Published : 07 Feb 2019 10:39 AM
Last Updated : 07 Feb 2019 10:39 AM

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

நிகழும் விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி புதன்கிழமை 13.02.2019 சுக்ல பட்சத்து நவமி திதி, கீழ்நோக்குள்ள கார்த்திகை நட்சத்திரம், ஐந்திரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த, அமிர்தயோகத்தில் புதன் ஓரையில், பஞ்சபட்சியில் வல்லூறு தனது வலுவான அரசுக் தொழில் செய்யும் நேரத்திலும், உத்தராயணப் புன்ய கால சிசிர ருதுவிலும், மதியம் மணி 1.25க்கு ரிஷப லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் சாயா கிரகங்களென வர்ணிக்கப்படும் சர்ப்ப கிரகங்களாகிய ராகுவும், கேதுவும் இடம்பெயர்கின்றனர்.

கருநாகமெனும் ராகு சரவீடான கடக ராசியிலிருந்து உபய வீடான மிதுனம் ராசிக்குள்ளேயும், செந்நாகமெனும் கேது சரவீடான மகர ராசியிலிருந்து உபய வீடான தனுசு ராசிக்குள்ளும் நுழைந்து 31.08.2020 வரை இங்கிருந்து தங்களின் அதிகாரத்தை செலுத்துவர்.

ராகு&கேதுவின் கோச்சார தசா புத்திப்பலன்களைப் பற்றி பேசாத ஜோதிட நூல்களே இல்லை எனலாம். அதில் சந்திரகலாநாடி என்கிற தேவகேரசம் எனும் சமஸ்கிருத ஜோதிட நூலில் தான் ராகு, கேதுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மேற்கண்ட நிழல் கிரகங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.

பிதுர் பாட்டனுக்குரிய கிரகமான ராகு பனிரெண்டாம் இடத்து அதிபதி  மற்றும் பனிரெண்டாம் இடத்து அதிபதி நவாம்ச வீட்டில் நுழைந்தால் அக்கால கட்டத்தில் தந்தை வழி பாட்டனாருக்கு கண்டம் என்கிறது.

ஒருவரின் ஜாதகத்தால் சந்திரனுக்கும் ராகு நின்ற ராசிக்கும் இடையே எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அவர் சமசீரற்ற புத்தி நிலையுடனும், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவராகவும் இருப்பார். சனியுடன் கேது சேர்ந்திருந்தால் தொடர்ந்து 42 நாட்களுக்கு பைரவரை வழிபட வேண்டும். செவ்வாயுடன் கேது சம்பந்தப்பட்டிருந்தால் செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து அனுமன் கோவிலுக்கு சென்று 11 முறை சுற்றி வந்து 42 நாட்கள் வணங்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

ஆனந்த கால சர்ப்ப தோஷம், வாசுகி கால சர்ப்ப தோஷம், மகாபத்ம கால சர்ப்ப தோஷம் என கால சர்ப்ப தோஷங்களை பனிரெண்டு வகை உள்ளதாக ஜோதிட நூல்கள் பறைசாற்றுகின்றன. ராகு கேது இந்த பெயர்ச்சியின் மூலம் நாட்டிற்கும், வீட்டிற்கும் என்ன தரப் போகிறார்கள் எனப் பார்ப்போம்.

ராகுவால் ஏற்படும் பலன்கள்

ஆண், பெண் சேர்ந்த மைதினம் என்று சொல்லக்கூடிய மிதுனம் ராசியில் ராகு அமர்வதால் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாகும். தச்சு வேலை, மரத்தொழில் சூடு பிடிக்கும். சினிமாத் துறையில் பெரிய பட்ஜெட் படங்கள், வரலாற்றுப் படங்கள் வெற்றி அடையும். பேச்சு ஸ்தானமான புதன் வீட்டில் ராகு அமர்வதால் அரசாங்கமும், நீதிமன்றமும் எந்த திட்டம், தீர்ப்பை அறிவித்தாலும் கடுமையான விமர்சனங்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடையே ஆங்காங்கே கருத்து மோதல்கள் இருக்கும். சுற்றுலா சூடுபிடிக்கும். மக்களிடையே உண்டு களிக்கும் குணம் மேலோங்கும். விலைவாசியில் கடுமையான ஏற்றம், இறக்கம் இருக்கும். மக்களிடையே மனஇறுக்கம், குழப்பமான மனநிலை, தற்கொலை எண்ணங்கள் கூடுதலாகும். பாலுணர்வு, முறையற்ற உணர்வு வெளிப்பாடுகள் பெருகும். சூதாட்டம் அதிகரிக்கும். சில தவறுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்.

பிரபலமான நூலகங்கள், பூங்காக்கள் இடம் மாற்றப்படும். நூலகங்களில் தீவிபத்து ஏற்படும். இரட்டைப் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும். விமான விபத்துகள் அதிகரிக்கும். 7.5.2019 முதல் 22.06.2019 வரை உள்ள காலக்கட்டம் நாட்டில் நெருக்கடி நிலை, தலைவர்கள் உயிரிழப்பு, நிலநடுக்கம், போராட்டம், மதக்கலவரங்கள் ஏற்படும். கம்ப்யூட்டர் துறையில் வேலைவாய்ப்பு குறையும். சில சாப்ட்வேர் கம்பெனிகள் மூடப்படும். ஆனால் புதிய ‘ஆப்’கள் கண்டுபிடிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து அவற்றின் விலை குறையும். பொதுவாக ராகுப் பெயர்ச்சியால் மக்களிடையே சின்னசின்ன சந்தோஷத்தில் நாட்டம் அதிகமாகும். பொறுமை குறையும்.

கேதுவால் ஏற்படும் பலன்கள்

போர்தளவாட வீடான தனுசில் கேது அமர்வதால் எல்லையில் பதற்றம் அதிகரிக்கும். நாடாளுபவர்களிடையே போர்க்குணம் மேலோங்கும். டாக்டர்களின் போராட்டம், வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் உயிரிழப்பர். தலைவர்கள் கடத்தப்படலாம்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறிநிலை ஏற்பட்டு மறைமுக ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டு. பின்னர் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுடன் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் சந்தித்த நிலை ஏற்படலாம். நெருப்பு, மனித வெடிகுண்டுகளால் ஆபத்துகள் ஏற்படும்.

சமாதி, சுடுகாடுகளால் பிரச்சினைகள் வரும். கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும். மாமிச ஏற்றுமதி இறக்குமதியில் உணவுக் கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு சட்டம் வரும். தர்ம வீடான தனுசில் கேது அமர்வதால் அதர்மம் அதிகமாகும். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தீவிர தாக்குதல்கள் நிகழும்.

குஜராத், பஞ்சாப் மாநிலங்கள் பாதிக்கப்படும். பட்டாசு, ரசாயனக் கலவைகளால் விபத்துகள் ஏற்படும். இடுப்பு, தொடைகளில் நோய்கள் அதிகமாகும். கல்லூரிகளில் தேர்வுக் கட்டுப்பாடு இறுகும். கல்லூரி மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்படுவர். பொதுவாக கேதுப் பெயர்ச்சி மக்களிடையே சகிப்புத் தன்மையை குறைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x