Published : 31 Jan 2019 11:04 AM
Last Updated : 31 Jan 2019 11:04 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 65: பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளம்குன்றிக் கால் (குறள் 14)

-என்று வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் ஒரு குறள். புயல் என்னும் பெருங்காற்றால் கொண்டு வரப்படும் கொடையாகிய மழை குன்றிப் போகுமானால், உழவர் ஏர் பூட்டி உழுதல் என்னும் தொழிலைச் செய்ய மாட்டார்கள் என்று பொருள்.

இதற்கு மெய்ப்பொருள் உரை எழுதும் பெருஞ்சித்திரனார், உழவர் என்ற சொல்லை விளக்கப்புகும்போது சில சொல்கிறார்: ‘உழு’ என்ற வேரின் அடிப்படையில் தோன்றிய சொற்களே உழவு, உழவர் ஆகியன; ‘உழு’ என்ற வேர்ச்சொல்லின் அடியாகவே ‘உழை’ என்னும் சொல் தோன்றுகிறது; உழுதலில் இருந்து வந்ததுதான் உழைப்பு.

அது மட்டுமல்லாது, தமிழில் உழைப்புத் தொடர்பான அனைத்துச் சொற்களும் உழவுத் தொடர்பான சொற்களே என்றும் காட்டுகிறார்: ‘தொள்’ என்றால் தொடுதல். தொடுதல் என்றால் தோண்டுதல், துளைத்தல். தொள்ளுவது தொழில்.

‘செய்’ என்றால் வயல். நன்செய், புன்செய் என்பதில்லையா? வயலைப் பண்படுத்திச் செய்வது செயல், செய்கை. ‘பள்’ என்றால் பள்ளம். விதைப்பதற்காகப் பள்ளம் பறித்துப் பள்ளுவது பண்ணல். பண்ணுதல் பணி. பண்ணப்படுவது பண்ணை.

உழவு என்னும் கல்விதான்

தேவநேயப் பாவாணர் தன்னுடைய ஒப்பியன் மொழிநூலில் ஒன்று சொல்கிறார்: ‘கல்’ என்றால் தோண்டுதல். ‘வேரோடு கல்லி எறிதல்’ என்னும் வழக்கை நோக்குக. கல்லுவது கல்வி, கலை. கல்வி என்னும் சொல் தோண்டுதல் என்னும் பொருளில் முதலில் உழவையே குறித்தது. பின்னாளில் நூல் கற்கும் கல்விக்குச் சிறப்புப் பெயர் ஆயிற்று. மனிதன் முதன்முதலில் கற்றுக்கொண்ட கல்வி தோண்டுவதும் விதைப்பதும் விளைப்பதுமான உழவு எனும் கல்விதான் என்பது பாவாணர் கருத்து.

உழவு என்பது மண்ணைத் தோண்டிப் பயிர் செய்வது மட்டு மன்று; தன்னைத் தோண்டி உயிர் செய்வதும் தான். உழவு என்பது நிலத்தில் நிகழ்வது மட்டுமன்று; உடலில் நிகழ்வதும்தான். உழவு என்பது பூதங்களைக் கலந்து புரட்டிப் புதியது செய்வது. பூதங்கள் மொத்தம் ஐந்து:

நிலம்,தீ, நீர்,வளி, விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்...

(தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 91)

நிலம், தீ, நீர், வளி என்னும் காற்று, விசும்பு என்னும் ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து, புரண்டு, மயங்கிச் செய்ததே இந்த உலகம் என்று உலகத்தின் தோற்றத்தைத் தொல்காப்பியம் சொல்ல, பூதங்களின் இயைபு சொல்லும் புறநானூறு.

மண் திணிந்த நிலனும்,

நிலன் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும் என்றுஆங்கு

ஐம்பெரும் பூதத்து

இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும்

சூழ்ச்சியது அகலமும்

வலியும் தெறலும்

அளியும் உடையோய்...            (புறம். 2)

-என்று பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் சேர அரசனைப் போற்றும் பாடல். இரு தரப்பினர்க்கிடையில் போர் நடக்கும்போது, தான் ஒரு தரப்பெடுத்துப் போரில் முனைந்து இறங்காது நடுநிலை நின்று, இரு தரப்பாகப் போர் செய்யும் படை வீரர்களுக்குச் சோறு போட்டவன் என்பதால் பெருஞ்சோற்று உதியன்.

அவனை வாழ்த்தும் முரஞ்சியூர் முடிநாகராயர், அவனை ஐம்பெரும் பூதங்களோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்: மண் துகள்கள் செறிந்து கிடக்கிறது நிலம்; நிலம் தங்க இடம் கொடுத்தும் நிலத்தின் இடைவெளிகளில் விரவியும் இருக்கிறது ஆகாயம்; ஆகாயத்தின் ஊடாக வருடிக்கொண்டு வருகிறது காற்று; காற்று விசிறக் கிளர்ந்தெழுகிறது தீ; தீக்கு எதிராகத் திமிறி நிற்கிறது நீர்—என்று இவ்வாறு ஐம்பெரும்பூதங்களால் செய்யப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது இயற்கை.

ஐம்பெரும்பூதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இயல்புண்டு. மண்ணின் இயல்பு பொறுத்துக் கொள்ளல்; ஆகாயத்தின் இயல்பு விரிந்து நிற்றல்; காற்றின் இயல்பு வலிமையோடு இருத்தல்; தீயின் இயல்பு எரித்து அழித்தல்; நீரின் இயல்பு குளிர்ந்து அருளல். அவற்றைப்போலவே இருக்கிறாயே பெருஞ்சோற்று உதியா! நிலத்தைப்போல நீ உன்னை இகழ்வாரைப் பொறுக்கிறாய். ஆகாயத்தைப்போல நீ செய்ய வேண்டியதை அகலமாகவும் விரிவாகவும் யோசித்துச் செய்கிறாய்.

