Last Updated : 14 Feb, 2019 10:21 AM

 

Published : 14 Feb 2019 10:21 AM
Last Updated : 14 Feb 2019 10:21 AM

விவிலிய மாந்தர்கள்: சிங்கத்தின் வாய்க்குத் தப்பியவர்!

மெசபடோமியாவின் வலிமையான தலைநகராக இருந்தது பாபிலோன். கிறிஸ்துவுக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன் பாபிலோன் நகரத்தில் தானியேல் என்ற யூத தீர்க்கதரிசி வாழ்ந்தார். போர்க் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டு, பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்டவர்; கிட்டத்தட்ட ஒரு போர்க்கைதியாக இருந்த அவருக்கு 90 வயது. ஆனால் 40 வயது இளைஞனுக்குரிய நிர்வாகத் திறன் அவரிடம் இருந்தது.

“பாபிலோனை மிகுந்த பெருமையுடன் ஆட்சி செய்துவரும் பெல்ஷாத்சாரின் ஆட்சி முடியப்போகிறது. பாபிலோன் நகரம் சில மணிநேரத்தில் பிடிபட்டு விடும்” என்று தானியேல் தீர்க்கதரிசனமொன்றை உரைத்தார். அவர் உரைத்தது போலவே பேரரசன் தரியுவின் படையின் முன்னால் பாபிலோன் வீழ்ந்தது. தானியேலின் தீர்க்கதரிசனம் பற்றி பாபிலோனை வெல்வதற்கு முன்பே நன்கு அறிந்திருந்தான் பேரரசன் தரியு.

உலகைப் படைத்து இயக்கும் கடவுளின் அருளாசி இல்லாமல் தானியேல் போன்றவர்கள் இப்படி முன்னறிவிக்க முடியாது என்று தரியு நம்பினான். அதனால் தானியேலை அழைத்து வந்து தனது அவையில் தலைமை அமைச்சர் ஆக்கினான். அதுவும் சும்மாயில்லை; தனது பெரிய ராஜ்ஜியத்தின் பல்வேறு நிலப்பகுதிகளின் ஆட்சி நிர்வாகங்களை கவனிக்கும் தேசாதிபதிகளை மேற்பார்வையிடும் தலைமைப் பிரதானியாக நியமித்தான்.

இது அரசனுக்கு அடுத்துள்ள முதன்மை அமைச்சர் பதவியாகும். 90 வயதில் இருக்கும் தானியேலை ஓய்வு கொடுத்து அனுப்புவதற்கு பதிலாக எங்கிருந்தோ வந்த ஒருவனை, இங்கிருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு எல்லாம் தலைவர் ஆக்கிவிட்டானே நமது அரசன்! என்று மற்ற அமைச்சர்களும் தேசாதிபதிகளும் பொறாமையால் புழுங்கத் தொடங்கினார்கள்.

எனவே எப்படியாவது தானியேலை அரசனின் பார்வையில் குற்றவாளியாக ஆக்கி அவரைக் கொன்றுவிடுவதற்கான சதித்திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால் தானியேலின் தூய்மை முன்பாக எதுவும் எடுபடவில்லை. வேறு எப்படித்தான் அந்தக் கிழவனை வீழ்த்துவது என்று அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தபோது தானியேலின் தெய்வ பக்தியை கடைசி பகடையாக உருட்ட முடிவு செய்தார்கள்.

பொறாமைக்காரர்களின் திட்டம்

தானியேல் தினமும் மூன்றுமுறை கடவுளாகிய யகோவாவிடம் மண்டியிட்டுத் தன் கரங்களை உயர்த்தித் தனிமையில் அமைதியாகப் பிரார்த்தனை செய்வதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். மெசபடோமியா முழுவதும் மக்கள் அரசர்களை முதன்மைக் கடவுளாக வழிபடும் பழக்கம் இருந்துவந்தது. ‘மடையர்கள்.

மனிதனை கடவுளாகக் கருதி வழிபடுகிறார்களே’ என அரசன் தரியுவுக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்தச் சமயத்தில் தானியேலின் எதிரிகள் அரசனிடம் போய், அவன் மகிழ்ச்சியாக இருந்த தருணம் பார்த்து “ அரசே.. நூறாண்டு சம்ராஜ்ஜியமாகிய பாபிலோனை வீழ்த்திய பெருமைக்குரிய உங்களைத் தவிர வேறு யாரிடமும் மக்கள் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளக் கூடாது என்று ஒரு சட்டம் போட வேண்டும்.

