங்கச் சொன்னார். அந்தச் சமயத்தில், யோர்தான் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், பெட்டியைச் சுமந்த குருமார்கள் ஆற்றில் கால் வைத்த உடன், தண்ணீர் ஓடுவது நின்றது; ஆற்றின் தண்ணீர் சுத்தமாக வடிந்து தரை தெரிந்தது! குருமார்கள் இப்போது ஆற்றின் நடுப்பகுதிக்குப் போய் நின்றார்கள்.

மக்கள் எல்லாரும் அக்கரைக்குப் போய்ச் சேரும்வரை அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். எகிப்தியர்களிடமிருந்து கடவுள் மீட்டு அழைத்து வந்தபோது, கடலை இரண்டாகப் பிரித்து கட்டாந்தரையாக்கிய கடவுள் செய்த அற்புதம் யோசுவாவுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. கடவுள் தன்னோடு இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

வெற்றிகளின் தலைவர்

அதற்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து எரிகோ கோட்டை நகரத்தை அடைந்தார்கள். தினமும் அந்த நகரத்தை ஒரு முறை வீதம் ஆறு நாட்களுக்கு அந்த நகரத்தைச் சுற்றிவரும்படி கடவுள் கூறியதைக் கேட்டு தனது வீரர்களோடு அவ்வாறே செய்தார் யோசுவா.

ஏழாவது நாளில், ஏழு முறை அந்த நகரத்தைச் சுற்றி வந்தார்கள். பிறகு, குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். உடனே, எரிகோவின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. யோசுவாவின் தலைமையில் முதல் வெற்றி இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்தது.

கிபிலோனியர்களை மன்னித்த யோசுவா

எரிகோவைப் பற்றிய செய்தி கானானில் இருந்த மற்ற குறுநில தேசங்களுக்கும் பரவியது. அவற்றின் அரசர்கள் ஒன்றாக இணைந்து இஸ்ரவேலர்களுடன் போரிட முடிவு செய்தார்கள். ஆனால், கிபிலோனியர்கள் மட்டும் கிழிந்துபோன பழைய உடைகளை அணிந்துகொண்டு யோசுவாவிடம் வந்தனர். அவரிடம், “நாங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறோம்.

உங்களது கடவுளைப் பற்றியும், எகிப்திலும் மோவாபிலும் அவர் உங்களுக்கு உதவி செய்ததைப் பற்றியும் கேள்விப்பட்டோம். எங்களைத் தாக்க மாட்டீர்கள் என்று எங்களுக்குச் சத்தியம்செய்து தாருங்கள், நாங்கள் உங்களுக்குப் பணியாளர்களாக இருப்போம்” என்று வேண்டினார்கள். அவர்கள் சொன்னதை நம்பி யோசுவா அவர்களுக்கு இரங்கினார்.

ஆனால் மூன்று தினங்களுக்குப் பின்னர், அவர்கள் வெகு தொலைவிலிருந்து வரவில்லை என்பதும் அவர்களும் கானான் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் தெரியவந்தது. யோசுவா கோபப்படாமல் அவர்களிடம், “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “எங்களுக்குப் பயமாக இருந்தது! உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தை உங்களுக்காகச் சண்டை போடுகிறார் என்று எங்களுக்குத் தெரியும். தயவுசெய்து எங்களைக் கொன்றுவிடாதீர்கள்!” என்று கெஞ்சினார்கள். அதைக் கேட்டு யோசுவா அவர்களை மன்னித்து உயிரோடு விட்டுவிட்டார்.

மறையாத சூரியன்

கிபிலோனியர்களை மன்னித்த யோசுவா மீதும் கிபிலோனியர்கள் மீது, கானானைச் சேர்ந்த ஐந்து அரசர்கள் மேலும் கோபம் கொண்டார்கள். தங்கள் படைகளோடு அவர்களைத் தாக்க வந்தார்கள். போரில் இஸ்ரவேலர்களின் வீரத்தைக் கண்ட ஐந்து அரசர்களின் படையினர் நாலாப்பக்கமும் சிதறி ஓடினார்கள்.

அவர்கள் ஓடிய பக்கமெல்லாம், கடவுள் அவர்கள்மேல் பெரிய பெரிய ஆலங்கட்டிகளை வானத்திலிருந்து விழச் செய்தார். மாலை மயங்கியது. அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு எதிரிகள் ஓடி மறைய நினைத்தார்கள். பிறகு யோசுவா, சூரியனை அசையாமல் நிற்க வைக்கும்படி கடவுளிடம் கேட்டார். அவர் கேட்டபடியே ஐந்து அரசர்களின் படைகளை இஸ்ரவேலர்கள் முற்றாகத் தோற்கடிக்கும்வரை சூரியன் மறையவே இல்லை.

அந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கடவுள் வாக்களித்த கானான் தேசத்தில் இஸ்ரவேலர்கள் குடியேறினார்கள். அங்கே வீடுகளையும் நகரங்களையும் கட்டினார்கள், பயிர்செய்தார்கள், திராட்சைத் தோட்டங்களையும் பழத் தோட்டங்களையும் அமைத்தார்கள். பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசத்தை கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார். யோசுவா எனும் மாவீரன் கடவுளின் ஊழியனாக இருந்து அதை சாதித்துக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x