காற்றைப்போல நீ உடம்பினாலும், உள்ளத்தாலும் உறுதியாகவும் வலிவாகவும் இருக்கிறாய். தீயைப்போல நீ அழிக்க வேண்டுவனவற்றைக் குஞ்சென்றும் மூப்பென்றும் பாராமல் வீறுகொண்டு அழிக்கிறாய். நீரைப்போல நீ வாரிக் குடிக்க விரும்புகிறவர்களுக்கு இன்னார் இனியார் என்று பாராமல் உன்னையே அளிக்கிறாய் என்று பெருஞ்சோற்று உதியனை ஐம்பூதனாகவே ஆக்குகிறார் புலவர்.

உடம்பை நாடுங்கள்

‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்’ என்று தமிழ்ச் சித்தர் மரபில் ஒரு வழக்கு. ஐம்பெரும் பூதங்களால் ஆனது உலகமாகிய அண்டம். அதே ஐம்பெரும் பூதங்களால் ஆனதுதான் உடம்பாகிய பிண்டமும். எனவே அண்டத்தில் தேடுவதற்குப் பதிலாகப் பிண்டத்திலேயே தேடலாம் என்பது குறிப்பு. எனவே உடம்பில் தேடுக என்றால், உடம்பை அழுக்கு என்று தள்ளிவிடுகிறார்கள். இதைக் கண்டனம் செய்கிறார் திருமூலர்:

மலம்என்று உடம்பை மதியாத ஊமர்,

தலம்என்று வேறு தரித்தமை கண்டீர்;

நலம்என்று இதனையே நாடி இருக்கில்,

பலம்உள்ள காயத்தில் பற்றும் இவ் அண்டத்தே. (திருமந்.2137)

உடம்பு அழுக்கு என்று அதை மதிக்காமல் திரிகிறார்கள். தலம் என்று சொல்லிக்கொண்டு இறைவனை வேறு எங்கெங்கோ தேடித் திரிகிறார்கள். இறைவனைக் கண்டடைய இந்த உடம்பே சிறந்தது என்பதை அறிந்துகொண்டு, உடம்பை வலுச்செய்து உடம்பையே நாடி இருப்பார்களானால், அண்டத்தே உள்ளதைப் பிண்டத்தே பற்றலாம்.

அண்டத்தின் உள்ளே அளப்புஅரிது ஆனவள்,

பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்,

குண்டத்தின் உள்ளே குணம்பல காணினும்

கண்டத்தின் உள்ளே கலப்புஅறி யார்களே. (திருமந். 1362)

அண்டத்தை நிரப்பிக்கொண்டு, அளக்கமுடியாதபடி விரிந்து கிடக்கும் ஆற்றலாகிய சத்தி, பிண்டத்தையும் நிரப்பி விரிந்து கிடக்கிறாள். சிலர் மந்திரம் சொல்லி, வேள்விக் குண்டத்தில் ஆகுதியிட்டு ஆற்றல் வேண்டுகிறார்கள். உடம்புக்குள் கலந்து நிற்பதை எதற்காக வெளியில் தேட வேண்டும்?

அண்டத்தில் உழலாம் என்றால் பிண்டத்திலும் உழலாம். அண்டத்தில் உழுதால் என்ன நிகழ்கிறது?  ‘ஆதித் தமிழர் மெய்யியல்’ என்னும் கட்டுரையில் ஆதி. சங்கரன் சொல்கிறார்: ஆகாயப் பூதத்தால் தாங்கப்படும் நிலப் பூதம் உழப்படும்போது, மண் புரட்டப்படுகிறது; மலர்ந்து விரிந்து கிடக்கும் மண்ணோடு நீர்ப் பூதமும், கதிரவனின் ஒளிச்சூடு என்னும் தீப் பூதமும் சேர்க்கப்படுகின்றன; நிலப் பூதத்தின் கண்ணறைகளில் காற்றுப் பூதமும் சேமிக்கப்படுகிறது; இவ்வாறு சேமிக்கப்பட்ட காற்று பயிர் வளர்க்க வழங்கப்படுகிறது.

அண்ட உழவில் நிகழ்வதே பிண்ட உழவிலும் நிகழ்கிறது. பிண்டம் உழப்படும்போது, நிலப் பூதத்தால் ஆன தசை புரட்டப்படுகிறது; நீர்ப் பூதத்தால் ஆன குருதியும் பிறவும் முறையாகச் செலுத்தப்படுகின்றன; தீப் பூதத்தால் ஆன உடற்சூடு தூண்டப்படுகிறது; உடம்பின் கண்ணறைகளில் காற்றுப் பூதம் சேமிக்கப்படுகிறது; இவ்வாறு சேமிக்கப்பட்ட காற்று உயிர் வளர்க்க வழங்கப்படுகிறது.

உடம்பைச் சோற்றாலடித்த பிண்டம் என்பார்கள்; அது காற்றாலடித்த பிண்டமும்தான். அண்ட உழவானாலும் சரி, பிண்ட உழவானாலும் சரி, அதற்குக் காற்று  ஓர் இன்றியமையாத ஆதாரம். காற்றின் கொடை குன்றிவிட்டால் உழுது பயனில்லை.

(உள்ளே தேடுவோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x