Last Updated : 18 Sep, 2014 01:23 PM

 

Published : 18 Sep 2014 01:23 PM
Last Updated : 18 Sep 2014 01:23 PM

ஆண்டவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு

பரலோக ராஜ்ஜியம். பல்வேறு மக்களும் கூடியிருக்கிறார்கள். அவர்களுக்கான வரங்களையும் தண்டனைகளையும் முடிவு செய்ய வேண்டிய நேரம். தேவ குமாரன் அந்த மக்களில் சிலரைத் தனது வலது புறம் நிற்கும்படி சொன்னார். மற்றவர்களை இடது புறம் நிற்கும்படி சொன்னார்.

வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காகவே தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் ராஜ்யத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் செய்த நல்ல காரியம் என்ன என்பதையும் அவர் விளக்கினார் இயேசு பிரான். தான் கஷ்டத்தில் இருந்தபோது உதவி செய்தவர்கள் நீங்கள் என்றார்.

“பசியாக இருந்தபோது உணவு கொடுத்தீர்கள். தாகமாக இருந்தபோது தண்ணீர் கொடுத்தீர்கள். ஆதரவற்ற அந்நியனாக இருந்தபோது என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். உடை இல்லாமல் தவித்தபோது உடை கொடுத்தீர்கள்.

படுத்த படுக்கையாக இருந்தபோது என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலில் வைக்கப்பட்டிருந்தபோது என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்றார் இயேசு.

சொர்க்கத்துக்கு வழிகாட்டப்பட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டவர் எப்போது பசியாகத் தம்மிடம் வந்தார்? எப்போது தகத்தோடு தம்மிடம் வந்தார்? அவர் எப்போது ஆதரவற்றவராக இருந்தார்? நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்தது எப்போது என்னும் கேள்விகள் அவர்கள் மனங்களில் எழுந்தன. அந்தச் சமயத்தில் நாங்கள் அவருக்கு உதவிசெய்ததாக நினைவில்லையே என்று குழம்பினார்கள்.

“ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எனக்கே செய்த உதவிகள். அவர்களுக்குச் செய்ததன் மூலம் நீங்கள் எனக்குத்தான் உதவி செய்தீர்கள்” என்றார் இயேசு கிறிஸ்து. பிறகு அவர் தன் இடது பக்கம் நிற்பவர்களைப் பார்த்து, “நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நெருப்பில் போய் விழுங்கள்” என்றார்.

அவர்கள் தலை குனிந்து நின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள்.

“நான் பசியாக இருந்தபோது எனக்கு உணவு அளிக்க மறுத்தீர்கள். தாகமாக இருந்தபோது தண்ணீர் தரவில்லை. ஆதரவற்ற அந்நியனாக இருந்தபோது என்னைச் சேர்ஹ்ட்துக்கொள்ளவில்லை” என்றார் இயேசு.

அவர்களுக்குப் புரியவில்லை. “நீங்கள் எப்போது கஷ்டத்தில் சிக்கி எங்களிடம் வந்தீர்கள்? அப்படி வந்திருந்தால் நாங்கள் உங்களுக்கு எப்படி மறுத்திருப்போம்? நீங்கள் நோயில் விழுந்திருந்தால் நாங்கள் பாராமுகமாக இருந்திருப்போமா?” என்று கேட்டார்கள்.

“எளிய மனிதர்கள் பலர் தங்களுக்குக் கஷ்டம் நேர்ந்தபோது உங்களை நாடி வந்து உதவி கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை நீங்கள் உதாசீனம் செய்தீர்கள். அவர்களுக்கு மறுத்தது எனக்கு மறுத்ததுபோலத்தான். நீங்கள் உதாசீனம் செய்தது அந்த ஏழைகளை அல்ல. என்னைத்தான்” என்றார்.

நம் ஒவ்வொருவர் முன்னாலும் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் வருகிறார். ஏழைகள் வடிவில். நோயாளிகள் வடிவில். ஆதரவற்றவர்கள் வடிவில்.

அவர்களுக்கு நாம் செய்யும் உதவி இறைவனுக்குச் செய்யும் உதவி. அவர்கள் வடிவில் இறைவனைக் கண்டு, அவர்களுக்கு உதவுவதன் மூலம் இறைவனுக்கு உதவிசெய்யலாம்.

இந்த உதவிதான் இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவதற்கு நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு. மிக எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பும்கூட.

(ஆதாரம்: மத்தேயு25:31-46)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x