அந்தச் சட்டத்தை யார் மீறினாலும் அவர்களைச் சிங்கக் குகையில் போட வேண்டும்” என்று தூபம் போட்டார்கள். அவர்கள் கூறுவது முட்டாள்தனமானது என்பதை அறிந்திருந்தும் புகழ்போதை அவன் கண்களை மறைத்ததால் அவர்களது யோசனையை அங்கீகரித்து அதையே சட்டமாக்கினான். நாடு முழுவதும் அரசனே கடவுள் என்று அறிவிக்கப்பட்டது.

சிங்கத்தின் வாய்கள் கட்டப்பட்டன

தானியேல் புதிய சட்டத்தைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். எப்போதும்போல் கடவுளை நோக்கி தன் கரங்களை உயர்த்தி தனது காலைநேரப் பிரார்த்தனையில் தானியேல் ஈடுபட்டிருந்தார். அப்போது கதவைச் சடாரென்று திறந்துகொண்டு உள்ளே நுழைந்த பொறாமைக்காரர், அவர்மேல் குற்றம் சாட்டி அரசன் முன்னால் நிறுத்தினார்கள். “அரசே இந்த தானியேல் உங்கள் சட்டத்தை மதிக்கவில்லை. அவர் தன்னுடைய கடவுளிடம் தினமும் மூன்று முறை பிரார்த்தனை  செய்கிறார்” என்று கத்தினார்கள்.

அரசன் தரியு இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்தான். அன்று மாலைவரை தானியேலைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தான். ஆனால், அரசன் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டு அமல்படுத்திவிட்டால் அவனால் கூட அதை மாற்ற முடியாதே. வேறு வழியில்லாமல், கொடும்பசியுடன் காத்திருக்கும் சிங்கங்கள் விடப்பட்டு வழிகள் அடைக்கப்பட்ட குகைக்குள் தானியேலைத் தூக்கிப்போடும்படி உத்தரவிட்டான்.

ஆனால் அன்று இரவு அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. ஒரு தீர்க்கதரிசியை, சிறந்த நிர்வாகியை, பாபிலோனின் அமைதியான வாழ்வு உருவாக பல திட்டங்கள் தீட்டித்தந்தவரை கொடும் சாவுக்கு இரையாக்கிவிட்டோமென்று  புலம்பினான். தனது படுக்கை அறையில் விடிய விடிய நடந்துகொண்டே இருந்த தரியு விடிந்ததும் வேகமாக சிங்கக் குகைக்கு ஓடினான்.

அதன் வாயிலில் நின்று வருத்தமான குரலில் “தானியேலே, உன் கடவுள் உன்னைக் காப்பாற்றினாரா?” என்று கேட்டான். குகைக்குள் இருந்து தானியேலின் குரல் கேட்டது. “ ஆமாம்! பரலோகத் தந்தை இந்தச் சிங்கங்களின் வாயை அடைத்துவிட்டார். அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை” என்று பதில் கூறினார்.

தரியு மகிழ்ந்து, வியந்துபோனான். தானியேலைச் சிங்கக் குகையிலிருந்து தூக்கிவிடும்படி உத்தரவு போட்டான். அவர் உடலில் சின்னக் கீறல்கூட இல்லை. அவரைக் கண்ட அரசன், “தானியேல் மீது பழி போட்டவர்களை என் கண் முன்பாக இந்தக் குகைக்குள் போடுங்கள்” என்று கட்டளையிட்டான். 

பொறாமைக்காரர்களை குகைக்குள் போட்டபோது, சிங்கங்கள் அவர்களைக் கொன்று தின்று தீர்த்தன. தரியு அத்துடன் நின்றுவிடவில்லை. தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் புதிய கட்டளையைப் போட்டான்: “தானியேலின் கடவுளுக்கு எல்லாரும் பயப்பட வேண்டும். நான் உட்பட. அவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார். அவரே கடவுள், நானல்ல” என்றான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x